Saturday, December 17, 2011

தி. மு. க. ச. கதை கேளுங்கள்....


மாறன்பட்டி என்று சொன்னவுடன் சுத்துபட்டி பத்து கிராம மக்களுக்கும் நினைவுக்கு வருவது அவ்வூரில் அரங்கேறும் விறு விறு அரசியல் திருப்பமும், புதுப்புது நிகழ்வும் தான் ஊருக்கு நடுவே மந்தையில் விரிந்து பரந்திருக்கும் ஆலமரமும் சாவடியும் தான் தி.மு.க.சவின் தலைமைச் செயலகம்.

தி.மு.க.ச என்றால் திருந்தியோர் முற்போக்குக் கட்டுப்பாட்டு சங்கம். மாறன்பட்டி கிராமத்தில் தி.மு.க.ச உருவாக, கால ஆரம்ப நிகழ்வுகளை நிறுத்தி சொல்ல வேண்டுமென்றால் ஐயா நெடுஞ்சுடரால் மட்டுமே முடியும். அறுபது வருட உள்ளுர் அரசியல் நிகழ்வுகளை மறக்காமலும் மறைக்காமலும் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஊர்ச் சாவடியில் ஐயா நெடுஞ்சுடர் துண்டை விரித்து அமர்ந்து விட்டாரென்றால் இளவட்டங்களும் ஊர் பெரிசுகளும் மந்தையை அடைத்து அமர்ந்து விடுவார்கள். பருத்திக் காட்டுக்கு கொல்லைக்கு போகிறவர்களும் ஆய அடக்கிக்கிட்டு மந்தையில் ஒக்காந்திருவாக… வகைக் கொன்றாய் கிளையில் அமர்ந்திருக்கும் பறவைகள் கூட கத்தறது நிறுத்தி செருமிக்கிட்டே, ஐயா பேசத் தொடங்கினா சுதந்திர கால மாறன்பட்டியிலிருந்து தொடங்கி கதை இன்னிக்கு வரைக்கும் ரயில்பெட்டி கணக்கா கோர்வையா கேக்கிறவ காதுல தேனா வந்து பாயும்.

மாறன்பட்டியில மொதல்ல தி.மு.க.ச நொடிந்த காலம் பூசாரிக தொல்ல நெறஞ்ச காலம் கெழக்கு கம்மா பூசாரி, காளியாத்தா கோவில் பூசாரி, கரட்டு முண்டக்கண்ணி கோவில் பூசாரின்று ஒரே பூசாரிக நாட்டாமை பராசக்தி கணக்கா பூசாரிக கொட்டத்த ஒடுக்க தெற்கு தெரு சாமிராமைய்யா கையில் தடியிடுத்து களமிறங்க, பூசாரிகளுக்கு ஆதரவா மன்னரு கோபாலரு களமிறங்க ஊரே ஒரு கருத்துச் சண்டையா கெடக்கும்.

கடவுள் இல்லையென்று சொன்னவன் யாரடா?

தில்லையில் போய் பாராடா..

கடவுள் இல்லையென்று சொன்னவன் நானடா?

தில்லையில் இருப்பது வெறும் கல்லடா?

