Tuesday, December 27, 2011

மயக்கம் என்ன? - தமிழ் கதாநாயகனுக்கு கட்டுப்பட்ட திரைக்கதை?


அடுத்தவர் மூளை உழைப்பை திருடுவது எத்தனை மட்டரகமானது என்பதே கதையின் கரு. “தன் உழைப்பை ஒருவன் திருடினான் என்பதற்காக மாடியிலிருந்து தலைகுப்புற கீழே விழுவது? மனைவியின் கருவை கலைக்க காரணமான கோபம்… அனைத்தும் ஒரு முழுமையான பைத்தியக்காரன் என்று சான்றிதழ் தரலாம்..”

மனித மூளை தொடர்ந்து புதிய சிருஷ்டிகளை சிருஷ்டிக்க முடியும் என்பதை மறுத்து திரைக்கதை கட்டப்பட்டு இறுதியில் முடிச்சு அவிழ்ந்தாலும் திரைக்கதையில் கோணல் தெரிகிறது.

2004 அக்டோபர் “நவீன ஊடகம்” இலக்கிய இதழில் வெளிவந்த கவிதையே இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் எந்திரன் படமாக வெளி வந்தது என்கிற சிவில் வழக்கு சென்னை 14-வது சிட்டி சிவில் கோர்ட்டில் ஓ.எஸ்.எண்:11382/2010 ஆக தற்சமயம் நிலுவையில் உள்ளது. இப்பட நாயகனும் அவ்வாறு முயலாமல் பைத்தியமாக மாறுவதனால் மேலும் மூளை திருட்டு அதிகரிக்கவே செய்யும். காவல்துறை நீதித்துறை போன்றவை தமிழ் கதாநாயகனுக்கு கட்டுப்பட்டதாகவே தமிழ் திரைக்கதைகள் கட்டுப்படுகின்றது என்பதற்கு இப்படம் சாட்சி.

போராளி - குடை சாய்ந்ததா?


ஐந்து இடங்களில் முத்திரை பதித்த இயக்குநர் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க வண்டியை குடை சாய வைத்து விட்டார்

சிலோன் புரோட்டா...

சிரிப்பு வெடி காட்சிகள்

அறையில் அடைக்கப்பட்டுள்ள அக்காவை பைத்தியமில்லை என்று நிரூபிக்கும் காட்சி…. உள்ளிட்ட கைதட்டல் காட்சிகள் படம் முடிய வந்த போதும் …

வன்முறை காட்சிகளிலிருந்து தமிழ் திரையுலகம் மீள வேண்டியது காலத்தின் தேவை.

களவாணி, பாசு என்கிற பாஸ்கரன்… வெற்றிக்கு பின்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுவே. இயக்குநர் சமுத்திரகனி சசிகுமார் கூட்டணி அடுத்த படத்தில் முத்திரை பதிக்க வாழ்த்தலாம்.

இறுதி காட்சியில் விஜய், அஜித், விக்ரம்… உள்ளிட்ட ஹிரோயிச நாயகர்களைக் கடந்து ஐம்பது, அறுபது பேரை அடித்து நொறுக்குவதால் நொறுங்குவது சசிகுமாரின் மீதுள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தான்.

வேலாயுதம் = இரண்டு கிளைமாக்ஸ் ?


தொடர்ந்து தடுமாறிய விஜய்யின் தடுமாற்றத்தை சற்று தடுத்து நிறுத்தி உள்ளது.

ஹீரோயிசத்தை இடைவேளை வரை அடக்கி வைத்து, பின் கடைசிக் காட்சிகளில் கொட்டி தீர்த்து விட்டனர்.

திரைக்கதை முந்தைய நான்கு படங்களுக்கு இது பரவாயில்லை.

ஆயிரமாயிரம் திரைக்கதைக்கான களங்கள் விரிந்து கிடக்கும் தமிழ் இலக்கியச் சோலையில் கதாசிரியர்களுக்கு உரிய இடத்தைத் தர மறுக்கும் தமிழ் திரையுலகம் பல நூறு கோடிகளை இனி வருடம் தோறும் இழப்பதைத் தவிர்க்க முடியாது.

ஒரு கிளைமாக்ஸ் என்ற தமிழ் திரைப்பட உருவாக்கத்தில் இரண்டு கிளைமாக்ஸ் உருவாக்கிய முதல் தமிழ் திரைப்படம்

Sunday, December 25, 2011

விளம்பரம் + செலவு = வரவு...?


மது ஒழிப்புக்கும் புகை எதிர்ப்புக்கும்
விளம்பரத்துக்காய்
அரசு செலவழித்த
தொகையினைக் கழித்து
வந்த வருமானத்தை
பட்ஜெட்டுக்காக
கணக்கிட்ட போது
வரவு இருபத்தி நான்காயிரம் கோடி
செலவோ ஒன்றரை கோடி

நம்மூர் அரசியல்வாதி


சுவற்றில் பல்லி
தலைகீழாய் நடப்பது போல
கையில் பசையிருந்தால்
தலைகீழும் கால்மேலுமாய்
நடக்கும்
நம்மூர் அரசியல்வாதி

Thursday, December 22, 2011

வழக்கறிஞர் பீஸ்...?


பங்காளிச் சண்டையில்
மேற்கு பாதை வரப்புக்குப்
போடப்பட்ட வழக்கில்
இரண்டாம் அப்பீல்
உயர்நீதிமன்றத்தில்
தள்ளுபடியான விரக்தியில்
மாரிச்சாமி கிழக்குத் தோட்டத்தை
ஒத்திக்கு வைத்துப்
பணத்தை தயார் செய்தான்
உச்ச நீதிமன்றத்தில் வழக்காட!

எச்சரிக்கை அறிவிப்பு


உயர் லஞ்ச ஒழிப்பு அதிகாரி
வீட்டுக்கு வந்த ஓலையில்
பினாமி பெயரில்
வெளிநாட்டுக் கார்
வாங்கிய வழக்கில்
கட்ட வேண்டிய
வரி பாக்கித் தொகையை
ஒரு வாரத்தில் கட்டவில்லையென்றால்
ஏலத்துக்கு வந்து விடுமென்று
எச்சரிக்கை அறிவிப்பு!

Tuesday, December 20, 2011

குண்டர் சட்டத்தில் தவறு!

கொலை, கொள்ளை வழக்கில்
குண்டர் தடுப்பு சட்டத்தில்
கைது செய்யப்பட்ட
முனியப்பன்
நீதிபதி முன்பாக வாதிட்டான்
ஐயா எனது எடை
நாற்பத்தெண்பது
தேகமோ ஒல்லியானது
குறைவான எடை கொண்ட
என்னைக் குண்டர் என
தவறாகக் கைது
செய்து விட்டார்கள்...
என்னை நேரடியாகப்
பார்க்கும் நீங்கள்
என் உடலைப் பார்த்து
என்னை விடுவிக்க
வேண்டுமாய் பிராத்திக்கிறேன்
என்றான்!

குமரிப் பெண் தேவை!

பட்டி மன்றத்தில்
பெண்ணுக்கு கற்புதான்
ஆயுதமென்று
கருத்துரையாடிய
மணி வாத்தியார்
மனைவி செத்த
இரண்டாம் மாதத்தில்
இரண்டாவது தாரத்துக்கான
மணமாலையில்
விளம்பரம் தந்தார்!
இருபது வயதில்
அழகான
அடக்க ஒடுக்கமான
குமரிப் பெண்
தேவையென்று!

Monday, December 19, 2011

அப்பா... நாம என்ன சாதி?

தனியார் பள்ளியில்
எட்டாம் வகுப்பு படிக்கும்
என்மகன் கேட்டான்
அப்பா
நாம் எஸ்.சி.யா?
இல்லை பி.சி.யா?
இல்லைஎம்.பி.சி.யா?
ஓ.சி.யா?
எனது வகுப்பில்
என் ஆசிரியர்
கேட்கிராரென்று...?
நான் சொன்னேன்
தமிழராய் நாம் அரசாண்ட போது
அரசசாதி!
சேர சோழ பாண்டிய அரசு
வீழ்ந்த போது
நாம் சூத்திர சாதி!
தந்தை பெரியாரும் அம்பேத்கரும்
எழுந்த போது
நாம் போராளி சாதி...
அவன் சொன்னான்
கமல் மாதிரி
புரியாமல் பேசுகிறீர்களே...
அப்பா என்னை ஆளைவிடு!

Saturday, December 17, 2011

தி. மு. க. ச. கதை கேளுங்கள்....


மாறன்பட்டி என்று சொன்னவுடன் சுத்துபட்டி பத்து கிராம மக்களுக்கும் நினைவுக்கு வருவது அவ்வூரில் அரங்கேறும் விறு விறு அரசியல் திருப்பமும், புதுப்புது நிகழ்வும் தான் ஊருக்கு நடுவே மந்தையில் விரிந்து பரந்திருக்கும் ஆலமரமும் சாவடியும் தான் தி.மு.க.சவின் தலைமைச் செயலகம்.

