Saturday, August 27, 2011

தமிழகத்து பிராமணரல்லாதோர் இயக்கமும் , கேரளத்து பிராமணர் மறுப்பு இயக்கமும்-2

2. சாதிய மறுப்பில் பெரியார்., காந்தி...


“தமிழ் மொழி பற்றி, அதன் கலாச்சாரம், வரலாறு பற்றி ஒரு பகுத்தறிவான, சமநிலையான அணுகுமுறையை நாங்கள் உருவாக்க வேண்டியது அவசியம். தமிழ் ஒரு தென்னாசிய மொழி. தமிழ் இலக்கியமும் சமஸ்கிருத இலக்கியமும் சேர்ந்துதான் ஒரு தென்னாசியக் கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கின்றன. தமிழின் தொன்மை குறித்து வெறித்தனமாக பாராட்டுவதோ அல்லது சமஸ்கிருதத்தின் மரபு பற்றி எதிராக எண்ணுவதோ தவறு. உலகத்து மொழிகள் அனைத்தையும் போல, கலாச்சாரங்கள் போலத் தமிழும் ஆதியிலிருந்து வேற்று சக்திகளால் மாற்றமடைந்து வந்திருக்கிறது. தமிழ் தன் தனித்தன்மையையும் பண்பையும் வீரியத்தையும் 2000 வருடங்களாகக் காப்பாற்றியிருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் அது பலவித கலாச்சாரங்களுடன், மரபுகளுடன், சமயங்களுடன் கொடுத்தும், வாங்கியுமிருக்கிறது. இதுதான் அதன் பலம். இதை மனதில் கொண்டு தமிழ்க் கல்விமான்கள் சமஸ்கிருதத்தின் மேன்மையையும் மதிப்பையும் உணர வேண்டுவது முக்கியம். சமஸ்கிருதம் பல்லாயிரம் வருடங்களாகப் புலவர்களின் மொழியாகத் தென்னாசியாவில் இருந்ததோடு இந்து, புத்த, ஜைன மதங்களின் மொழியாகவும் இருந்திருக்கிறது.” (தமிழாசிரியர் ஜார்ஜ் எல்கார்ட், காலச்சுவடு அக்டோபர் 2005 பக்கம் - 52)

தந்தைப் பெரியார், சூத்திரர் - தலித் ஒற்றுமைக்கு முயற்சித்தார். ஆனால் அது நடக்கவேயில்லை. உண்மையில் மண்டல் கமிஷன் அறிக்கையில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. தலித் பிரிவினருக்கும், இதர பிற்ப்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இடையிலான முரண்பாடு எழக்கூடிய கடைசி இடமாகத் தான் தமிழகம் இருக்குமென அவ்வறிக்கை கூறியது. (ஆதாரம் - சித்தாந்தமற்ற அரசியல் அதுவே தமிழகத்தின் துயரம் - ஈழப் பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி (மார்க்சிஸ்ட் ஜீன் 2003, பக்கம் - 43))

திராவிட இயக்கத்தின் பாதையை நாம் திரும்பிப் பார்த்தோமெனில் பிராமணரல்லாத பல சாதிகள் ஒருங்கு சேர்ந்த ஓர் புதிய “வர்க்கம்” அன்றைய சென்னை மகாணத்தில் உருவான மிக முக்கியமான முதன்மையான நிகழ்வினைக் காண இயலும். பிள்ளைமார்கள், நாயர்கள், கம்மா, காப்பு ரெட்டியார்கள் உள்ளிட்ட கூட்டணியாகும். (கார்த்திகேசு சிவதம்பி நேர்காணல் - மார்க்சிஸ்ட் ஜீன் 2003 பக்கம் 39)

சமஸ்கிருதம் ஆரிய மொழி என்ற வாதம் தமிழில் மனோன்மணீயம் நூலினை எழுதிய சுந்தரனார் தம்முடைய பாடலொன்றில் வடமொழியான சமஸ்கிருதத்தை பற்றிக் குறிப்பிடும் போது “ஆரியம்” என்று குறிப்பிடுவதைப் பிடித்து தொங்குகிறார்கள். திராவிட நாகரீகத்தை சேர, சோழ, பாண்டியரோடு முடித்து விடுகின்றனர். கரப்பா, மொகஞ்சதாரோ வடநாட்டில் உள்ளதைச் சுலபமாக மறைத்து விடுகின்றனர். ஆடு, மாடு மேய்ப்பவர்கள் சிறிய கலாச்சாரமானவர்கள் என்பது அவர்களின் தொழிலே சாட்சியாகும். (ஆதாரம் - காலச்சுவடு, அக்டோபர் 2005 - பக்கம் 52) (அழுத்தம் என்னுடையது)