அவங்க போடற கருத்து சண்டையிலதான் ஊரு சணம் புதுசு புதுசா வெசயத்த தெரிஞ்சிக்கிட்டாக

ஒழுங்கா போயிக்கிட்டிருந்த வண்டி எப்ப கொட சாய்ஞ்சிதுன்னா … ஐயா சாமிராமைய்யாக்கிட்ட இருந்தவருல்ல முக்கியமானவரு துரை அண்ணாச்சி.. அவரு மந்தையில பேசப் போறாருன்னா… சுத்துட்டி கெராமமே மாறன்பட்டியில கூடி ஊரே திருவிழா கணக்காயிருக்கும். மொத மொதல்ல உள்ளுர் பஞ்சாயத்து தேர்தல்ல நின்று மன்னர் கோவாலய்யா உருவாக்கின சங்கத்த தோக்கடிச்சு பஞ்சாயத்தை தி.மு.க.ச. புடிச்சிது. அவரு பெரசிடண்டாகி அல்லா கம்மாவையும் தூருவாரி ஊரே பச்சப்பசேலுன்னு இருந்திச்சு கம்மா நிறைய கெண்டையும், விராலும், சுறாவும் வாளையும் கெடந்து குதிக்கும். ஊருல எங்க திரும்பினாலும் ஒரே பருத்தி மண்டி கடை, அரிசி மண்டி கட, கடலமண்டி கடன்னு…. செழிப்பா கிடக்க.. ஊருக்காரங்க மதிய சாப்பாட்டுக்கு களப்பு கடைக்கு போவாங்களாம். எந்த பூசாரிப்பய செய்வென வெச்சானோ தெரியல திடீருன்னு துரையண்ணாச்சி செத்துப் போக ஊரு பூரா சனக்காடு மாருலயும் வவுத்திலயும் அடிச்சித் துடிச்சிப் போச்சி.

ஊரு முழுக்க எழவு மேகம் கூடி நின்னுச்சி. ஐயா போனதும் பாதி உசிராயிருந்த சனக்காடு கொஞ்ச கொஞ்சமா மனச தேத்திக்கிட்டு தி.மு.க.ச வுக்கு புதுசா ஐயா கருணாகர பாண்டியன தலைவரா தேர்ந்தெடுத்தாக.

கத சூடு பிடிக்க ஊரு மந்தை பூரா ஐயா நெடுஞ்சுடர் வாயைப் பாக்க .. ஐயா தொடர்ந்தார்… தி.மு.க.ச.வில பெரிய்ய பெரிய்ய ஆளுக யிருந்தாலும் அதில கருணாகர பாண்டியன் கொஞ்சம் வெவரமானவரு. அவருக்கு பழக்க வழக்கம் அதிகம். தந்தி ஆபீசில வேல பார்த்த வெள்ளத் தாடிக்காரரு சப்போட்டா இருந்தாரு. ஒரு வழியா கருணாகர பாண்டியன் பெரசிடண்டாகி நல்லாத்தான் போய்க்கிட்டிருந்திச்சு.. திடீர்ன்னு எவனோ ஒரு பூசாரி செய்வன வெய்க்க ஊருக்குள்ள அரிசித் தட்டுப்பாடு. எங்கன பார்த்தாலும் கப்ப கெழங்கு.. அரிசி கட்டுபாட்ட தீர்க்க முடியில்ல..

திடீருன்னு பார்த்த ஜில்லா காரங்க எல்லாப் பஞ்சாயத்தையும் கலைச்சு புட்டாக. ஏற்கனவே சந்திரன் ஐயா தி.மு.க.ச வில யிருந்து பிரிஞ்சு அ.தி.மு.க.ச ன்னு ஒரு சங்கத்த ஆரம்பிக்க ஊரு எலந்தாரி பூரா ஐயா சந்திரன் பின்னால போக பொளப்பே நாறிப் போயிருமென்று ஐயா கருணாகர பாண்டியன் கலங்கி கிடக்க பொசுக்கினு ஜில்லாக்காரங்க .. எல்லா பஞ்சாயத்தயும் கலைக்க

உள்ளதும் போச்சுடா என் சென்றாயா - ன்னு ஐயா கருணாகர பாண்டியன தலயில துண்ட போட்டு ஓரமா ஒக்காந்து யோசிச்சாரு..