தி.மு.க.ச என்றால் திருந்தியோர் முற்போக்குக் கட்டுப்பாட்டு சங்கம். மாறன்பட்டி கிராமத்தில் தி.மு.க.ச உருவாக, கால ஆரம்ப நிகழ்வுகளை நிறுத்தி சொல்ல வேண்டுமென்றால் ஐயா நெடுஞ்சுடரால் மட்டுமே முடியும். அறுபது வருட உள்ளுர் அரசியல் நிகழ்வுகளை மறக்காமலும் மறைக்காமலும் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஊர்ச் சாவடியில் ஐயா நெடுஞ்சுடர் துண்டை விரித்து அமர்ந்து விட்டாரென்றால் இளவட்டங்களும் ஊர் பெரிசுகளும் மந்தையை அடைத்து அமர்ந்து விடுவார்கள். பருத்திக் காட்டுக்கு கொல்லைக்கு போகிறவர்களும் ஆய அடக்கிக்கிட்டு மந்தையில் ஒக்காந்திருவாக… வகைக் கொன்றாய் கிளையில் அமர்ந்திருக்கும் பறவைகள் கூட கத்தறது நிறுத்தி செருமிக்கிட்டே, ஐயா பேசத் தொடங்கினா சுதந்திர கால மாறன்பட்டியிலிருந்து தொடங்கி கதை இன்னிக்கு வரைக்கும் ரயில்பெட்டி கணக்கா கோர்வையா கேக்கிறவ காதுல தேனா வந்து பாயும்.

மாறன்பட்டியில மொதல்ல தி.மு.க.ச நொடிந்த காலம் பூசாரிக தொல்ல நெறஞ்ச காலம் கெழக்கு கம்மா பூசாரி, காளியாத்தா கோவில் பூசாரி, கரட்டு முண்டக்கண்ணி கோவில் பூசாரின்று ஒரே பூசாரிக நாட்டாமை பராசக்தி கணக்கா பூசாரிக கொட்டத்த ஒடுக்க தெற்கு தெரு சாமிராமைய்யா கையில் தடியிடுத்து களமிறங்க, பூசாரிகளுக்கு ஆதரவா மன்னரு கோபாலரு களமிறங்க ஊரே ஒரு கருத்துச் சண்டையா கெடக்கும்.

கடவுள் இல்லையென்று சொன்னவன் யாரடா?

தில்லையில் போய் பாராடா..

கடவுள் இல்லையென்று சொன்னவன் நானடா?

தில்லையில் இருப்பது வெறும் கல்லடா?

அவங்க போடற கருத்து சண்டையிலதான் ஊரு சணம் புதுசு புதுசா வெசயத்த தெரிஞ்சிக்கிட்டாக

ஒழுங்கா போயிக்கிட்டிருந்த வண்டி எப்ப கொட சாய்ஞ்சிதுன்னா … ஐயா சாமிராமைய்யாக்கிட்ட இருந்தவருல்ல முக்கியமானவரு துரை அண்ணாச்சி.. அவரு மந்தையில பேசப் போறாருன்னா… சுத்துட்டி கெராமமே மாறன்பட்டியில கூடி ஊரே திருவிழா கணக்காயிருக்கும். மொத மொதல்ல உள்ளுர் பஞ்சாயத்து தேர்தல்ல நின்று மன்னர் கோவாலய்யா உருவாக்கின சங்கத்த தோக்கடிச்சு பஞ்சாயத்தை தி.மு.க.ச. புடிச்சிது. அவரு பெரசிடண்டாகி அல்லா கம்மாவையும் தூருவாரி ஊரே பச்சப்பசேலுன்னு இருந்திச்சு கம்மா நிறைய கெண்டையும், விராலும், சுறாவும் வாளையும் கெடந்து குதிக்கும். ஊருல எங்க திரும்பினாலும் ஒரே பருத்தி மண்டி கடை, அரிசி மண்டி கட, கடலமண்டி கடன்னு…. செழிப்பா கிடக்க.. ஊருக்காரங்க மதிய சாப்பாட்டுக்கு களப்பு கடைக்கு போவாங்களாம். எந்த பூசாரிப்பய செய்வென வெச்சானோ தெரியல திடீருன்னு துரையண்ணாச்சி செத்துப் போக ஊரு பூரா சனக்காடு மாருலயும் வவுத்திலயும் அடிச்சித் துடிச்சிப் போச்சி.

ஊரு முழுக்க எழவு மேகம் கூடி நின்னுச்சி. ஐயா போனதும் பாதி உசிராயிருந்த சனக்காடு கொஞ்ச கொஞ்சமா மனச தேத்திக்கிட்டு தி.மு.க.ச வுக்கு புதுசா ஐயா கருணாகர பாண்டியன தலைவரா தேர்ந்தெடுத்தாக.

கத சூடு பிடிக்க ஊரு மந்தை பூரா ஐயா நெடுஞ்சுடர் வாயைப் பாக்க .. ஐயா தொடர்ந்தார்… தி.மு.க.ச.வில பெரிய்ய பெரிய்ய ஆளுக யிருந்தாலும் அதில கருணாகர பாண்டியன் கொஞ்சம் வெவரமானவரு. அவருக்கு பழக்க வழக்கம் அதிகம். தந்தி ஆபீசில வேல பார்த்த வெள்ளத் தாடிக்காரரு சப்போட்டா இருந்தாரு. ஒரு வழியா கருணாகர பாண்டியன் பெரசிடண்டாகி நல்லாத்தான் போய்க்கிட்டிருந்திச்சு.. திடீர்ன்னு எவனோ ஒரு பூசாரி செய்வன வெய்க்க ஊருக்குள்ள அரிசித் தட்டுப்பாடு. எங்கன பார்த்தாலும் கப்ப கெழங்கு.. அரிசி கட்டுபாட்ட தீர்க்க முடியில்ல..

திடீருன்னு பார்த்த ஜில்லா காரங்க எல்லாப் பஞ்சாயத்தையும் கலைச்சு புட்டாக. ஏற்கனவே சந்திரன் ஐயா தி.மு.க.ச வில யிருந்து பிரிஞ்சு அ.தி.மு.க.ச ன்னு ஒரு சங்கத்த ஆரம்பிக்க ஊரு எலந்தாரி பூரா ஐயா சந்திரன் பின்னால போக பொளப்பே நாறிப் போயிருமென்று ஐயா கருணாகர பாண்டியன் கலங்கி கிடக்க பொசுக்கினு ஜில்லாக்காரங்க .. எல்லா பஞ்சாயத்தயும் கலைக்க

உள்ளதும் போச்சுடா என் சென்றாயா - ன்னு ஐயா கருணாகர பாண்டியன தலயில துண்ட போட்டு ஓரமா ஒக்காந்து யோசிச்சாரு..

அம்மள கலைச்சி ஜில்லாகாரய்ங்க மண்டய ஒடய்க்காம விட மாட்டேன்னு தி.மு.க.ச காரங்க களமிறங்க பதிலுக்கு ஜில்லா காரங்க களமிறங்க… ஒரே அடிதடி… தி.மு.க.ச காரங்களுக்கும் ஜில்லா காராய்ங்களுக்கும் சரி சமமா அடி உழுந்திச்சு”

ஏற்கனவே சந்திரன் ஐயா நொம்பலம் பத்தாதுன்னு, மாவட்ட பஞ்சாயத்துகாரய்ங்க நொம்பலம்- போதுமடா சாமி… ன்னு ஐயா கருணாகர பாண்டியன் கம்மா ஓரத்தில நின்னு யோசிச்சிக்கிட்டு நிக்கறப்ப பொசுக்குன்னு ஜில்லா காராங்க பஞ்சாயத்து தேர்தல அறிவிச்சி புட்டாக.

ஏற்கனவே ஐயா கருணாகர பாண்டியன் தலைமையில இருக்கிற தி.மு.க.ச. வும், ஐயா சந்திரன் தலைமையில யிருக்கிற அ.தி.மு.க.ச வும் சரிமல்லுக்கு நிக்க ரெண்டு பேரும் ஊரு மந்தையில மாறி மாறி செலம்பாட ஒரு வழியா தேர்தல் முடிஞ்சு முடிவுக்காக ஊரு சனமே மந்தயில கூடி கெடக்காய்ங்க.. தேர்தல் அதிகாரி சரிய்யா சாயந்திரம் நாலு மணிக்கு முடிவ அறிவிச்சாக

ஐயா சந்திரன தூக்கிக் கிட்டே நாடே கோ… கோ …ன்னு உச்சியில தூக்கி வெச்சி .. கொண்டாடிச்சி.. எங்கு பார்த்தாலும் சனக்காடு மாலையையும், பூவையும் போட்டு ஐயா சந்திரன வரவேற்க … கருணாகர பாண்டியன் ஐயா.. நமக்கெதுக்குடா வம்புன்னு பேசமா ரெண்டு புத்தகத்தையும் பேனாவையும் எடுத்திக்கிட்டு கரட்டோரமா ஒதுங்கிட்டாரு. எங்கன பார்த்தாலும் எல தலயா மொழச்சி ஊரே பச்சப்பசேலுன்னு கெடந்திச்சு..

எப்ப பாரு ஊருக்குள்ள பஞ்சாயத்து எலக்சன் வந்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு சந்திரன் ஐயா ஜெயிச்சிப்புடுவாரு..