கேரளச் சூழல், தமிழகச் சூழலிலிருந்து மிகுந்த வித்தியாசம் கொண்டது. ஏனெனில் தமிழகத்தின் சமூக விடுதலை இயக்கம் பலம் வாய்ந்த தமிழக சூத்திரர்களான சைவ வெள்ளாளார், செட்டியார் உள்ளிட்ட சாதிகளால் துவங்கி வைக்கப்பட்ட பின் தந்தை பெரியாரின் எழுச்சியே அதனை முன்னெடுத்துச் சென்றது. சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும், தமிழகத்தின் முந்தைய சூழ்நிலையிலிருந்து (ஆத்திக (சைவ + வைணவ) புதியதொரு (நாத்திக) சூழலுக்கு நகர்த்திச் சென்றது. கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு பேரிகையாக எதிரொலித்தது. தந்தை பெரியார் தன்னை சாதி நீக்கம் செய்துகொண்டவர். ராமசாமி நாயக்கர் என்று அழைத்த போது நீதிமன்றத்தின் வாசலில் நின்றிருந்தவர் நீதி மன்றத்துக்குள் செல்லவில்லை. தனது பெயரை ராமசாமி என்றே அழைக்க வேண்டுமென்று அழைத்தவர்களைத் திருத்தினார்.

கேரளச் சூழல் தமிழகத்துக்கு முற்றிலும் வேறானது. கேரளத்தில் அவர்ணர்களில் முதலானவர் ஈழுவர் என்ற போதும் தமிழகத்து அவர்ணர்களின் முதலாமானவரான சைவ வெள்ளாளரைப் போன்று பொருளாதார பலம், கல்வி அறிவு பெற்றவர்கள் கிடையாது. பந்தளம் பணிக்கர் மூர்கோத்து ஆசான் மற்றும் ஆயுர்வேதம் பயின்ற ஈழுவர்கள், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் படைவீரர்களாகப் பணி செய்த ஈழுவர்களே கல்வியறிவு பெற்றிருந்தனர். (ஸ்ரீ நாராயண குரு - மா. சுப்பிரமணியம்) தமிகத்தில் பரவலான கல்வி சாலைகளில் பிராமணர்கள் கல்வி கற்ற போதும், பிராமணரல்லாதோர் சிறிதேனும் கல்வி கற்க வாய்ப்பிருந்தது. கேரளத்துச் சூழல் வேத சாலைகளும் கிறிஸ்துவ மிஷினரிகளுமே ஆதிக்கம் பெற்றிருந்த காலம். கேரளத்து மக்களில் பெரும்பான்மையினர் கல்வி கற்க கடுமையான தடை இருந்தது. நாயர்கள் ஈழுவர்களை ஒடுக்க, ஈழுவர்கள் புலயர்களை ஒடுக்க, புலயர்களுக்கு கீழாக நூற்றுக்கணக்கான உழைக்கும் மக்கள் சாதியினர் இருந்தனர். அடர்த்தியான ஈழுவர் சமூகம் தீயர், சோவாஸ், பணிக்கர், முதலியார் என்று (திருவிதாங்கூர் , மலபார் , கொச்சி) பிரிந்து கிடந்ததோடு ஒருவருக்கொருவர் படி அடுக்குகளைத் தங்களுக்குள் கற்பித்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் படை வீரர்களான ஈழவர்களுக்கு ‘முதலியார்’ பட்டத்தைக் கேரளத்து சவர்ணம் வழங்கியது. முதலியார் பட்டம் பெற்ற ஈழுவன் திருவிதாங்கூர் அரசனிடம் மனு செய்தான். இதர ஈழுவர்கள் தங்களுக்கு கீழானவர்கள் என்று அறிவித்துப் பட்டயம் வழங்க கோரிக்கை வைத்தனர். (ஈழுவன்-சுப்பிரமணிய அய்யர் வருடம் 1906.) சுவாமி விவேகானந்தரின் சொல்படி “அன்றைய கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி” என்றே புரிந்து கொள்ளலாம்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தந்த வெற்றி பிராமணரல்லாதோர் எழுச்சியை உருவாக்கியது. பிராமண ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இராஜாஜி பதவி இழந்த போது ஆச்சாரியாருக்கு சல்யூட் அடித்த கை மாற்றானுக்கு சல்யூட் அடிக்காது என்று பார்ப்பன உயர் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தான். பிராமணர் ஆதிக்கம் பக்குவமாக திராவிட இயக்கங்களால் அப்புறப்படுத்தப்பட்டது. கேரள மறுமலர்ச்சி வரலாற்றில் 1888-ல் அருவிப்புரத்தில் ஸ்ரீ நாராயண குரு துவக்கிய ‘சிவலிங்க பிரதிஷ்டையே கேரள மறுமலர்ச்சி வரலாற்றில் பதியம் போட்ட முதல் பட்டியக் கல்லாகும். பார்ப்பனியத்தின் மீது விழுந்த பெருந்தாக்குதலென்றே வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகின்றனர். மற்றொரு மதிப்பீடு 3000 ஆண்டுகளாக பிழையாக வேதம் கற்பித்தவர்களுக்கு முறையாக வேதம் கற்றுத்தந்த நாளே அருவிப்புர பிரதிஷ்டை என்கிறது ரிக், யஜீர், சாமம், அதர்வனம் நாடோடிகளின் சடங்குப் பாடல்கள். (ஆதாரம் முத்து மோகனின் வேதாந்தத்தின் கலாச்சார அரசியல்).

