Friday, July 1, 2011

வர்க்கீஸ் - திரைக்கதை


வர்க்கீஸ் - ஆராய்ச்சி மாணவன் - நாசமாய்ப் போன காதலில் வீழ்கிறான்- பணம், பதவி, புகழ் இல்லாத சாதனையாளர் ஒருவனையே காதலிப்பேன் என்கிறார் காதலி - துடித்துப் போகிறான் வர்க்கீஸ் - இந்திய தேசம் முழுவதுமுள்ள ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு உதவியுடன் தொண்டு நிறுவனம் போட்டி ஒன்றை அறிவிக்கிறது.

இந்தியாவில் பரவும் தீவிரவாதத்தின் வேர் எது? ஒரு வருடத்தில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்- பரிசு பெற்ற அறிக்கைக்கு ரூ.10 இலட்சமும், அறிக்கை பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் தேசம் முழுவதும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கெடுக்கின்றார்கள். இணையதளம் பத்திரிக்கை… பதிவுகளின் படி ஆயிரமாயிரம் மாணவர்கள் பங்கெடுக்கிறார்கள். காதலியால் புறக்கணிக்கப்பட்ட விரக்தியில் வர்க்கீஸ் போட்டியில் பங்கெடுக்கிறான். பல்கலைக்கழக வளாகத்தைக் கடந்து ஒரு தீவிரவாதக் குழுவில் இணைகிறான். ஓராண்டிற்குள் நேரடி ஆய்வில் அறிக்கையை தயாரிக்கிறான்.

தீவிரவாதிகள் உளவாளி என்று வர்க்கீஸை கொலை செய்தனரா? பயங்கரவாத தடுப்புப் படைப் பிரிவின் குண்டடி பட்டு வா;க்கீஸ் செத்தானா? இல்லை ஒரு வருடத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து காதலியைக் கரம் பிடித்தானா? ஒருவேளை இக்கதை திரைப்படமானால் வெண்திரையில் சந்திப்போம்.

இது காபி ரைட் சட்டபடி பதிவு செய்யப்பட்ட என்னுடைய திரைக்கதை .

கண்ணீர் அஞ்சலி!


மூத்தவழக்கறிஞர் சங்கர சுப்புவின் குமாரர் சதீஷ்குமார் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். பழங்குடி மக்களுக்கு எதிராக அரசின் அடக்கு முறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்களுக்காய் வழக்காடி வருபவர் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு. கலாநிதி மாறனின் தயாரிப்பில் இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் வெளி வந்த “எந்திரன்” படத்தின் மூலக்கதை சம்பந்தமாக சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில் வழக்கறிஞர் ஒருவருக்காக இலவசமாய் வாதாடி, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஈரோடு - பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பு சதீஸ்குமார் கொலையைக் கண்டித்து ஒருநாள் நீதிமன்றப் புறக்கணிப்பையும் தொடர் போராட்டங்களையும் அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுரைக் கிளை வழக்கறிஞர்களும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்துடன் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்துத் தண்டிக்கக் குரல் கொடுத்துள்ளனர். குற்றவாளிகள் எந்தக் கொம்பனாக இருந்தாலும் பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் தண்டனை பெற்றே ஆக வேண்டும்

வழக்கறிஞர் சதீஸ்குமாருக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறோம்.

அவன் - இவன் (திரைப்பட விமர்சனம்)


சில திரைப்படங்களின் முடிவு (Result) தெரியாமல் அமர்ந்து விட்டு பணத்தை இழந்ததோடு படம் பார்க்கப் புறப்படுவதற்கு முன்னிருந்த சிறு நிம்மதியையும் தொலைத்து விட்டு புலம்புவோம். இயக்குநர்கள் பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, பாலசந்தர், மணிரத்தினம், அகத்தியன், உதயகுமார், ராஜசேகர், விஜய், சீமான், அமீர் பேராண்மை இயக்குநர் ...என்று நீளும் தரமான திரைப்பட இயக்குநர்கள் பட்டியலில் இயக்குநர் பாலாவுக்கு என்று நிரந்தர இடம் உண்டு என்பதால் இயக்குநர் பாலா திரைப்படத்தினை துணிவுடன் சென்று பார்க்கலாம் என்பதால் படம் வெளிவந்த நாளில் மூன்றாவது ஆட்டம் திரைப்படம் பார்த்தேன்.