ஏழபாழய்களுக்கு ஏதாச்சும் செய்யாட்டி ஐயா சந்திரனால தூங்க முடியாது. ஊருளவுள்ள அத்தன சாதி சனமும் ஐயா மேல உசிராயிருந்தாக. ஐயா கருணாகர பாண்டியன் என்னென்னமோ செஞ்சி பாத்தாக.. மிசுங்க கூட முடியல..

அம்ம கையில என்னயிருக்கு. வர்றது வறட்டும்ன்னு ஐயா கருணாகர பாண்டியன் கெடக்க..

கொல்லயில போற காலன் நல்லவக வுசிர எடுக்கதுக்குன்னு வந்து ஐயா சந்திரன் வுசிர பறிக்க பத்து நாளக்கி ஊரு பூரா ஒவ்வொரு வீடும் எழவு வீடு கணக்கா துடிதுடிக்க… பொசுக்கின்னு ஜில்லா பஞ்சாயத்துக்காரய்ங்க பெரசிடெண்ட் எலெக்சன அறிவிச்சிப்புட்டாக..

“இந்த வாட்டி யில்லைன்னா அப்புறம் எந்த வாட்டியும் பெரசிடெண்டா ஆக முடியாதுடா கார்மேகம் ன்னு ஐயா கருணாகர பாண்டியன் எலந்தாரி கணக்கா நிக்க.. ஒரு வழியா பழய்ய பெரசிடெண்ட் பதவிய ஐயா கருணாகர பாண்டியன் புடிய்க்க … தி.மு.க.ச காரங்க மந்தையில துள்ளி துள்ளி குதிச்சாக..

ராமன் வனவாசம் போன கணக்கா சும்மா பன்னிரெண்டு வருசமா காய வுட்டுபுட்டாகப்பா.. ன்னு ஆனந்தமா கூத்தாட

எந்த பூசாரிப் பய செய்வென வெச்சானே தெரியல… பொசுக்குனு ஜில்லாகாராய்ங்க ஒரே வருசத்தில பஞ்சாயத்த கலைக்க … தி.மு.க.ச. காரங்களுக்கு அழுக அழுகய்யா வந்திச்சி.

அதுக்கப்பறகு வந்த பெரசிடெண்ட தேர்தல்ல தி.மு.க.ச. தோக்க.. ஒரு மனுசனுக்கு இம்புட்டு சோதனையாடா வரணுமன்று… ஐயா கருணாகர பாண்டியனப் பாத்து அவங்க சங்கத்து காரங்கெல்லாம் ஆதங்கப் பட்டாக.

பெரசிடண்டு சேர எலந்த துக்கத்தில யிருந்த ஐயா மீளுறதுக்குள்ளார தி.மு.க.ச.வில பெரிய்ய ஆள வளந்திட்டு வந்த சாமி கோவாலு ஐயா வாட்ட சாட்டமா ஐயாட்ட மொரண்டு பிடிச்சிக்கிட்டு தோளில்ல கெடந்த கருப்பு துண்ட ஒதறி தள்ளிட்டு தெரு தெருவா போயி மொறயிட எளந்தரிக்க பூரா ஐயா சாமி கோவாலு பக்கம் சாய ஐயா கருணாகர பாண்டியன் “அம்மளுக்குன்னு யிம்பிட்டு சோதனையா வரணுன்னு கம்முன்னு மூலையில ஒக்காந்திட்டாரு”

எங்கிட்டிருந்துதான் காத்து அடிச்சிதோ தெரியில்ல.. எந்த அண்ணா மலசாமி புண்ணியமோ தெரியல… அடுத்து வந்த பெரசிடெண்ட் எலெக்சன்ல சைக்கிள்ள வந்த கருப்பசாமி ஐயா கருணாகர பாண்டியன் ஐயாவுக்கு கை கொடுக்க பழயபடி ஐயா பெரசிடெண்ட் ஆனாரோ யில்லையோ! ரொம்ப உசாராயிட்டாரு.

எப்பபாரு யிந்தா ஜில்லா காரய்ங்க அம்மகிட்டயே ஒரண்டயிழுத்து முழுசா ஐந்து வருசத்த முடிக்கவுடாம பண்ணுதுக யிந்த மொற ஜில்லா காராய்ங்களோட மோதறத நிறுத்திக்கிட்டு ராசியா போயிறுவோம்னு ஓசிக்க ஆரம்பிச்சாரு..

அப்புறம் பாத்தா ஒருக்க மாத்தி ஒருக்கன்னு தி.மு.க.ச.வும் அ.தி.மு.க.சவும் மாறி மாறி பஞ்சாயத்த புடிச்சிகிட்டு; அவகவகளுக்கு உள்ளது அவவகளுக்குன்னு ஊருக்குள்ள யிருந்தாக..

எடயில ரெண்டு பேருமா… மாத்தி மாத்தி சண்ட போட்டாலும் யாருக்கும் சேதாரம் இல்லாமத்தான் இருந்திச்சி. ஆனா போன பெரசிடெண்ட் எலக்சன்ல தி.மு.க.ச. செயிச்ச பின்னால சங்கத்து காரக ஆட்டத்தினால வண்டி கொஞ்சம் கொட சாஞ்சி போச்சி

கூட பொறந்ததுக.. கட்டயில போறதுகன்னு புதுசு புதுசா சங்கத்துக்காரங்க மெம்பரா சேர பழய சங்கத்து மெம்பருக்கு மருவாதியில்லாம போச்சி கத்தி, கம்பு, ஆட்டம்னு அதுக அதுக ஆட்டம் போட்டிச்சிக.. தாட்டியம்னா தாட்டியம் அம்புட்டு தாட்டயம்

சும்மா தூர் வார்றதுலயிருந்து, கக்கூஸ், தெரு விளக்கு அங்க யிங்கன்னு சங்கத்துகாரக கைவெய்க்க.. இந்த வருச எலெக்சன்ல தி.மு.க.ச.வோட குடியே முழுகி போச்சி “எலெக்சனுக்கு முன்னால அப்பப்ப நடந்த வார்டு தேர்தல்ல போடு போடுன்னு போட்ட தி.மு.க.ச. பஞ்சாயத்து பொது தேர்தல்ல குப்புறக்க படுத்த பாய்ச்சான் கணக்கா எந்திரிக்க செறம படறமாதிரி ஆயி போச்சி. ஏண்டா யிப்படின்னு பின்னால திரும்பி பாத்த பின்னாலதான் தெரிஞ்சிச்சி

“சங்கத்து காராக அஞ்சி வருசமா போடு போடுன்னு புகுந்து வௌயாடியிருக்காக”

இப்பெல்லாம் ஊருக்குள்ள போலிசு அடிக்கடி வருதுக … கேஸ் கீஸ்..ன.னு தி.மு.க.ச. வ போட்டு உலுப்பு உலுப்புன்னு உலுப்பி எடுக்கிறாங்க..

போன பீரியடுல்ல ஐயா கருணாகர பாண்டியன பாத்து சல்யூட் அடிச்ச போலிசெல்லாம் இப்ப அய்யாவ பாக்கறப்பெல்லாம் மொறய்க்கற மாதிரி இருக்குது. இப்பெல்லாம் ஐயாவுக்கு போலீச பாத்தாவே புடிக்க மாட்டீங்குது.. உள்ளுர் போலிசு தான் மோசம்னா வெளியூர் போலீசு ரொம்ப மோசம்.

போர போக்க பாத்தா சங்கம் பூரா ஜெயிலுக்கு போயிருமோன்னு பயமாயிருக்கு … பேசாம அடுத்த சஙகப் பொதுக்குழுவ பாளையங்கோட்டையிலேயோ வேலூரிலயோ போட்டோ கூட ஆச்சர்யப் பட முடியாத அளவுக்கு நெலம படு சோசம்.

ஆறாவது நமக்கு ஆதரவா பேசுவாங்கன்னு பாத்தா ஒரு பய கூட சொய மரியாதையோட வாழறவன் மாதிரி தெரியல.. பண்பாட்ட தொலச்சது மில்லாம.. பவத்தறிவயும் எழுந்து புடிச்சீக… மூதேவிக.. ஊருக்குள்ள எல்லா பயலுகளுக்கும் ஈரல் கெட்டு போச்சின்னா வசலா முன்னு பாத்தா .. பயம்மா யிருக்கு.. ஏன்னா முன்னம் கணக்கா ஏது சொன்னாலும் பய புல்ல மனசுக்குள்ளேயே வெச்சிபுட்டு ஓட்டு போடாம டயத்துல ஆப்படிக்குதுக. ஏற்கனவே நம்மூருகாரகள வெளியூருக்காரய்ங்க கொத்து கொத்தா கொன்னப்ப எதுக்கு மாவட்டத்து பஞ்சாயத்த பகக்கணும்னு நம்ம பேசாம யிருந்தது எம்புட்டு பெரிய்ய தப்புன்னு இப்பத்தான் தோணுது. கூடாநட்பு நம்மள இங்க கொண்டு உட்டுபுடிச்சி.. ன்னு ஐயா அழுதாலும் சிந்தறதுக்கு ஆளில்லை.