கேரள பூமியில் ஸ்ரீ நாராயண குரு எடுத்த நிலைப்பாடு அனைத்து கருத்துக்களையும் உள்வாங்குவது, எதிர் நிலை எடுக்காது அனைவரையும் நேசிப்பது... குறிப்பாக உயர் சாதியினர் என்று அறியக்கூடிய மேட்டுக்குடி பண்பாட்டினையும், கலாச்சாரத்தையும் ஒடுக்கப்பட்ட மக்கள் சுவீகரிப்பது. மோதல் போக்கினை தவிர்த்து ஆக்கப்பூர்வமாய்ச் சிதைந்து போன பாதைகளை செப்பனிடுவது என்றே பயணித்தார். கேரளத்து ஈழுவருக்கும் சவணர்களுக்குமிடையே மோதல் போக்கு கலவரமாக நிகழவில்லை. அனைத்து விசயங்களையும் உள்வாங்கிக் கொண்டு தன்னைத்தானே பலப்படுத்திக்கொள்ளும் கொள்கை.

வேதங்கள், உபநிடதங்கள், பிரம்மசூத்திரங்கள், சமஸ்கிருதம் உள்ளிட்ட பிராமணர்களின் அனைத்து அறிவினையும் அபகரித்ததோடு, பின்தங்கிய மக்களின் பிந்தைய கலாச்சாரங்களை விட்டொழித்து ஒவ்வொருவரும் உயர்ந்த கலாச்சாரம் கொண்டவராக உருமாற அறை கூவினார். கள் இறக்கும் தொழிலைக் கைவிட்டு கைத்தொழிலைக் கற்றுக் கொள்ள அறைகூவினார். உடல் தூய்மையினையும், கல்வியுமே பிரதானம் என்று வாழ்விழந்த மக்களை அறை கூவி அழைத்தார். குரு, கள் இறக்கும் தொழிலைக் கைவிட ஈழுவர்களுக்குக் கற்றுத் தந்த கைராட்டை மகாத்மா கண்களில் பட்டபின் மகாத்மாவின் சிந்தனையில் ‘ராட்டை’ ஏகாதிபத்திய எதிர்ப்புக் கருவியானது.

