Monday, April 16, 2012

தேனி எம்.சுப்பிரமணிக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு


முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியராகவும், தமிழ் விக்கிப்பீடியா பயனர்-நிர்வாகிகளுள் ஒருவராகவும் இருந்து வருபவர் தேனி. எம்.சுப்பிரமணி. இவர் தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலை கடந்த 2010 ஆம் ஆண்டில் எழுதியிருந்தார். இந்த நூலை சிதம்பரம், மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டு இருந்தது.


தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் தமிழில் வெளியான நூல்களில் 31 வகைப்பாடுகளில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களில் கணினியியல் துறையின் கீழான வகைப்பாட்டில் தேனி எம். சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரம் 13 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தமிழ்த்தாய் விருதினை மதுரை தமிழ்ச் சங்கத்திற்கும், உ.வே. சா விருதினை புலவர் செ. இராசுக்கும், கபிலர் விருதினை பேராசிரியர் அ.அ.மணவாளனுக்கும், ஔவையார் விருதினை திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதிக்கும் வழங்கினார்.


இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாநூலை எழுதிய தேனி எம். சுப்பிரமணிக்கு சிறந்த நூலாசிரியர் பரிசுத் தொகை ரூபாய் முப்பதாயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். தமிழ் விக்கிப்பீடியா நூலை வெளியிட்ட மெய்யப்பன் பதிப்பகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் 27 நூலாசிரியர்களுக்கும் இந்நூல்களை வெளியிட்ட பதிப்பகங்களுக்கும், பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தேனி எம். சுப்பிரமணி எழுதிய முதல் நூலே தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் பரிசு பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நண்பர் தேனி எம்.சுப்பிரமணி மென்மேலும் பல பரிசுகள் பெற்று மேலும் சிறப்படைய வாழ்த்துவோம்.