அ.தி.மு.க.ச காரக ஏதாச்சும் தப்பு பண்ணா பழயபடி நம்ம தெசயில காத்தடிக்குமான்னு ஐயா கருணாகர பாண்டியன் கண்ணாடிய கழட்டிக் கழட்டிப் பாக்கிறாரு. ஊரு பஞ்சாயத்து ஸ்கூல்ல வந்த பொத்தக பிரச்சனையை வெச்சி ஒரு வருசத்த கடத்திப்புடலாமுன்னு பாத்தா ஊரு நாட்டாமக பொசுக்குனு சோலிய முடிக்கிறாப்ல தீர்ப்ப வேற சொல்லிபுட்டாக..

அருகில் இருக்கிற பரமத்தியில துப்பாக்கிய வெச்சி பஞ்சாயத்துக் காரக வெறட்டுனத வெச்சி பொளப்ப நடத்தலாம்ன்னு பார்த்தா இப்ப நடந்த உள்ளுர் வார்டு எலெக்சன்ல தி.மு.க.ச. ஆப்படிச்சிபுட்டாக..

அ.தி.மு.க.ச காரக நம்ம மேல இம்புட்டு காண்டமா கெடக்கய்ல்ல.. நம்ம சங்கத்துக் காரக ஒண்ணா நிக்கலாமுன்னு பாத்தா காச பாத்தது ஒவ்வொண்ணா கழற பாக்குது.

கையக்கட்டி ஓட விட்டாக, கால கட்டி ஓட விட்டாகன்னு எம்புட்டு தான் தொல்காப்பிய நடயில எழுதினாலும் கடந்த வார்டு எடைத்தேர்தல்ல நம்ம பண்ண அக்கிரமத்த ஊரு காரக மறக்க மாட்டீங்குதுக..

ஐயா நெடுஞ்சுடர் கதய முடிக்க போறத தெரிஞ்சிக்கிட்டு சாவடியில ஒக்கார்ந்திருந்த தி.மு.க.ச. காரர்களும் அ.தி.மு.க.ச காரர்களும் எந்திரிக்க தோதா துண்ட ஒதருனாக.

போன பீரியடில்ல பாத்தியா தி.மு.க.ச. காரகளுக்கு எம்புட்டு சவுரியத்த பண்ணிக் கொடுத்து அவகவக வாய்க்கு ருசியா.. தின்னிருக்காக நம்ம சங்கத்தை பார்த்தியா.. நம்மள கொஞ்சமாவது திங்க வுடுதுகளா… தி.மு.க.ச. கணக்கா வுடாட்டியும் பரவாயில்ல .. ஏதாச்சும் கொஞ்சமாவது அங்ஙன யிங்கனயாவது மேயவுட லாம்ல்ல- ன்னு அ.தி.மு.க.ச. காரக பேசிக்கிட்டே கௌம்ப

திடுதிப்புன்னு ஏறுன கட்டணத்தைப் பாத்து தி.மு.க.ச. காரங்க செத்த மூச்ச உள்ள இழுத்திட்டு சொன்னாக “ஊருக்குள்ள எம்புட்டு பேர பாத்திருப்பாரு அவரோட அனுபவம் சங்கத்த காப்பாத்தணும். அடுத்த பிரசிடெண்ட் எலெக்சன்ல்ல செய்கிரதுயிருக்கட்டும் இப்ப செயில்ல இருக்க நம்ம சங்கத்துகாரகள பெயில்ல எடுத்து கேஸ் - தண்ணியில்ல யிருந்து மொத காப்பாத்தி நம்ம சங்கத்த கர சேக்கணும்ன்னு ஆத்தா மாரியாத்தாள வேண்டிகிட்டு தி.மு.க.ச. காரக வெரசா மந்தய விட்டு வீட்டுக்கு நடந்தாக. மனசாட்சி வுள்ள தி.மு.க.ச.காரங்க அன்னிக்கு அம்ம வீரத்த கோர்ட்ல்ல காட்டினோம். இன்னைக்கு நீதிமன்றத்த வெச்சி நம்ம மானத்த காப்பாத்தறோம்.

கறுப்பு சட்டையில ரத்த கரய உண்டாக்கினோம். இப்ப கறுப்பு சட்டயில்லைன்னா நம்மள கோவணத்த கழட்டி வெளுத்திருப்பாக.. ன்னு சொல்லிட்டே வீட்ட நோக்கி....

Friday, December 16, 2011

7 ஆம் அறிவு திரைப்பட இயக்குனருக்கு சில கேள்விகள்


சமூகப் பிரச்சனைகளைத் தொட மறுக்கும் தொடை நடுங்கி திரைப்பட உலகத்தினைக் கடந்து துணிவுடன் விமர்சித்த தமிழன் முருகதாசுக்கு முதலில் வீர வணக்கத்தை செலுத்தி விட்டு இயக்குநர் முருகதாசுக்கு வருவோம்.

முதல் இருபது நிமிட திரைப்படம் … கடைசி பத்து நிமிட திரைப்படம் .. இரண்டுக்கும் சேர்த்து இயக்குநருக்கு 90/100 வழங்கி விடலாம். இடையில் ஒரு ஒண்றரை மணி நேர திரைப்படத்திற்கு நாம் மைனஸ் 30 தரலாம்.

90/100 - 30/100 = 60/100

ஆக மொத்தம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற திரைப்படம் என்ற போதும் இயக்குநர் முன்பு நாம் வைக்கும் கேள்விகள்...

1. படத்தின் விறுவிறுப்பை உருவாக்கிய சீன உளவாளி நம் தேசத்திற்குள் வருவதற்கு முன் 1 மணி நேர திரைப்படம் ஓடி விடுகிறதே...?

2. சீன உளவாளி ஒரு காவல்நிலையத்தையே சுக்கு நூறாக்கி விட்ட பின்பும் காவல்துறை அவரை துரத்தாமல் இருப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதே...?

3. போதி தர்மன் எனும் கனமான பாத்திரத்தை உருவாக்கி விட்டு, சராசரி காதல்... சராசரி காதல் தோல்விப் பாடல்... சராசரி டூயட் ... என்று ஒரு மணி நேர விரயத்தை தவிர்த்து சீன உளவாளியை முன்பே களமிறக்கி... தோழா! தோழா! பாடல் தவிர்த்து அனைத்துப் பாடலையும் நீக்கியிருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடி இருக்குமே...?

4. ஊடகங்களும் விமர்சனங்களும் ஆஹா ஓஹோ வென சுருதிஹாசனை உயர்த்தி பிடிக்கும் போது நமக்கு ஓர் விசயம் நினைவுக்கு வருகிறது.

“சலங்கை ஒலி” திரைப்படத்தில் நடன கலைஞர் (எஸ்.பி.சைலஜா) நடனத்திற்கு கமல் ஒரு விமர்சனத்தை தனது பத்திரிகையில் பதிவு செய்திருப்பார். அந்த விமர்சனத்தைப் பார்த்து எஸ்.பி.சைலஜா கொதித்துப் போய் கமலின் பத்திரிகை அலுவலகம் வந்து பேயாட்டம் போடுவார். பஞ்ச பூதங்களும் முகவரி காட்டும்... என்ற வரியினை சுட்டிக்காட்டி கமல் விளக்கும் காட்சி … திரையரங்கே அதிரும்….

சுருதிஹாசனின் நிலையும் அதே நிலை... ஆரம்பம் முதல் கடுமையான முயற்சி செய்து பார்த்தும் நடிப்பு வரவில்லை இருந்தும் பார்வையாளர்கள் அறியா வண்ணம் கமல் மீதுள்ள நேசத்தில் இயக்குநர் முழுவதும் வெளியில் தெரியா வண்ணம், சுருதிஹாசன் பாத்திரத்தை சூர்யாவுக்கு நிகராக இயக்குநர் கட்டமைத்து மறைத்து விட்டாரே..?

5. போதி தர்மனாக எழும் போது சூர்யாவின் கண்களில் உள்ள ஈர்ப்பு, இதர காட்சிகளில் இல்லையே…?

எது எப்படி இருந்த போதும் ! ஒரு புதுமையான திரைப்படத்தை தமிழருக்கு அளித்த இயக்குநரையும் தயாரிப்பாளரையும் திரைப்பட கலைஞர்களையும் உச்சி முகர்ந்து பாராட்டியே தீர வேண்டும். குறிப்பாக தமிழ் சார்ந்த வசனங்களில் திரையரங்கே அதிர்கிறது.

“ஈழத்தமிழர் பிரச்சனை” தேசிய இன கண்ணோட்டம்.

மொழிவழி தேசியம்...! என தமிழ் திரையுலகம் கண்டிராத புதிய வழியை .. இப்படம் காட்டியுள்ளது. முதுகெலும்பு இருந்தும் தொடை நடுங்கி தமிழ் இயக்குநர்கள் மத்தியில் இயக்குநர் முருகதாஸ் தமிழ் தேசியத் தலைவனின் தம்பியாய் காட்சியளிக்கிறார்.