வாழ்க்கையில் வாழ்நாளில் பாவம் செய்பவர்கள் பாவத்தைக் கழிக்க காசிக்கோ, பாபநாசத்திற்கோ, ராமேசுவரத்திற்கோ செல்லத் தேவையில்லை. இயக்குநர் பாலாவின் திரைப்படத்தில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் அவர்களது பாவம் தொலைந்து விடும்.

அவன்-இவன் திரைப்படம் பற்றிய எனது கருத்து:

“கதாபாத்திரங்கள் ஒவ்வொரு வரும் உயிர்ப்புடன் திரையரங்கில் உலாவுகிறார்கள். அப்படியென்றால் கதை? நாகரீக சமூகம் பார்க்க மறுக்கும் கலாச்சாரத்தை தொலைத்த மனிதர்களின் வாழ்வு பற்றிய ஓர் ஆவணப் படம்... இந்திய அரசும் ரா உளவுப் பிரிவும் இலங்கைப் பிரச்சனையில் எவ்வளவு மடையர்களாக நடந்தார்கள் என்கிற உண்மையைப் போகிற போக்கில் ஒரு நொடியில் ஒரே வசனத்தில் பதிவு செய்துள்ளார். அரங்கு முழுக்கக் கைத்தட்டல். (இதர தமிழ் இயக்குநர்கள் தங்களது திரைப்படங்களில் ஈழத் தமிழர் பிரச்சனையை தொட வேண்டுமென்று (மணிரத்தினம் போலில்லாமல்) கோடு போட்டு காட்டியுள்ளார். எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரானின் “ஒரு கடலோர கிராமத்தின் கதை” போல சென்று கொண்டிருந்த நாவலில் ஏன் வில்லன் நுழைந்தான். விசாலின் மாறு கண்ணுக்கும் கதைக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? பெரியவரை சீன ஜிம்னாஸ்டிக் கலைஞர் போல கொடுமை செய்ய வேண்டுமா? என்று பல கேள்விகள் படம் முடிந்த பின் நம் மனதில் தோன்றினாலும் விஷால், அம்பிகா, ஆர்யா… மற்றும் சூர்யா உள்ளிட்ட கலைஞர்களை பயன்படுத்திய விதம்... நம் மனதில் இயக்குநர் பாலாவுக்கு 100-க்கு 90 மதிப்பெண் போடச் சொல்கிறது... ஆனால் கதை, திரைக்தை மற்றும் பட உருவாக்கத்துக்கு நாம் மதிப்பெண் தர வேண்டுமென்றால் நாற்பதுக்கு மேல் தர இயலாது... ஆடு, கோழிகளை சுவைக்கும் மனிதருக்கு ஏன் அடிமாட்டு பசுக்கள் மீது நேசம் வருகிறது? ஊடக இந்துத்துவா... முகம் திரைப்படத்தில் ஊடுருவுகிறது. எது எப்படி இருந்த போதும் கடும் உழைப்பு திரைப்பட உருவாக்கத்தில் இருக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் - 2011 ஓர் ஆய்வு



2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 முடிவடைந்து மே-13 வரையான ஒருமாத கால இடைவெளியின் போது வெளியான ஆரூடங்கள், களப்பணி ஆய்வுகள், பத்திரிக்கை துறையின் கள ஆய்வு விபரங்கள் அனைத்தும் தமிழக வாக்காளர்களின் இதயத் துடிப்பினை அதிகரித்த வண்ணம் இருந்தது. மே.13 2011 காலை 7.55 மணிக்கு ஒட்டு மொத்த தமிழகத்தின் காதுகளும் முடிவுக்காக காத்திருந்த போது ஓர்; மயான அமைதிக்குள்ளிருந்து மெல்லிய ஆரவார முனகல்கள் தமிழகம் முழுவதிலுருந்து எழ, ஆளுங்கட்சி கூட்டணியும், எதிர்க்கட்சி கூட்டணியும் பத்திரிக்கைகளும் வாக்காளர்களும் எதிர்பார்க்காதபடி தமிழக அரசியல் முடிச்சு அவிழத் தொடங்கியது.