அம்மள கலைச்சி ஜில்லாகாரய்ங்க மண்டய ஒடய்க்காம விட மாட்டேன்னு தி.மு.க.ச காரங்க களமிறங்க பதிலுக்கு ஜில்லா காரங்க களமிறங்க… ஒரே அடிதடி… தி.மு.க.ச காரங்களுக்கும் ஜில்லா காராய்ங்களுக்கும் சரி சமமா அடி உழுந்திச்சு”

ஏற்கனவே சந்திரன் ஐயா நொம்பலம் பத்தாதுன்னு, மாவட்ட பஞ்சாயத்துகாரய்ங்க நொம்பலம்- போதுமடா சாமி… ன்னு ஐயா கருணாகர பாண்டியன் கம்மா ஓரத்தில நின்னு யோசிச்சிக்கிட்டு நிக்கறப்ப பொசுக்குன்னு ஜில்லா காராங்க பஞ்சாயத்து தேர்தல அறிவிச்சி புட்டாக.

ஏற்கனவே ஐயா கருணாகர பாண்டியன் தலைமையில இருக்கிற தி.மு.க.ச. வும், ஐயா சந்திரன் தலைமையில யிருக்கிற அ.தி.மு.க.ச வும் சரிமல்லுக்கு நிக்க ரெண்டு பேரும் ஊரு மந்தையில மாறி மாறி செலம்பாட ஒரு வழியா தேர்தல் முடிஞ்சு முடிவுக்காக ஊரு சனமே மந்தயில கூடி கெடக்காய்ங்க.. தேர்தல் அதிகாரி சரிய்யா சாயந்திரம் நாலு மணிக்கு முடிவ அறிவிச்சாக

ஐயா சந்திரன தூக்கிக் கிட்டே நாடே கோ… கோ …ன்னு உச்சியில தூக்கி வெச்சி .. கொண்டாடிச்சி.. எங்கு பார்த்தாலும் சனக்காடு மாலையையும், பூவையும் போட்டு ஐயா சந்திரன வரவேற்க … கருணாகர பாண்டியன் ஐயா.. நமக்கெதுக்குடா வம்புன்னு பேசமா ரெண்டு புத்தகத்தையும் பேனாவையும் எடுத்திக்கிட்டு கரட்டோரமா ஒதுங்கிட்டாரு. எங்கன பார்த்தாலும் எல தலயா மொழச்சி ஊரே பச்சப்பசேலுன்னு கெடந்திச்சு..

எப்ப பாரு ஊருக்குள்ள பஞ்சாயத்து எலக்சன் வந்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு சந்திரன் ஐயா ஜெயிச்சிப்புடுவாரு..

ஏழபாழய்களுக்கு ஏதாச்சும் செய்யாட்டி ஐயா சந்திரனால தூங்க முடியாது. ஊருளவுள்ள அத்தன சாதி சனமும் ஐயா மேல உசிராயிருந்தாக. ஐயா கருணாகர பாண்டியன் என்னென்னமோ செஞ்சி பாத்தாக.. மிசுங்க கூட முடியல..

அம்ம கையில என்னயிருக்கு. வர்றது வறட்டும்ன்னு ஐயா கருணாகர பாண்டியன் கெடக்க..

கொல்லயில போற காலன் நல்லவக வுசிர எடுக்கதுக்குன்னு வந்து ஐயா சந்திரன் வுசிர பறிக்க பத்து நாளக்கி ஊரு பூரா ஒவ்வொரு வீடும் எழவு வீடு கணக்கா துடிதுடிக்க… பொசுக்கின்னு ஜில்லா பஞ்சாயத்துக்காரய்ங்க பெரசிடெண்ட் எலெக்சன அறிவிச்சிப்புட்டாக..

“இந்த வாட்டி யில்லைன்னா அப்புறம் எந்த வாட்டியும் பெரசிடெண்டா ஆக முடியாதுடா கார்மேகம் ன்னு ஐயா கருணாகர பாண்டியன் எலந்தாரி கணக்கா நிக்க.. ஒரு வழியா பழய்ய பெரசிடெண்ட் பதவிய ஐயா கருணாகர பாண்டியன் புடிய்க்க … தி.மு.க.ச காரங்க மந்தையில துள்ளி துள்ளி குதிச்சாக..