மலையாளக் கட்சிகளும், மதராசபட்டினக் கட்சிகளும்


மலையாளி வாய்க்கு ருசியாக
அரிசி படைக்கும் தமிழனுக்கு
முல்லைப் பெரியாறை மூடி
வாய்க்கரிசி போடுவதில்
அச்சுதானந்தனாயிருந்தாலும்
உம்மன் சாண்டியாக இருந்தாலும்
நாளை அக்கா ஷகீலா வந்தாலும்
மலையாள அரபிக்கடல் கட்சிகள்
ஒன்றுபட்டுக் கரம் கோர்த்து
வீதிக்கு வந்து ஒன்றுபட்ட பின்பும்
கூறு போட்டு பிரிந்து கிடக்கும்
எம் மதராசபட்டின கட்சிகளோ
கைகளில் குஷ்டம் பிடித்த பீடிகையில்
கரங்கள் இணையாது
தனித்தனியாய்க் கூவிக் கூவி
கூவமாய் நாறுவதால்
இனி தமிழ் மெல்ல சாகுமா
இல்லை தமிழரின் நீராகார உரிமை சாகுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!

Monday, December 12, 2011

இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்


தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பெரிதாகிக் கொண்டே இருந்தாலும் தமிழர்களால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாமல் போவதற்கு இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் மலையாளிகள்தான் காரணம்.

முல்லைப் பெரியாறு அணை பலம் இழந்து விட்டதென பொய் திட்டங்களைத் தீட்டி, ரகசியமாக அமுல்படுத்துவதும் மலையாள அதிகாரிகள் குழுதான்.....

மத்திய அரசின் ஆதிக்க வர்க்கத்தில் இருக்கும் மலையாளிகளின் பட்டியல் இதோ....

1. என். பெர்னாண்ட்ஸ் - இந்திய ஜனாதிபதியின் செயலாளர்.
2. வி. கே. தாஸ் - இந்திய ஜனாதிபதியின் தனிச் செயலாளர்.
3. டி. கே. ஏ. நாயர் - இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயலாளர்.
4. என். நாராயணன் - இந்தியப் பிரதமரின் முக்கிய ஆலோசகர்.
5. பி. ஸ்ரீதரன் - இந்திய மக்களவைச் சபாநாயகரின் தனிச் செயலாளர்.
6. கே. எம். சந்திரசேகர் - இந்திய அமைசரவைச் செயலாளர்.
7. ருத்ர கங்காதரன் - இந்திய விவசாயத்துறைச் செயலாளர்.
8. மாதவன் நம்பியார் - இந்திய விமானப் போக்குவரத்துத்துறைச் செயலாளர்.
9. நிரூபமா மேனன் ராவ் - முன்னாள் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் & தூதர்
10. சத்திய நாராயண தாஸ் - இந்திய கனரகத் தொழிற்துறைச் செயலாளர்.
11. ஜி. கே. பிள்ளை - இந்திய உள்துறைச் செயலாளர்.
12. சுந்தரேசன் - இந்திய பெட்ரோலியத் துறைச் செயலாளர்.
13. கே. மோகன் தாஸ் - இந்தியக் கப்பல்துறைச் செயலாளர்.
14. பி. கே. தாமஸ் - மத்தியக் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் (தற்போது பதவியில் இல்லை...?)
15. சுதாபிள்ளை - இந்தியத் திட்டக்குழுவின் செயலாளர்
16. வி. கே. சங்கம்மா - இந்திய வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சிலர், செயலாளர்.
17. ஆர். கோபாலன் - இந்திய நிதிப்பணிகள் துறை இயக்குனர்.
18. கே. பி. வி. நாயர் - இந்திய செலவீனங்கள் துறைச் செயலாளர்.
19. கே. ஜோஸ் சிரியாக் - இந்திய வருவாய்த்துறைச் செயலாளர்.
20. ஆர். தாமஸ் - இந்திய வருமானவரித் துறைச் செயலாளர்.
21. வி. ஸ்ரீதர் - இந்திய சுங்கத்துறைச் செயலாளர்.
22. பி. கே. தாமஸ் - இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர்.
23. ஏ. சி. ஜோஸ் - இந்தியக் கதர் வாரியச் செயலாளர்.
24. சி. வி. வேணுகோபால் - இந்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகச் செயலாளர்.
25. ஸ்ரீ குமார் - இந்திய அரசின் மத்தியக் கண்காணிப்பு ஆணைய இயக்குநர்.
26. கோபாலகிருஷ்ணன் - இந்திய அரசின் மத்தியக் கண்காணிப்பு ஆணைய மூத்த அதிகாரி.
27. நந்தக் குமார் - இந்திய கூட்டுறவுத் துறைச் செயலாளர்
28. ரகுமேனன் - இந்திய செய்தி ஒலிபரப்புத்துறைச் செயலாளர்.
29. ராமச்சந்திரன் - இந்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர்.
30. ரீட்டாமேனன் - இந்திய ஜவுளித்துறைச் செயலாளர்.
31. விசுவநாதன் - சட்டத்துறைச் செயலாளர்
32. மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர்

அமைச்சர்கள்

இந்திய நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 உறுப்பினர்களில் கேரளாவிலிருந்து 20 பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் 15 உறுப்பினர்கள். இவர்களில் 5 நபர்கள் அமைச்சர்கள்.

1. ஏ. கே. அந்தோணி - இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர்.
2. வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர்.
3. கே. வி. தாமஸ் - இந்திய விவசாயத்துறை இணை அமைச்சர்.
4. முல்லப்பள்ளி ராமச்சந்திரன் - இந்திய இந்திய உள்துறை இணை அமைச்சர்.
5. அகமது - இந்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர்.

மிக முக்கியமானவர்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வீட்டில் அவரது கார் ஓட்டுநர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கனக்குட்டி, தோட்டக்காரர் தாமஸ் என்பவர்களுடன் அவருடைய வீட்டில் வேலை பார்க்கும் பலரும் மலையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமாம். இதையெல்லாம் படித்த பிறகும் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறதா?

(தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றிலிருந்து...)

Wednesday, December 7, 2011

5.வருணாசிரம தர்மம் அன்றும் இன்றும்


வருணாசிரம முறைதான் தி.க. வினர் மிகக் கடுமையாக எதிர்க்கக் கூடிய ஒன்று. அது அன்றுபோல் இன்றும் இருப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர். அது உண்மைக்குப் புறம்பானது. இன்று பிராமண சாதியினர் என்று ஒரு பிரிவினா; உள்ளனர். அதுதான் வருணாசிரம தர்மம் என்றால் இவர்கள் வருணாசிரம தர்மத்தையே புரிந்து கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும். வெள்ளை நிறத்தவரான ஆரியர்கள் சென்றவிடமெல்லாம் வருணாசிரம முறை தோன்றவில்லை. அங்கு இருந்த வெள்ளை நிறத்தவரோடு ஐக்கியமாகிவிட்டனர். அவர்கள் இந்தியாவுக்கு வந்த போதுதான், இங்கு வந்து சேரும் முன் புரோகிதம் செய்யும் பிராமணர்களாகவும், போர் புரியும் சத்திரியர்களாகவும், பிரிந்திருந்த ஆரியர்கள் இங்கு வந்த போது வளர்ச்சியடைந்திருந்து வேளாண்மையிலும் வர்த்தகத்திலும் ஈடுபட தங்களில் ஒரு பிரிவினரை வைசியர்களாக்கினர். இங்கு வாழ்ந்து வந்த பூர்வீகக்குடி கருப்பு நிற மக்கள் மீது ஆதிக்கம் பெற்ற அவர்களை தாசர்களாக - சூத்திரர்களாக உடலுழைப்புப் பணிகளுக்காகத் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். இவ்வாறு தான் நால் வருணம் தோன்றியது. உண்மையில் இருவருணம்தான். வெள்ளை நிறத்தவரான ஆரியர்கள் தான் மூன்று வருணத்தினராயினர். ஒவ்வொரு கோத்திரத்திலும் இந்த வருணத்தினர் இருந்தனர். அன்றைய உற்பத்தி முறையின் வளர்ச்சி நிலையிலிருந்து இது தோன்றியது. இதில் பிராமணர்கள் வேதம் கற்ற புரோகிதர்கள் என்ற முறையில் மேலாதிக்கம் பெற்றிருந்தனர். அவர்கள் தான் முற்றாக உடலுழைப்பில் ஈடுபடாதோர். நான்கு ஆசிரம வாழ்க்கை என்பதும் இவர்களுக்குத்தான் பொருந்தக் கூடியதாக இருந்தது. வாழ்க்கையின் நான்கு கட்டங்கள் என்பதுதான் இதன் பொருள். பிரம்மச்சாரியம் (மாணவப்பருவம்), கிரகஸ்தம் (இல்லறம்), வானப் பிரஸ்தம்(காடுறைதல்) சன்யாசம் என்பதே நான்கு ஆசிரமங்கள் ஆகும்.