ஸ்ரீ நாராயணகுருவின் அருவிப்புர பிரதிஷ்டை சாதாரண நிகழ்ச்சியன்று. தமிழகத்தின் வள்ளலாருக்கு நேர்ந்தது போன்ற படு பாதக கொலை ஸ்ரீ நாராயணகுருவுக்கு ஏற்படவில்லை. தமிழகத்து பிராமணர்களை விட கேரளத்து பிராமணர்கள் நேர்மையாக நடந்து கொண்டனர். தமிழகத்து பிராமணர்களின் வலுவினைப் போன்று கேரளத்து நம்பூதிரிகள் விளங்கவில்லை. கேரளத்து நமபூதிரிகளின் பலம் கேரளத்து சூத்திரர்களான நாயர்களுடன் கைகோர்த்ததனால் ஏற்பட்ட பலமே. ஸ்ரீ நாராயண குருவின் சிவப்பிரதிஷ்டை பிராமணர்களின் வேதாகம விதிப்படி நடந்தது. சவர்ணரான தங்களைக் கருவறை நுழைய விடாது தடுத்த நம்பூதிரிகளுக்கு அவர்ணர்களான ஈழுவரால் பதிலடி கிடைத்தது சரியென்றே அவர்கள் கருதினர். தங்களால் செய்ய இயலாததை ஈழுவர் செய்ததால் அருவிப்புர சிவபிரதிஷ்டை மீது நாயர்கள் தாக்குதல் தொடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நம்பூதிரிகள் வாங்கித் தந்த கள்ளினை உண்ட சில ஈழுவர்களே அன்று எதிர்ப்பு தெரிவித்தனர் என்ற போதும் ஸ்ரீ நாராயணகுருவின் பின்னால் திரண்டிருந்த சீடர்களும், பொதுமக்கள் ‘சிவபிரதிஷ்டையினை’ பாதுகாத்தனர் (குறிப்பு:-ஸ்ரீ நாராயணகுரு சிவபிரதிஷ்டையினை மன்னன் கேள்விப்பட்டு குருவை அரண்மனைக்கு அழைத்து பிரம்பால் அடித்த போது பிரம்பு அந்தரத்தில் நின்றதாக கூறுவது ஒரு கட்டுக் கதையாகும். குருவைப்பற்றி நூற்றக்கணக்காண கட்டுக்கதைகள் அன்றே பரப்பப்பட்டு இன்று வரை வாழ்ந்து வருகிறது. நான் கடவுளல்ல என்று குரு திரும்ப திரும்ப உரக்கக் கூறினார்)

கேரள பூமியில் ஸ்ரீ நாராயணகுருவைப் பொறுத்த மட்டில் சாதி நிராகரிப்புப் பாதையே குருவின் பாதையாகும். அருவிப்புர சிவப்பிரதிஷ்டைக்குக் கிடைத்த வரவேற்பும், ஒட்டு மொத்த கேரளமெங்கும் உழைக்கும் மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பும் கேரளமெங்கும் புதிய கோவில்களை நிர்மாணிக்கக் குருவினைத் தூண்டியது. அருவிப்புர கோவிலோடு குரு நிர்மாணித்த சபை கேரள பூமியெங்கும் தீவிரமாகச் செயல்பட்டது. திருவிதாங்கூர், கொச்சி, மலபார் என பலவாக, அரசியலாகப் பிளவுபட்டிருந்த கேரள மக்களின் கலை, இலக்கியம், பண்பாடு போன்றவை ஒன்று சேர்ந்தது.

குருவுக்கு பக்க பலமாக கேரளத்து பாரதியார் குமாரன் ஆசானும், நடராஜ குருவின் தகப்பனார் பல்ப்புவும் ஆலமரமாக குருவைப் பாதுகாக்க, கேரளத்து வீதிகளைச் சுலபமாக குரு செப்பனிட்டு சென்றார். கேரள சூழல் தமிழகச் சூழலைப் போன்று ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள் சில மோதல்கள் எழுந்தது. குரு நிர்மாணித்த தலைச்சேரியில் ஈழுவர்களுக்குக் கீழாக வாழ்ந்த அப்பாவி மக்களை ஈழுவர்கள் கோவிலில் நுழைய அனுமதிக்கவில்லை. ஈழுவர்களில் பெரும்பகுதி மக்கள் சனாதன ஈழுவர்களுடன் தொடர்ந்து மோதி வந்தனர். ஸ்ரீ நாராயண குரு சூழ்நிலைகளைக் கவனித்து வந்தார். திரைப்பட நட்சத்திரங்களின் ஆக்ரோஷ செயல்பாடு போன்ற செயல்பாடல்ல குருவின் செயல்பாடு. உணர்ச்சிகளுக்கு இரையாகாது அறிவுக்கே வேலை தந்தார். கோவில்களுக்குப் பதில் கல்விச்சாலைகள் மனிதர்களின் மனதினைப் பக்குவப்படுத்தும் என்ற சிந்தனைக்கு வந்து இருந்தார்.