ராமன் வனவாசம் போன கணக்கா சும்மா பன்னிரெண்டு வருசமா காய வுட்டுபுட்டாகப்பா.. ன்னு ஆனந்தமா கூத்தாட

எந்த பூசாரிப் பய செய்வென வெச்சானே தெரியல… பொசுக்குனு ஜில்லாகாராய்ங்க ஒரே வருசத்தில பஞ்சாயத்த கலைக்க … தி.மு.க.ச. காரங்களுக்கு அழுக அழுகய்யா வந்திச்சி.

அதுக்கப்பறகு வந்த பெரசிடெண்ட தேர்தல்ல தி.மு.க.ச. தோக்க.. ஒரு மனுசனுக்கு இம்புட்டு சோதனையாடா வரணுமன்று… ஐயா கருணாகர பாண்டியனப் பாத்து அவங்க சங்கத்து காரங்கெல்லாம் ஆதங்கப் பட்டாக.

பெரசிடண்டு சேர எலந்த துக்கத்தில யிருந்த ஐயா மீளுறதுக்குள்ளார தி.மு.க.ச.வில பெரிய்ய ஆள வளந்திட்டு வந்த சாமி கோவாலு ஐயா வாட்ட சாட்டமா ஐயாட்ட மொரண்டு பிடிச்சிக்கிட்டு தோளில்ல கெடந்த கருப்பு துண்ட ஒதறி தள்ளிட்டு தெரு தெருவா போயி மொறயிட எளந்தரிக்க பூரா ஐயா சாமி கோவாலு பக்கம் சாய ஐயா கருணாகர பாண்டியன் “அம்மளுக்குன்னு யிம்பிட்டு சோதனையா வரணுன்னு கம்முன்னு மூலையில ஒக்காந்திட்டாரு”

எங்கிட்டிருந்துதான் காத்து அடிச்சிதோ தெரியில்ல.. எந்த அண்ணா மலசாமி புண்ணியமோ தெரியல… அடுத்து வந்த பெரசிடெண்ட் எலெக்சன்ல சைக்கிள்ள வந்த கருப்பசாமி ஐயா கருணாகர பாண்டியன் ஐயாவுக்கு கை கொடுக்க பழயபடி ஐயா பெரசிடெண்ட் ஆனாரோ யில்லையோ! ரொம்ப உசாராயிட்டாரு.

எப்பபாரு யிந்தா ஜில்லா காரய்ங்க அம்மகிட்டயே ஒரண்டயிழுத்து முழுசா ஐந்து வருசத்த முடிக்கவுடாம பண்ணுதுக யிந்த மொற ஜில்லா காராய்ங்களோட மோதறத நிறுத்திக்கிட்டு ராசியா போயிறுவோம்னு ஓசிக்க ஆரம்பிச்சாரு..

அப்புறம் பாத்தா ஒருக்க மாத்தி ஒருக்கன்னு தி.மு.க.ச.வும் அ.தி.மு.க.சவும் மாறி மாறி பஞ்சாயத்த புடிச்சிகிட்டு; அவகவகளுக்கு உள்ளது அவவகளுக்குன்னு ஊருக்குள்ள யிருந்தாக..

எடயில ரெண்டு பேருமா… மாத்தி மாத்தி சண்ட போட்டாலும் யாருக்கும் சேதாரம் இல்லாமத்தான் இருந்திச்சி. ஆனா போன பெரசிடெண்ட் எலக்சன்ல தி.மு.க.ச. செயிச்ச பின்னால சங்கத்து காரக ஆட்டத்தினால வண்டி கொஞ்சம் கொட சாஞ்சி போச்சி

கூட பொறந்ததுக.. கட்டயில போறதுகன்னு புதுசு புதுசா சங்கத்துக்காரங்க மெம்பரா சேர பழய சங்கத்து மெம்பருக்கு மருவாதியில்லாம போச்சி கத்தி, கம்பு, ஆட்டம்னு அதுக அதுக ஆட்டம் போட்டிச்சிக.. தாட்டியம்னா தாட்டியம் அம்புட்டு தாட்டயம்