கிராமத்தில் வழங்கும் ஒரு சொலவடையை நினைவு படுத்தியது. தேர்தல் முடிவு “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” ஆளும் திமுக கூட்டணியின் தொடர் இடைத் தேர்தல் வெற்றியும் பலம் வாய்ந்த கூட்டணிக் கட்சிகளின் சக்தி, எதிரணியை மிரளச் செய்யும் பொருளாதார, அடியாள் பலம் பிரச்சாரத்தை கடைக்கோடி வரை எடுத்து செல்லும் ஊடக பலம், தேர்தல் கமிசனின் இடுக்கு பிடியையும் மீறி செயல்பட துணிந்த அதிகார பலம் அனைத்தும் தமிழக மக்களிடம் தோற்று போனது. கூட்டணி கட்சிகளின் சதவீத வாக்கு வங்கி, சகதிக்குள் சிக்கி சிறையுண்டது. ஆளும் கூட்டணி அடித்த புயலில் சிக்கியது எப்படி? எங்கிருந்து புயல் அடிக்க துவங்கியது? அகோரமாக வீசிய புயலில் உடைமைகளை இழந்த போதும் கூட குறைந்த பட்சம் கட்டியிருந்த வேட்டியைக் கூட காப்பாற்ற இயலாமல் போனது ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

அப்படியென்றால் தமிழகம் பகுத்தறிவுப் பாதையிலிருந்து விலகத் துவங்கி விட்டதா? ஆரிய மாயைக்குள் திராவிடம் சிக்கிக் கொண்டதா? விடை வேண்டும் என்றால் தமிழ்த் திரைப்படங்களில் வரும் ப்ளாஷ்பேக் போல ஐந்து வருடம் பின்னோக்கி வாருங்கள்…

2006-தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.ஐ.(எம்), பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் ஓர் அணியிலும் அ.தி.மு.க., ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் ஓர் அணியாகவும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனியே ஓர் அணியாகவும் மோதி, தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எதிர்க்கட்சி வரிசையில் வலிமையுடன் அ.தி.மு.க அணியும் தேர்தல் வாக்கு விகிதத்தில் நெஞ்சை நிமிர்த்தும் அளவு.. தே.மு.தி.கவும் தேர்ச்சி பெற்றது. 2009 பாராளுமன்றத் தேர்தலின் போது கூட கூட்டணி மாற்றம் நிகழ்ந்தும் தி.மு.க, காங்கிரஸ், வி.சி. அணியே பெரும்பான்மையினை தட்டி சென்றது. 2011 சட்டமன்றத் தேர்தலில் பலமான கூட்டணியுடன் களமிறங்கிய தி.மு.க அணி பாராளுமன்றத் தேர்தல் வெற்றியில் கால் பகுதி கூட சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற இயலாமல் போனது ஏன்? அப்படியென்றால் வீசியது அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் அலையா? தி.மு.க. கூட்டணிக்கு எதிரான பேரலையா? அரசியலை ஆத்மாவாக நேசிப்பவர்கள் முட்டை முந்தியதா? கோழி முந்தியதா? என்ற கேள்வியின் போது எழும் வினாவோடு தொடர்புடையது இந்த கேள்வி? என்றே புரிந்து கொள்வர். அ.தி.மு.க. எதிர்ப்பு அலையை அறுவடை செய்வது தி.மு.க. என்றால் தி.மு.க. எதிர்ப்பு அலையை அறுவடை செய்வது அ.தி.மு.க.வாக இருந்து வந்துள்ளது.