மாணவப் பருவம் 12 ஆண்டுகள் மரத்தடியில் குருவின் பக்கத்தில் அமர்ந்து வேதம் கற்க வேண்டும். அன்று பிராமணர்கள் அனைவருக்கும் இது கட்டாயமாக இருந்தது. இன்று எத்தனை பிராமணர்கள் இதனைப் பின்பற்றுகின்றனர். கான்வென்ட் பள்ளிக்கல்லவா பிள்ளைகளை அனுப்புகின்றனர். இல்லற வாழ்க்கைக்குப் பிறகு எத்தனை பிராமணர்கள் காட்டு வாழ்க்கைக்கு செல்கின்றனர். இங்கு கல்வி முடித்தவுடன் ஐரோப்பாவுக்கோ, அமெரிக்காவுக்கோ தானே செல்கின்றனர்! அதே போல் கடைசி கட்டமான சன்யாச வாழ்க்கைக்கு எத்தனை பிராமணர்கள் செல்கின்றனர்? ஓய்வுக் கால வாழ்க்கையை நகரங்களில் வசதியான முறையில் தானே கழிக்கின்றனர். ஒரு “தர்மம்” என்ற முறையில் பிச்சையெடுத்துண்ண எந்த பிராமணன் செல்கிறார்? இதர சாதியினரைப் போல ஏழைப் பிராமணர்கள் எல்லா வயதினரும் பிச்சை எடுத்து வாழ்வதைப் பார்க்கின்றோம். பிராமணன் என்பதற்கு அடையாளமாக பூணூல் ஒன்றுதானே மிச்சம்! பிராமணரல்லாத சில சாதியினரும் பூணூல் அணிகின்றனர். பூணூல் இன்றைக்கு சமூக அந்தஸ்தைத் தீர்மானிப்பதாகவும் இல்லை. இதர சாதியினர் அதற்கு எந்த மதிப்பும் அளிப்பதாகவும் இல்லை. உண்மையில் அது ஒரு கேலிப்பொருளாகியுள்ளது. (மார்க்சிஸ்ட் ஏப்ரல்-94 பக்கம் 40)

நம் இந்திய பூமியில் சாதிகள் இருக்கக்கூடாது என்பது நேர்மையானது. ஆனால் இன்றைய இந்திய சமூகத்தில் சாதிகள் பலமாக உள்ளது என்பதை ஒத்துக் கொண்டால்தான் சாதிகளற்ற சமூகம் என்னும் புள்ளியை நோக்கி இந்திய சமூகத்தை நாம் நகற்ற முடியும். வர்க்கம் தான் இந்த மண்ணில் உள்ளது என்று வாதிடும் இடது சாரிகள், இன்று கட்சிக்குள் தலைதூக்கியிருக்கும் சாதிய, ராட்சச ஜந்துகளினால் அவதிப்படுகின்றனர். வங்க அமைச்சரோடு இது முடியும் பிரச்சனை கிடையாது. மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி. வரதராஜன் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழகத்தில் பல இடங்களில் நமது கட்சிக்குள்ளே சாதியம் தலை தூக்கியுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வேதனையுடன் பரிசீலிக்கிறது என்று கண்டனம் செய்தார். கேரளத்தில் கெளரி அம்மாள் புறக்கணிக்கப்பட்ட போது ஈழுவர்கள் இடதுசாரிகளுக்குத் தந்த நெருக்கடி பின் தோழர் அச்சுதானந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பழிதீர்த்துக் கொண்டது ஈழுவர் சமூகம். இந்திய சமூகத்தில் சாதி இல்லை என்று வாதிடும் நபர்கள், சாதி நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். சாதி இந்திய சமூகத்தில் பலமாக உள்ளது என்பதை ஒப்புக்கொள்பவர்களே சாதிகளற்ற சமூகம் நோக்கி பயணிப்பார்கள். இந்திய சாதிகள் பற்றிய சிறு புள்ளி விபரமே நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

1980 –ல் மண்டல் குழு சமர்ப்பித்த சில தகவல்கள்


இனத்தின் பெயர் மக்கள் தொகை

அரசு

அதிகாரிகள்

உயர்கல்வி

கற்றவர்கள்

உயர் பதிவியில் உளவர்கள் விவசாயிகள் பூமி

பிராமணர்கள்

3.5%

   41%

   50%

     61%

10%

5%

சத்திரியர்கள்

5.5%

   15%

   16%

     12%

27%

 80%

வைசியர்கள்

6%

   10.5%

   12%

     13%

60%

 9%

சூத்திரர்கள்

52%

    8%

   12%

      7%

1.8%

 4%

சிறுபான்மையினர்

10.5%

    3%

   1.5%

      2%

0.8%

 1%

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்

15%

   15%

    6%

      4%

0.3%

 0.5%

பழங்குடியினர்

7.5%

   7.5%

   2.5%

     1%

0.1%

0.5%


மண்டல பரிந்துரைப்படி சத்திரியர்களாக அடையாளப்படுத்தப்படும் 5.5% மக்கள் இந்திய தேசமெங்குமிருந்த குருநில மன்னர்களின் பரம்பரையினர் (மன்னர் மானியம் பெற்றவர்கள்), மத்திய மாநில அரசுகளின் முதல்நிலைப் பணிகளில் உள்ளவர்கள் (இந்திய ஆட்சிப்பணி உள்ளிட்ட உயர்ந்த பதவிகளில் வகித்து வருபவர்கள்). மேற்படி குறியீட்டில் 90% ஆரியர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள போதும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஆரியரல்லாத முன்னேறிய சாதியினர் 10% உள்ளனர் என்று புரிந்து கொள்ளலாம்.

6% வைசியர்கள் என்ற பிரிவினில் தேசிய, தரகு, பிராமண முதலாளிகளும், சேட் பிராமணர்கள் அவர்களின் கடைசி பிரிவினராகும் … பிராமணரல்லாத முதல் வைசியர் அநேகமாக மகாத்மா காந்தியாகவே இருப்பார்.

6% வைசியர்களில் பிராமணரல்லாதோர் 1% மட்டுமே இருக்கக்கூடும்.

பள்ளிக்கல்வியில் மாணவர்களின் நிலை (1881-82)

மாணவர்கள்

நடுநிலைப் பள்ளி பயனாளி

உயர்நிலைப்பள்ளி பயனாளி
கிறித்தவர்கள் 1.429 12.06 111 2.26
பார்ப்பனர்கள் 3.639 30.7 1987 40.29
விவசாயிகள் 624 5.26 140 2.85
தாழ்த்தப்பட்டவர்கள் 17 0.14         
பிற்படுத்தப்பட்டவர்கள் 3823 32.25 1573 32.04
முகம்மதியர்கள் 687 5.8 100 2.04
பார்சியர்கள் 1526 12.87 965 19.66
மலைவாழ் மக்கள் 6 0.05 0 0
ஜீக்கள் 103 0.87 92 0.86


இந்திய சுதந்திரப் போரினை சத்திரிய பிராமணர்களையும், பிராமணர்களையும் ஒரு நூலில் கோர்த்து வைசிய பிராமணர்கள் நடத்தி வென்ற பின்பு, இந்திய தேசமெங்கும் பிராமணரல்லாத மக்கள் அரசியலில் குதிக்க ஆரியர்கள் தங்கள் பிடிமானத்தை இழக்கத் துவங்கினர். தென்னகத்தின் காமராசர் டெல்லியில் கால் பதிக்க, பிராமணரல்லாதோரின் வேகம் கூடியது. வைசிய பிராமணர்களின் ஆதிக்கத்திலிருந்த 14 பெரிய இந்திய ஷெட்யூல் பாங்குகள் (1. சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, 2. பாங்க் ஆப் இந்தியா, 3. பஞ்சாப் நேஷனல் பாங்கு, 4. பாங்கு ஆப் பரோடா, 5. யுனெடெட் கமர்சியல் பாங்கு, 6. கனரா பாங்கு, 7.யுனெடெட் பாங்கு, 8. தேனா பாங்கு, 9. சிண்டிகேட் பாங்கு, 10. யூனியன் பாங்க் ஆப் இந்தியா, 11. அலகாபாத் பாங்கு, 12. இந்தியன் பாங்கு, 13. பாங்க் ஆப் மகாராஷ்டிரா, 14. இந்தியன் ஓவர்சீஸ் பாங்கு) அரசுடமையாக்கப்பட்டது. 19-07-1969 ல் ரூ.50 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகள் உள்ள இந்திய ஷெட்யூல்ட் பாங்குகள் மட்டும் விதி விலக்கிலிருந்து தப்பித்தது.

வங்கிகள் தேசவுடமையாக்கப்பட்டதனால் வைசிய பிராமணர்களின் அசுர வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டது. பின் 2-12-1971 அன்று மத்திய அரசு கொண்டு வந்த மன்னர் மானிய ஒழிப்பில் நேரடி பாதிப்பை அடைந்தவர்கள் சத்திரிய பிராமணர்களே. உச்சநீதி மன்றத் தடையினை அடுத்து முறையான திருத்த மசோதா நிறைவேறியது.

சத்திரிய பிராமணனின் தலையில் கை வைத்தபோது கொதிக்கிறது வைசிய பிராமணனின் ரத்தம்.