புரட்சியாளர் ஐயப்பன், என்ற சகோதரன் ஐயப்பன் கேரளத்து ஈழுவர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கினார். சனாதன ஈழுவர்கள் அவரை புலையன் ஐயப்பன் என்று வசைமொழி பாடினர். அவரால் ஈழுவ சாதிக்குத் தீட்டு என்று ‘சாதி தீட்டு’ செய்தனர். ஈழுவ மக்களுக்கு சனாதான ஈழுவர்கள் அறைகூவினர். “சகோதரன் ஐயப்பனுக்கு பெண் தரும் ஈழுவர்கள் சாதி தீட்டுக்கு உள்ளாவார்கள் என்ற மிரட்டல் செய்தியை அனுப்பினர். சனாதான ஈழுவர்களின் மிரட்டல் புரட்சியாளர் ஐயப்பனின் பாதையினை தடுக்க இயலாது போனது. சகோதரன் ஐயப்பன் பின்னால் முற்போக்கு புரட்சிகர சிந்தனை கொண்ட ஈழுவர்கள் அணிவகுத்தனர். ஒருபுறம் குருவின் கேரள அமைதி யாத்திரையும் மற்றொரு புறம் புதியதாய் உருவான ஈழுவ அறிவு ஜீவிகளின் கருத்தியல் பிரச்சாரமும் சகோதரன் ஐயப்பனின் புரட்சிகரப் பயணமும் சனாதன ஈழுவர்களை கேரள வீதிகளிலிருந்து அப்புறப்படுத்தியது. (இடது சாரிகளே கேரளத்தை செப்பனிட்டார்கள் என்று வாதிடுபவர்கள் ஒரு விசயத்தை மறந்து விடுகின்றனர். இடது சாரி சிந்தனையை கேரள வீதியில உலவ விட்டவன் புரட்சியாளர் சகோதரன் ஐயப்பன் என்பதை சுலபமாக மறந்து விடுகின்றனர்” தோழர் பிரகாஷ் காரத்” உள்பட.) கேரள மறுமலர்ச்சி வரலாற்றில் ஆண்ட சாதிகளான நம்பூதிரிகள், நாயர்களை விட மிகுந்த நெருக்குதலை தந்தவர்கள் ஈழுவர்களே.