அ.தி.மு.கவின் நிலைப்பாடு

1. ஈழமக்களின் விடுதலை வீரன் பிரபாகரனை பிடித்து வர சட்டசபையில் தீர்மானம் இயற்றியது
2. குறைந்தபட்ச விலைவாசி உயர்வு?
3. வேலை நியமனத் தடை சட்டம் அரசு ஊழியருக்கு எதிரான பார்வை
4. கட்சிக்காரர்களைக் கவனிக்காத போக்கு
5. நீதித்துறையுடன் சிறியளவு மோதல்
6. மாற்றுக் கட்சியிலிருந்து காசைக் காட்டி ஆள் சேர்க்காமல் விட்டது
7. மின்தடையினை அமுல் செய்யாதது
8. மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தாதது
9. கட்சிக்காரர்களை அடக்கி வைத்தது?
10. கட்சிக்காரர்கள் ஊரை ஏப்பம் விடாமல் பாதுகாத்தது
11. தலைமை ஆரம்பத்தில் திரைப்பட நட்சத்திரங்களுடன் சிறிது உரசலைக் கடை பிடித்தது
12. காவல்துறைக்கு கடிவாளமிடாமல் தன் கட்சிக்காரர்களைக் கூட காவல்துறையினரிடமிருந்து பாதுகாக்க முடியாமல் இருந்தது.
13. மன்னார்குடி உள்ளிட்ட கட்சி ஆதிக்க பிரமுகர்கள் கட்சியை ஆட்டிப் படைத்த போதும் கட்சியை விழுங்காமல் காப்பாற்றியது
14. ஸ்பெக்ட்ரம் போன்ற இமாலய ஊழல்களில் சிக்காமை
15. ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது கவலைப்படாமல் முகத்தைத் திருப்பி கொண்டது
16. ஈழ ஆதரவு பேச்சுக்காக சீமான், அமீர் போன்றவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியது?
17. ஈழ ஆதரவு தமிழ் தேசிய ஆதரவு வாக்கு வங்கியைக் கொண்டிருந்த வை.கோவை உடன் வைத்து கொண்டது. பின் கடைசியில் கழற்றி விட்டது.
18 பத்திரிக்கை ஊடகங்களை கவனிக்காத போதும் விளம்பரங்களைத் தந்து தாசா செய்யாத போக்கு
19. அடுத்தவர்களை மதிக்காத போக்கு இருந்த போதும் எவர் வாழ்வு மீதும் கை வைக்காத கண்ணியப் போக்கு (செரீனா வழக்கு உள்ளிட்ட சில விதிவிலக்குகள்)
20. சட்டம், மருத்துவம், வியாபாரம் திரைப்படம் உள்ளிட்ட துறைகளை மதிக்காத போக்கு
21. வீரப்பன் போன்ற தமிழ் உணர்வாளர்கள் மீது (சட்டம் ஒழுங்கு) சார்பாக கடும் நடவடிக்கை எடுத்தது.
22. சட்டம் ஒழுங்கோடு தொடர்புடைய குற்றவாளிகள் வளராத வண்ணம் காவல்துறை உளவுப்பிரிவை உருவாக்கியது
23. கறுப்புப் பணங்கள் ரியல் எஸ்ட்டேட் தொழிலில் நுழையா வண்ணம் நிலங்களின் மதிப்பைக் காப்பாற்றியது.
24. தமிழர்களின் தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளின் போது மத்திய அரசுடன் துணிந்து மோதியது.
25. திரைப்படத்துறையைப் பாதுகாக்க வில்லை என்ற போதும் பலவீனப்படுத்தாமல் விட்டது.
26. கட்சிக்காரர்கள் மக்கள் சேவகர்களாக இல்லாத போதும் மக்களை மிரட்டாத போக்கு
27. வியாபாரிகள் தொழில் முனைவோருக்கு பாதிப்பில்லாத போக்கு
28. கூட்டணிக் கட்சிகள் பலமாக இல்லாத போதும் மக்களிடம் அதிருப்தி பெறாதவர்களாக வலம் வந்தது.
29. கட்டுக்கோப்பான பிரச்சாரப் பணிகள் இல்லாமல் பிசுபிசுத்த போதும் மக்களின் அமோக ஆதரவு
30. ஆட்சியைப் பயன்படுத்தி புதிய தொழில்களைக் கைப்பற்றாமல் விட்டது.
31. மன்னர் ஆட்சிபோல ஒருவரின் கீழ் ஆட்சியதிகாரம்
32. காவல்துறையைக் குடும்பப் பாதுகாப்புக்கு பயன்படுத்தாத போக்கு