சும்மா தூர் வார்றதுலயிருந்து, கக்கூஸ், தெரு விளக்கு அங்க யிங்கன்னு சங்கத்துகாரக கைவெய்க்க.. இந்த வருச எலெக்சன்ல தி.மு.க.ச.வோட குடியே முழுகி போச்சி “எலெக்சனுக்கு முன்னால அப்பப்ப நடந்த வார்டு தேர்தல்ல போடு போடுன்னு போட்ட தி.மு.க.ச. பஞ்சாயத்து பொது தேர்தல்ல குப்புறக்க படுத்த பாய்ச்சான் கணக்கா எந்திரிக்க செறம படறமாதிரி ஆயி போச்சி. ஏண்டா யிப்படின்னு பின்னால திரும்பி பாத்த பின்னாலதான் தெரிஞ்சிச்சி

“சங்கத்து காராக அஞ்சி வருசமா போடு போடுன்னு புகுந்து வௌயாடியிருக்காக”

இப்பெல்லாம் ஊருக்குள்ள போலிசு அடிக்கடி வருதுக … கேஸ் கீஸ்..ன.னு தி.மு.க.ச. வ போட்டு உலுப்பு உலுப்புன்னு உலுப்பி எடுக்கிறாங்க..

போன பீரியடுல்ல ஐயா கருணாகர பாண்டியன பாத்து சல்யூட் அடிச்ச போலிசெல்லாம் இப்ப அய்யாவ பாக்கறப்பெல்லாம் மொறய்க்கற மாதிரி இருக்குது. இப்பெல்லாம் ஐயாவுக்கு போலீச பாத்தாவே புடிக்க மாட்டீங்குது.. உள்ளுர் போலிசு தான் மோசம்னா வெளியூர் போலீசு ரொம்ப மோசம்.

போர போக்க பாத்தா சங்கம் பூரா ஜெயிலுக்கு போயிருமோன்னு பயமாயிருக்கு … பேசாம அடுத்த சஙகப் பொதுக்குழுவ பாளையங்கோட்டையிலேயோ வேலூரிலயோ போட்டோ கூட ஆச்சர்யப் பட முடியாத அளவுக்கு நெலம படு சோசம்.

ஆறாவது நமக்கு ஆதரவா பேசுவாங்கன்னு பாத்தா ஒரு பய கூட சொய மரியாதையோட வாழறவன் மாதிரி தெரியல.. பண்பாட்ட தொலச்சது மில்லாம.. பவத்தறிவயும் எழுந்து புடிச்சீக… மூதேவிக.. ஊருக்குள்ள எல்லா பயலுகளுக்கும் ஈரல் கெட்டு போச்சின்னா வசலா முன்னு பாத்தா .. பயம்மா யிருக்கு.. ஏன்னா முன்னம் கணக்கா ஏது சொன்னாலும் பய புல்ல மனசுக்குள்ளேயே வெச்சிபுட்டு ஓட்டு போடாம டயத்துல ஆப்படிக்குதுக. ஏற்கனவே நம்மூருகாரகள வெளியூருக்காரய்ங்க கொத்து கொத்தா கொன்னப்ப எதுக்கு மாவட்டத்து பஞ்சாயத்த பகக்கணும்னு நம்ம பேசாம யிருந்தது எம்புட்டு பெரிய்ய தப்புன்னு இப்பத்தான் தோணுது. கூடாநட்பு நம்மள இங்க கொண்டு உட்டுபுடிச்சி.. ன்னு ஐயா அழுதாலும் சிந்தறதுக்கு ஆளில்லை.

அ.தி.மு.க.ச காரக ஏதாச்சும் தப்பு பண்ணா பழயபடி நம்ம தெசயில காத்தடிக்குமான்னு ஐயா கருணாகர பாண்டியன் கண்ணாடிய கழட்டிக் கழட்டிப் பாக்கிறாரு. ஊரு பஞ்சாயத்து ஸ்கூல்ல வந்த பொத்தக பிரச்சனையை வெச்சி ஒரு வருசத்த கடத்திப்புடலாமுன்னு பாத்தா ஊரு நாட்டாமக பொசுக்குனு சோலிய முடிக்கிறாப்ல தீர்ப்ப வேற சொல்லிபுட்டாக..