“தேசம் விடுதலையடைந்த போது சமஸ்தானங்கள் ஆதிபத்திய அதிகாரங்களை மட்டுமின்றி தமது அரசு பொறுப்புகளையும் விட்டுக் கொடுத்து தேசத்தின் ஐக்கியம் துரிதமாகக் கை கூடுவதற்கு துணை புரிந்தனர். இது பெரிய தியாகம் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு இணங்கியதற்காக அவர்கள் நிம்மதியுடன் வாழ ராஜ மானியத்தையும், சில விசேச உரிமைகளையும் அப்போது துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அளித்தார். அவர்கள் யூனியன் சர்க்காருக்கு தமது அதிகாரத்தை மாற்றிய உடன்படிக்கைகளில் ராஜ மானியங்களும், தனி உரிமைகளும் இடம் பெற்றன. அதனை அரசியல் சாசனத்திலேயே இவற்றை சேர்த்து உறுதி செய்திருக்கிறார்கள். சர்தார் அளித்த இந்த இரட்டைப் பாதுகாப்பைத் துச்சமாக மதித்துக் கிழித்தெறிந்து விட்டார் திருமதி. இந்திராகாந்தி. செய் நன்றியை கொன்ற குற்றம் மட்டுமின்றி வாக்கு மீறிய குற்றமும் இதில் சேர்ந்திருக்கிறது. ஆகையால்தான் இது நமது தர்மத்துக்கும் பண்பாட்டுக்கும் புறம்பான அடாவடிச் செயலாகிறது.”

(4-12-1971 - தேதியிட்டு தினமனி தலையங்கம்)

தினமனி பத்திரிகை செய்தி நமக்கு புரிய வைப்பது கோவில் நுழைவு என்பது தலித்துக்களுக்கு மாத்திரம் பொருந்தாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

மதுரையிலுள்ள மோதிலால் நிலையம், வைசிய வாலிபர் சங்கம், நெல்மண்டி வாலிபர் சங்கம், லஜபதி நிலையம், வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம், சுதந்திர தின ஞாபகார்த்த வாசக சாலை, யாதவ வாலிபர் சங்கம், வர்த்தகத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் சேவாஸ்ரமம், ஸ்ரீ மதிகள் சங்கம், அரிஜன சேவா சங்கம், செங்குந்த இளைஞர் சங்கம், நேரு வாசக சாலை, நித்தியானந்த நிலையம், பாரதி நிலையம், சித்த வைத்திய ஆராய்ச்சி சங்கம், சரஸ்வதி வாசக சாலை, ஜவாகர் வாசக சாலை, அரிஜன முன்னேற்ற வாலிபர் சங்கம், ஜான்சி ராணி வாசக சாலை, கமலா நேரு வாசகசாலை, விவேகானந்தா இளைஞர் சங்கம், தாகூர் வாசக சாலை, சிவ-ராவ் வாசகசாலை, பாரதி சேவா சமாஜம், பாரத மாதா வாசக சாலை, அன்சா, வாசக சாலை, அகம்படியர் வாலிபர் சங்கம், வேளாளர் அபிவிருத்தி சங்கம், பாபு கானு வாசக சாலை, நாயுடு வாலிபர் சங்கம்,இ இந்திய சுதந்திர வாலிபர் சங்கம், நாடார் ஊழியர் பிரசார சபை, தென்னிந்திய விஸ்வகர்மா சங்கம், பாண்டிய வேளாளர் சங்கம், விஸ்வகர்மா கைத்தொழிலாளார்கள் சங்கம், சிதம்பரம்பிள்ளை வாசக சாலை, சலவைத் தொழிலாளர் சங்கம், விஸ்வகர்மா வாலிபர் சங்கம், விஸ்வகர்மா இளைஞர் சங்கம், மருத்துவர் சங்கம் - ஆகிய ஸ்தாபனங்கள் மற்றும் பல ஸ்தாபனங்கள் ஆதரவில் நேற்று மாலை ரிட்டையர்டு சப் ஜட்ஜ் ஸ்ரீ.எஸ்.சுப்பிரமணிய பந்துலு தலைமையில் திலகர் சதுக்க மைதானத்தில் நடைபெற்ற பெருத்ததோர் பொதுக்கூட்டத்தில்,

1. “மதுரை மாநகரிலுள்ள மேற்கண்ட சங்கங்களின் ஆதரவில் கூடியுள்ள மதுரை வாசிகளும் மற்றவர்களும் அடங்கிய இக்கூட்டம் சென்னை சட்ட சபை ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஆலயப் பிரவேச சட்டம் வெற்றிகரமாகவும் அமைதியோடும் நடைபெற்று வருகிறதென்றும், அச்சட்டத்தை மாற்றவோ நிறுத்தி வைக்கவோ எவ்வித நியாயமோ, காரணமோ இல்லை என்ற சர்க்கார் உத்தரவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறதென்றும், அவ்வுத்திரவை ஸ்திரமாக நிலை நிறுத்த வேண்டிய அவசியத்தை சர்க்காருக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறது.

2. “இத்தடன் ஆலயப் பிரவேசச் சட்டத்தை அனுசரித்து இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், திருநெல்வேலி முதலிய இடங்களிலுள்ள கோயில்களையும், சகல இந்துக்களுக்கும் திறக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்று சர்க்காரை கேட்டுக் கொள்கிறது.” எனும் தீர்மானங்கள் பலத்த கரகோஷங்களுக்கிடையே நிறைவேறின.

(நன்றி 4-3-1940 - தினமனி)

(ஆலயப் பிரவேசச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சட்டமென்று பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவை அடிப்படையில் உண்மையற்றது. பிராமணரல்லாதோர் எழுச்சியின் பலனாக கிடைக்கப் பெற்றது. வரலாற்றினை தவறாக படிப்பவர்களைத் திருத்துவோம். பிராமண சிந்தனையினை அப்புறப்படுத்துவோம். இடையில் பிற்படுத்தப்பட்ட பிராமணர்கள் மற்றும் முன்னேறிய பிராமணரல்லாதோர் சாதிகளில் ஆரியர்கள் தோன்றாவண்ணம் சதுர்வர்ண நான்கு அடுக்கினையும் அப்புறப்படுத்துவோம்.)

தமிழகத்தில் நீதிக்கட்சி தோற்றுப் போன போனது அதில் தலைமையேற்ற சைவ வெள்ளாளர்கள் மற்றும் தங்களை உயர்சாதியினர் என்று கூறிக்கொள்ளும் பணக்கார சூத்திர சாதிகளின் மனநிலையில் இல்லாத நேமையினால் ஏற்பட்டது (சைவ வெள்ளாளர்கள் இன்று வரை தாங்கள் சூத்திரர் அல்ல என்றே வாதிடுகிறார்கள்).

முத்து மோகனின் வேதாக்கத்தின் கலாச்சார அரசியல் பக்கம் 31-ல் பதிவு பெற்ற விபரங்களே அத்தாட்சியாகும்.

வட்டார மேட்டுக்குடி பக்தி இரண்டும் கெட்டான் தன்மை கொண்டது. இது வைதீகத்தோடு இரட்டை உறவு கொண்டது. வைதீக மேலாதிக்கத்தை இது ஒரு புறம் எதிர்க்கும். இன்னொரு புறம் வைதீகம் முன்மொழியும் வர்ண வரிசையை வட்டார மக்களிடம் பரப்பும். வைதீகத்தை எதிர்க்கும் போது இது அடித்தள மக்களை ஆரத்தழுவும். உள்ளுக்குள்ளேயே தனது மேலாண்மையை நிறுவிக்கொள்ள அவர்களை தன்னிலிருந்து பிரித்துக் காட்டும். தமிழ் சூழல்களில் வட்டார மேட்டுக்குடிகள் தமிழ் மொழியோடும், தமிழ் நிலத்தோடும்,
தமிழ் பண்பாட்டு உணர்வோடும் தம்மை இணைத்துக் கொண்டனர். இன்னொரு புறம் ஆகமங்களோடு வேதங்களும் தமது புனித நூல்களே என்று அறிந்து கொண்டனர். வட இந்திய வைணவ சைவ புராணங்களை தமிழுக்கு இறக்குமதி செய்து கொள்ளவும் இவர்கள் தயங்கியதில்லை.

இந்திய தேசமெங்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று வரையில் பின் தங்கியமக்களாக வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரத்திறகுப் பின் சிறிதளவு முன்னேற்றப் பாதையில் பயணித்த போதும், பிராமணர்களுடன் ஒப்பிடும் போது நிலவுடமை கொண்ட முன்னேறிய சாதிகளுடன் ஒப்பிடும் போதும் பொருளாதார, கல்வி பலத்தில் பின்தங்கி வாடுகின்றனர். மத்திய அரசின் 27% இட ஒதுக்கீடு விசயத்தில் தற்சமயம் வெற்றி இலக்குடன் நெருங்கி வருகின்ற சமயத்தில் தாழ்த்தப்பட்ட, மலைசாதி மக்களுடன் சிநேகமான தோழமை உணர்வினை வளர்ப்பதோடு, பரஸ்பர புரிதலும், இருதரப்பினர்களுடன் வளர்வது ஒன்றே இன்றைய உடனடித் தேவையாகும்.

பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முற்போக்கு இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்காய் களமிறங்குவதோடு தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்களைவிட தாழ்ந்த சாதியினர் கிடையாது என்ற உண்மையினை தமிழகத்து வீதிகளில் உரக்க முழங்க வேண்டிய நேரம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

இன்றைய இந்திய சூழலில் பார்ப்பனியம் பிராமணர்கள் வடிவில் இருப்பதற்கு நிகராக சூத்தர சாதிகளுக்குள்ளும், ஆதிசூத்திர சாதிகளுக்குள்ளும் நுழைந்து விட்டது. ஆகவே பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், தியோபிசிக்கல் சங்கம், இராம கிருஷ்ண மிசன், வைதீக சங்கராச்சாரியர் மடம் போன்ற அரசியல் பீடங்களை பிராமணரல்லாதோர் குறிவைக்கும்போது அவர்கள் தன்னைத்தானே ஒவ்வொருவரும் சுத்திகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிராமண, சத்திரியன், வைசியன் ஆகிய மூவருமே ஆரியர்கள் என்ற நிதர்சன உண்மை கூட ஆரியரல்லாத மக்களிடம் (குறிப்பாக படித்த. பண்பாளர்களிடம்) செல்லவில்லை. மார்க்சிய மற்றும் திராவிட தேசிய இயக்கங்களில் படிப்பாளிகளிடம் கூட முழுமையாக போய் சென்றடையவில்லை. தமிழகத்திலுள்ள பிராமணரல்லாதவர்களிடம், வர்ண விளக்க கல்வியை கொண்டு செல்ல திராவிட மார்க்சிய இயக்கங்களே தயக்கம் காட்டுகின்றனர். பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் மட்டுமே இத்தகைய கருத்துப் பிரச்சாரத்தை தீவிரமாகப் பரப்பி பல இடங்களில் கொடிய தாக்குதலைத் தமிழ் சமூகத்தைச் சுத்திகரிப்பதற்காகத் தாங்கி நின்றார். சர்- சூத்திரன் என்று புளகாகிதம் அடைந்த பிராமணனுக்கு கடும் சொல்லில் பாடம் நடத்தினார். தந்தைப் பெரியார் தன்னை சாதி நீக்கம் செய்து கொண்டதைப் போல, தமிழகத்தில் முற்போக்கு சிந்தனையாளர்கள் சாதி நீக்கம் செய்ய விரும்பவில்லை அதற்கு பிரதானம், சதுர்வண நூலடுக்கினில் சூத்திரனுக்கு மேலாக படியேறிச் செல்ல இயலுமா? என்ற ஏக்கம் ஏனென்றால் பலமான மூன்று அடுக்கினை (பிராமண, சத்திரிய, வைசிய) கொண்டிருந்த பிராமணர்கள் இன்று வலுவிழந்து விட்டனர். ஆரியர்கள் தமிழ் சமூகத்தில் அப்புறப்படுத்தப்பட்டதனாலே அவர்களின் மூன்றடுக்கினை கைப்பற்றத் துடிப்பவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் சமூகத்தை சீரழித்த ஆரியர்களை விட கேடு கெட்டவர்களாக வரலாறு அவர்கள் முகத்தில் உமிழும்.

இந்து மதம் என்பது இந்திய தத்துவங்களை உள்வாங்கிய மதம் என்பதை புரிய நடராஜகுரு, யதி உரையாடல்கள் நமக்கு உணர்த்தும்.

ஒரு முறை குரு நித்ய சைதன்யயதியும், நடராஜ குருவும் காரில் சென்று கொண்டிருந்த போது யதி அவர்கள் பகவத் கீதை புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டு வந்தார். திடீரென்று நடராஜ குரு யதியின் கையிலிருந்த பகவத் கீதையினை பிடுங்கி எறிந்தார். புத்தகம் தெருவில் புழுதியில் விழுந்தது. மிகுந்த கோபமடைந்த யதி காரிலிருந்து இறங்கி வந்து புத்தகத்தை எடுத்தவர் ‘எதற்காக இப்படி மூர்க்கத்தனமாய் நடந்துகொள்கிறீர் என்று நடராஜ குருவினை கண்டித்தார். நடராஜ குருவோ எவ்வித பதட்டமுமின்றி பகவத் கீதையின் முகப்பில் ‘இந்துக்களின் நூல் என்ற வாசகத்தை காண்பித்தார். பகவத் கீதை இந்து மதத்தின் நூலா? அல்லது இந்தியத் தத்துவ நூலா? என்று கேட்க யதியின் கண்கள் அன்று திறந்தன. ரிக், யசூர், சாமம், அதர்வன அடங்கு முறை (வேதங்கள்) நூல்களுக்குப் பிறகு பிராமணங்கள், ஆரண்யங்கள் என்ற இருவகை இலக்கியங்கள் இயற்றப்பட்ட பின் இந்தியத் தத்துவ நூல்களாக அவைகள் உருப்பெறவில்லை. உபநிடத காலமே (அறிவு தத்துவம்) இந்திய தத்துவ மரபின் வீச்சான பருவம். ஆரியரல்லாத மக்களின் அறிவினை ஆரியர்கள் சிறப்பாக பயன்படுத்தினர். இயற்கை பற்றிய தேடலைக் கொண்ட சாங்கிய தத்துவத்தை வேதங்கள் உள்வாங்கியது. யோகாசனம், தியானம், மனப்பயிற்சிகளை உள்வாங்கியது. வேதங்களை சாடிய சார்வாகத்தை வேரறுத்தது. ஆசிவக மரபில் உதித்த சமணத்தை கழுவிலேற்றி சமணக் கூறுகளை சிறிதளவு உள் வாங்கிக் கொண்டது. பின் பிரம்மம் பற்றிய தேடல் கொண்ட உபநிடதங்கள் காலத்திற்கு ஏற்றார் போன்று மறுதலிக்கப்பட்டது. பல அது பல விளக்கங்களை சங்கரரின் அத்வைதமாகவும், ரமானுஜரின் விசிட்டாத்வைதமாகவும், மத்துவரின் துவைதமாகவம் விரிந்து, அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன் வரையில் வளர்ச்சியைக் கண்டது. ஆகவே பகவத் கீதை ஒரு புறம் மாற்றங்களுக்கு உட்பட்டும், மற்றொருபுறம் “ஞானம் என்னும் நூலிலுள்ள மாலையிலுள்ள மணிகள்தான் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாம் என்று கிருஷ்ணனின் மாறாத வரிகளுக்குப் புறம்பாக குல தர்மங்கள் அழிவினைப் பற்றி ஆத்திரப்படுகிறது.

குல சஷயே ப்ரண ஸ்ரீ யந்தி குல
தர்மா ஸ நா த நா தர்மே நஷ்டே
குலம் கரு தஸ நமதா மோ பிப வத் யுத

நடராஜ குருவின் பார்வையில் பகவத்கீதை இந்திய தத்துவ நூல் பின் அது சவணர்களால் இந்து நூலாக்கப்பட்டது என்ற விபரம் யதியின் நெஞ்சில் ஆணியடித்தாற் போன்று பதிந்தது.

ஆகவே இந்துவாக வாழ்பவர்களுக்கு நான் குறிப்பிடுவது - இந்து மதத்தின் நான்கு அடுக்குகளை அப்புறப்படுத்துவோம். (ஐந்தாவது அடுக்கான ஆதிசூத்திரன் பொய்யானது - அவர்களின் இருப்பிடம் ஆரியர்களால் சுட்டிக்காட்டப்பட்ட நான்காவது அடுக்கேயாகும்).

ஆனால் இன்றைக்கு இந்திய தேசமெங்கும் பரந்து கிடக்கும், சாதி என்னும் அடுக்கு - திருமண உறவு, வழிபாடு, கூட்டுறவு போன்ற குடும்ப உறவோடு தொடர்புடையது. ஆகவே சாதி நீக்கம் செய்பவர்களை வரவேற்போம். சாதியடுக்கினில் வாழ விரும்புகிறவர்கள் வாழ்ந்து கொள்ளலாம். பிற சாதிகளைத் துன்புறுத்தாமல் - பிற சாதிகளைத் தனது சூத்திர சாதியை விட கீழானவையென்று கருதுவதற்கு அவர்களுக்கு (சூத்திரர்களுக்கு) எவ்வித ஆதாரமும், தார்மீக நியாயமும், விஞ்ஞானப்பூர்வ அறிவும் கிடையாது என்று நாளைய நமது குழந்தைகள் வளர்ந்த பின்பு நம் முகத்தில் காறி உமிழ்வார்கள்.

தமிழகத்து வீதிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் தமிழ் சிறுவர்களுக்கு தான் என்ன சாதி என்று தெரியாமல் விளையாடுகிறார்கள். அவர்களை சாதி மறந்து விளையாட விடுங்கள். அவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள். அவர்களுக்கு சாதி என்னும் சாக்கடையினை உணவாகத் தராதீர்.

அவர்கள் வளர்ந்த பின்னாவது இந்திய சாதிகளுக்கு ஒரு நீண்ட கல்லறையினைக் கட்டட்டும்... ஆரியர் மற்றும் அனைத்து பிராமணரல்லாத சாதிகள் நிம்மதியாக அந்தக் கல்லறையில் உறங்கட்டும்.