தி.மு.க.வின் நிலைப்பாடு

1. ஈழப் போரில் சீனா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளோடு இந்தியாவின் நேரடி பாதுகாப்பில் இந்திய அரசு நடத்திய போரில் குறைந்தது 50,000 ஈழத் தமிழர்கள் படுகொலை செய்ய காரணமாணவர்களோடு கரம் கோர்த்தது.
2. கடும் விலையேற்றம்
3.வேலைக்கு ஆள் சேர்த்ததுடன் கறாரான வசூல் வேட்டை
4. கட்சிக்காரர்களின் அடாவடி, அதிரடி வசூல், வெட்டு, குத்து... போன்றவற்றைக் கண்டு கொள்ளாமல் விட்டது.
5. நீதிபதிகள் வக்கீல் கோர்ட் ஊழியர்கள் பொதுமக்கள் மீது ஒரு அரசே ரௌடியாக மாறித் தாக்கியது.
6. அனைத்துக் கட்சியிலிருந்தும் சூட்கேஸைக் காட்டியும், மிரட்டியும் ஆள் சேர்த்தது
7.மின்தடையின் விபரங்களை சாதாரண மக்களிடம் சொல்லி சமாதானம் செய்யாதது
8. மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தியதால் தேர்தலில் வேட்டியை மட்டும் இழந்தது... இல்லை என்றால்?
9. கையில் அருவாளுடன் திராவிடச் சிந்தனையாளர்கள் மக்களை அடக்கி வைத்தது.
10. கட்சிக்காரர்கள் அடித்த சொத்தைக் கணக்கிட வேண்டுமென்றால் கம்ப்யூட்டருக்கும் காய்ச்சல் வந்து விடும்.
11. திரைப்படத் துறையையே தனது காலடியில் கொசுவாக மிதித்தது.
12. காவல்துறையினரை அடியாளாகவும், அடிமையாகவும் நடத்தியதுடன், பணி மூப்பு என்ற பெயரில் காவலர்களிடம் சமரசம் செய்து தப்பிக்க முயற்சி செய்தது.
13. குடும்பங்கள் கட்சியை விழுங்க அனுமதித்ததுடன் குடும்ப உறுப்பினர்களுக்குள் கொலை வெறி தாண்டவமாட அனுமதித்தது.
14. ஸ்பெக்ட்ரம் போன்ற இமாலய ஊழல்களில் சிக்கிய பின்னும் பரிகாரமாக ஓட்டுக்கு ரூ.5000/- வழங்காமல் கேவலம் ரூ.200/- வழங்கி வாக்காளர்களைக் கேவலப் படுத்தியது.
15.முள்ளி வாய்க்கால் கொடுமையைக் கூட மூடி மறைத்தது. தமிழ்ச்செல்வன் மரணக் கவிதை போல ஓர் இரங்கல் கவிதை கூட எழுத முடியாத தமிழின துரோக நடவடிக்கை
16. இதுதான் சாக்கென்று எதிரி மீது பழி போட்டு தமிழின எதிரி காங்கிரஸை தாசா செய்ய தமிழின ஆதரவாளர்களைக் கைது செய்தது
17. நாஞ்சில் சம்பத் கைது, சீமான் கைது, ம.தி.மு.க கட்சியை உடைத்தது என்று தமிழ் தேசிய ஆதரவு வாக்குகளை அணி சேர்க்க இயலாமல் “வரிப்புலியே வா” என்று கடைசியில் கவிதை எழுதி ஒப்பாரி வைத்தது.
18. விளம்பரங்களை அள்ளி தந்து பத்திரிக்கைகளை குளிப்பாட்டி பின் தேர்தல் நேரத்தில் குடி முழுகியது.
19. விழாக்கள், கேடயங்கள், பட்டயங்கள் வழங்கி ஊக்குவித்த போதும் பட்டயம் பெற்றவர் கூட பயமில்லாமல் வாழ முடியாதபடி கொந்தளிப்பான சமூகத்தினை பாதுகாத்தது.
20. மேற்படி துறைகளைத் தூக்கிப் போட்டு காலில் மிதிக்கும் போக்கு
21. சட்டம் ஒழுங்கினையே நெஞ்சுக்கு அநீதியாக்கியது
22. புதிய குற்றவாளிகளை பற்றிய எவ்வித அறிவுமற்ற உளவுப் பிரிவைக் கையில் வைத்தது
23. கறுப்புப் பண அருவி கொட்டியதில் 5 வருட காலங்களில் நிலங்களின் விலை 100% தாண்டியது.
24. கட்சிக்குத் தேவையான பதவிக்காக மட்டும் மோதல் மற்ற விசயங்களில் பெட்டிப் பாம்பாய் அடங்கியது.
25. ஆக்டோபஸ் கரங்களைப் போல குடும்ப உறுப்பினர்கள் திரைப்படத் துறையை விழுங்க முயன்றது.
26. மீசை முறுக்கி மாதவனாகவும், அடிதடி ஆறுமுகங்களாக மக்களிடம் இருந்து அந்நியப்பட்டது.
27. பத்திரம் பதிந்தால் கூட கறுப்பு ஆடுகளுக்கு கப்பம் கட்டிய கொடுமை.
28. கொடி கட்டிய கட்டப்பஞ்சாயத்து காத்தவராயன்களாக நடந்தது.
29. மிருக பலத்துடன் தேர்தலைச் சந்தித்த போதும் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க இயலாமல் போனது.
30. ஆட்சியைப் பயன்படுத்தி டாடா வரையில் மிரட்டியது.
31. முசோலினி சொன்னது போல பல மன்னர்கள் ஆட்சி புரிவதே சனநாயகம் என்பதை நிரூபித்தது.
32. 20% காவல்துறையினர்களை குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்க வைத்தது.