அருகில் இருக்கிற பரமத்தியில துப்பாக்கிய வெச்சி பஞ்சாயத்துக் காரக வெறட்டுனத வெச்சி பொளப்ப நடத்தலாம்ன்னு பார்த்தா இப்ப நடந்த உள்ளுர் வார்டு எலெக்சன்ல தி.மு.க.ச. ஆப்படிச்சிபுட்டாக..

அ.தி.மு.க.ச காரக நம்ம மேல இம்புட்டு காண்டமா கெடக்கய்ல்ல.. நம்ம சங்கத்துக் காரக ஒண்ணா நிக்கலாமுன்னு பாத்தா காச பாத்தது ஒவ்வொண்ணா கழற பாக்குது.

கையக்கட்டி ஓட விட்டாக, கால கட்டி ஓட விட்டாகன்னு எம்புட்டு தான் தொல்காப்பிய நடயில எழுதினாலும் கடந்த வார்டு எடைத்தேர்தல்ல நம்ம பண்ண அக்கிரமத்த ஊரு காரக மறக்க மாட்டீங்குதுக..

ஐயா நெடுஞ்சுடர் கதய முடிக்க போறத தெரிஞ்சிக்கிட்டு சாவடியில ஒக்கார்ந்திருந்த தி.மு.க.ச. காரர்களும் அ.தி.மு.க.ச காரர்களும் எந்திரிக்க தோதா துண்ட ஒதருனாக.

போன பீரியடில்ல பாத்தியா தி.மு.க.ச. காரகளுக்கு எம்புட்டு சவுரியத்த பண்ணிக் கொடுத்து அவகவக வாய்க்கு ருசியா.. தின்னிருக்காக நம்ம சங்கத்தை பார்த்தியா.. நம்மள கொஞ்சமாவது திங்க வுடுதுகளா… தி.மு.க.ச. கணக்கா வுடாட்டியும் பரவாயில்ல .. ஏதாச்சும் கொஞ்சமாவது அங்ஙன யிங்கனயாவது மேயவுட லாம்ல்ல- ன்னு அ.தி.மு.க.ச. காரக பேசிக்கிட்டே கௌம்ப

திடுதிப்புன்னு ஏறுன கட்டணத்தைப் பாத்து தி.மு.க.ச. காரங்க செத்த மூச்ச உள்ள இழுத்திட்டு சொன்னாக “ஊருக்குள்ள எம்புட்டு பேர பாத்திருப்பாரு அவரோட அனுபவம் சங்கத்த காப்பாத்தணும். அடுத்த பிரசிடெண்ட் எலெக்சன்ல்ல செய்கிரதுயிருக்கட்டும் இப்ப செயில்ல இருக்க நம்ம சங்கத்துகாரகள பெயில்ல எடுத்து கேஸ் - தண்ணியில்ல யிருந்து மொத காப்பாத்தி நம்ம சங்கத்த கர சேக்கணும்ன்னு ஆத்தா மாரியாத்தாள வேண்டிகிட்டு தி.மு.க.ச. காரக வெரசா மந்தய விட்டு வீட்டுக்கு நடந்தாக. மனசாட்சி வுள்ள தி.மு.க.ச.காரங்க அன்னிக்கு அம்ம வீரத்த கோர்ட்ல்ல காட்டினோம். இன்னைக்கு நீதிமன்றத்த வெச்சி நம்ம மானத்த காப்பாத்தறோம்.

கறுப்பு சட்டையில ரத்த கரய உண்டாக்கினோம். இப்ப கறுப்பு சட்டயில்லைன்னா நம்மள கோவணத்த கழட்டி வெளுத்திருப்பாக.. ன்னு சொல்லிட்டே வீட்ட நோக்கி....

1 comment:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

Post a Comment