இன்னும் பல முரண்பாடுகளோடு இரு அணிகள் தமிழகத்தில் மோதிய போதும் இரு அணிகளும் பலமானதாகவே தெரிந்தது. எப்பொழுதும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகத் திரளும் தமிழ் தேசிய ஆதரவு வாக்கு வங்கி ஈழத்தமிழர் பிரச்சனை, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்று எழுந்த தமிழர் பிரச்சனையின் போது 5 சதவீதமாக இருந்த தமிழ் தேசிய வாக்கு வங்கி 10 சதவீதமாக இந்த சட்டமன்ற தேர்தலில் உயர்ந்தது. அ.தி.மு.க அணியின் கடைசி நேரத்தில் ம.தி.மு.க இல்லாத போது தமிழ் தேசிய ஆதரவு வாக்கு வங்கி சேதாரம் விளைந்து காங்கிரசுக்கு எதிராக விழுவதில் ஏதேனும் மாற்றம் நிகழுமென்ற நடுநிலையாளர்கள் எதிர்பார்த்தனர். ஈழத்தில் துடிதுடித்து இறந்த தமிழர்களின் கதறல்கள் கடைசிக் கட்டத்தில் தமிழ் தேசிய வாக்கு வங்கிக்கு எவ்வித சேதாரத்தை விளைவிக்காது, காங்கிரசுக்குப் பாடை கட்ட உதவியது. முதுகெலும்பு உடைந்த காங்கிரஸைத் தூக்கி நிறுத்த ஏதேனும் கட்சிகள் தமிழகத்தில் முனைந்தால், அதற்கு தி.மு.க. போல அவைகளும் விலை கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் இந்த உண்மை முந்தைய ஆட்சியாளர்களுக்கு ஓர் வசவாக தெரியும். இன்றைய ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களுக்கு ஓர் ஆதரவாக தெரியலாம். தமிழகத்தின் முகத் தோற்றத்தில் தே.மு.தி.க. ஒரு புதிய சுடராகச் சுடர் விடுகிறது. இருந்த போதும் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள். சுடராக சுடர் விட்டு இன்று நெருக்கடியில் இருப்பது அந்தக் கட்சிகளுக்கு மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளுக்கும் ஓர் எச்சரிக்கை. தமிழ் தேசிய உணர்வினை மக்களுக்கு ஊட்டி விட்டு, காங்கிரஸ் போன்ற எதிரிகளோடு கரம் கோர்த்தால் சொந்த கட்சிக் காரர்களே ஏற்க மாட்டான் என்பதை இனியேனும் உணர வேண்டும்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவு சொல்லும் சேதி, ஆளுங்கட்சி எதிர்ப்பு அலைக்கும் - எதிர்க்கட்சி எதிர்ப்பு அலைக்கும் இடையே நடந்த போட்டியில் வென்றது ஆளுங்கட்சி எதிர்ப்பு அலை. பீகார், குஜராத், ஒரிசா, ஆந்திரா, டெல்லி சட்ட மன்ற தேர்தல் அனுபவங்களுடன் தமிழகம் முரண்பட்டே நிற்கிறது. காரணம் அதிகாரம் கையில் வந்தவுடன் ஆளுங்கட்சி குட்டிக்கரணம் அடிப்பதையே ஆண்ட கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டிருந்தன.

(தமிழ் இலக்கியங்களின் பதிவின்படி சேர பூமியாக இருந்து இன்று மலையாள பூமியாக உள்ள கேரள சட்டசபை தேர்தலில் மலையாளிகள் தெளிவாக வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் - இடதுசாரிகள் என்று பகுத்துப் பார்த்த போது காங்கிரஸை விட இடது சாரிக்கே அதிக இடங்களை அள்ளி வழங்கினார்கள். கூட்டணி என்று வரும் போது U.D.F. அல்லது L.D.F என்று பகுப்பாய்வு செய்த போது காங்கிரஸ் தலைமையிலான U.D.F. க்கு முன்னுரிமை அளித்துள்ளனர். கேரள வாக்காளர்களுடன் தமிழக வாக்காளர்கள் முரண்பட்டும், இணக்கமாகவும் உள்ளனர். தமிழக வாக்காளர்களைப் பொறுத்த மட்டில் அராஜகம் செய்வது எந்த கட்சியானாலும் துணிவுடன் வீழ்த்திக் காட்டி வருகிறார்கள்.

ஏனென்றால் தமிழக மக்கள் இன்னமும் விழிப்புடன் இருக்கிறார்கள். தி.மு.க. - அ.தி.மு.க. தலைமைகளுக்கு ஆதரவினை அள்ளி தந்துள்ளார்கள். ஆனால் தவறிழைத்தால் தூரக் குப்பையில் வீசி எறிய தயங்க மாட்டார்கள் என்பதைத் தமிழக அரசியல்வாதிகள் உணர்ந்தால் அது அவர்களுக்கு நல்லது.



.

நாத்து அறிமுகம்


மணிக்கொடி, சரஸ்வதி, சுபமங்களா… இன்னும் இன்னும் பல நூறு தமிழ் இதழ்கள் (சிற்றிதழ்கள்) தங்களின் வலிமையை பதிவு செய்து, தொடர்ந்து வெளிவர இயலாத போதும் அவைகள் பதித்துள்ள முத்திரைகள் காலத்தால் அழிக்க முடியாதவை… இந்த நாத்து வலைப்பூவும் தொடர்ந்து வெளிவர வாய்ப்பில்லாமல் போகலாம்....  இருந்த போதும் முதல் விதையினை விதைப்போம்.  விதைக்குள்ளிருப்பது ஆலமரமா, அரசரமரமா… இல்லை கருவேலமரம்மா .. இல்லை முளைக்காமல் போகும் வெற்றுவிதையா என்பதை வாசிப்பாளர்கள் தீர்மானிக்கட்டும்.....