ஸ்ரீ நாராயண குரு ஈழுவ சமூகத்தினர் ஒற்றுமை பற்றி கேட்ட போது அவர்கள் கடல்புரத்து மண் என்றே கடுமையாக சாடினார். ஏனெனில் கடல்புரத்து மண் ஒன்றொடொன்று இணையாது உபயோகமில்லாதது என்றே பொருள். ஈழவர்களுக்கு எதிராக ஸ்ரீ நாராயண குரு கடுமையான வார்த்தைகளை பல முறை உபயோகித்த வார்த்தைகள் பதிவுகள் வாயிலாக தெரிவது “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகத்துக்கு முந்தைய ஈழுவன் சமூகம், “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகத்துக்கு பிந்தைய ஈழுவன் சமூகம் என்றே பகுத்துப் பார்க்க வேண்டும். “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகம் துவங்குவதற்கு முன் கேரளம் முழுக்க பட்டம் பெற்ற ஈழுவர்களை கணக்கெடுத்தால் விரல்விட்டு எண்ணி விட இயலும். ஆனால் இன்றைய கேரளத்தில் பட்டம் படிக்காத ஈழுவ குடும்பங்கள் அநேகமாக எங்கோ ஒன்று அரிதாகக் கிடைக்கும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஸ்ரீ நாராயண குருவை வெளிப்படையாக புரிந்து கொள்ள நினைப்பவர்கள் அவர் வாழ்ந்த சூழ்நிலையில் கேரள சமூகத்தின் கட்டமைப்பை புரிந்து கொண்டாலே ஸ்ரீ நாராயணகுருவை புரிந்துகொள்ள இயலும். ஏனென்றால் கேரள பூமியில் இன்று ஈழுவனை விட பொருளாதார மற்றும் பண்பாட்டு தளத்தில் சற்று பின்தங்கிய சாதிகளெல்லாம் கேரள பூமியில் ஒடுக்கப்படவில்லை என்றே புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பேரிகை சாதியினர் (தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகளாக அறியப்படுபவர்கள்) கேரள பூமியில் ஒடுக்கப்படாத சாதியென்றே புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலாக கேரளத்தில் ஒடுக்கப்பட்ட தலித் ஜாதியினர் புலயன் என்றே அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் புலயர் சமூகத்தில் பிறந்த அய்யங்காளி (1863-1948) அவர்களே புலயர் சமூகத்தை தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேற அறைகூவல் விடுத்த போராளி ஆவார். எழுதப் படிக்க தெரியாத புரட்சியாளர் அய்யங்காளி அவர்கள் ஒரு பெரும் பட்டாளத்தையே எழுதப் படிக்க தூண்டியுள்ளார். சமரசமற்ற இந்தப் போராளியின் பிறப்பினாலே புலயர் சமூகம் இன்றைய கேரளத்தில் பலமான வர்ணமாக, வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டுமென்றால் தற்போதைய கேரளத்தில் புலயர்களின் பலம் முன்னேறிய சாதிகளின் பலத்தினை போன்றதென்றே புரிந்துகொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்டோர் கல்வி, வேலைவாய்ப்புகளில் புலையர்களின் ஆதிக்கமே கேரளத்தில் அதிகம் ஆகும். புலயர் சமூகத்தின் எழுச்சிக்கு அய்யங்காளி ஒரு புறம் என்றாலும் மற்றொரு புறம் ஸ்ரீ நாராயண குரு என்றே கூறவேண்டும். கேரளத்தில் சவர்ணர்கள் (எதிர்) அவர்ணர்கள் போராட்டம் தீவிரமடைந்த போது ஸ்ரீ நாராயணகுருவைச் சந்தித்த ஈழுவ சமூக இளைஞர்கள் ஈழுவர்களை ஒடுக்குகின்ற நம்பூதிரிகள், நாயர்களை பலி வாங்க வேண்டுமென்றனர். அப்போது ஸ்ரீ நாராயண குரு அந்த இளைஞர்களிடம் கூறியது “முதலில் நீங்கள் புலயர்களை ஒடுக்காமல் இருங்கள்” என்றே கூறினார்.

கேரள பூமியில் ஈழுவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட சமூகமாய் அடையாளப்படுத்தப்பட்ட போதும், கடுமையான தாக்குதலை சந்தித்த சமூகம். “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொச்சியில் நடந்த போது சனாதன நாயர்களின் கடுமையான தாக்குதல் ஈழுவர்கள் மீது நிகழ்ந்தது. “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோக எழுச்சிக்கு பின் ஈழுவர்கள் பலம் பெற்றதை நாயர்கள் உணர மறுத்தனர். அதன் காரணமாக கொச்சி வீதிகளில் சனாதன நாயர்கள் ஈழுவ இளைஞர்களால் கடுமையான தாக்குதலுக்குள்ளானார்கள். ஈழுவர்கள் பலம் பெற்றதை உணர்ந்த நாயர்கள் ஈழுவர்களை சனாதனமாக்கினர். நெய்யாற்றின் கரை ஊருட்டம்பலத்தில் நாயர்கள் ஈழுவர்களின் உதவியுடன் புலயர்களைத் தாக்கினர். அய்யங்காளி அவர்கள் குருவிடம் முறையிட்டார். குரு நேரடியாக உருட்டம்பலம் வந்தார். ஈழுவர்களைக் கண்டித்தார். சாதிய ஒடுக்குதல்களின் போது ஈழுவர்கள் பாத்திரம் பாதிக்கப்பட்ட மக்களின் தோள்தானென்று அறிவுறுத்தினார். நாயர்களிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த நாயர்கள் இறங்கி குருவின் சொல்லுக்கு அடிபணிந்தனர்.

கேரள வீதிகளில் ஸ்ரீ நாராயண குரு கட்டமைத்த பாதைகளில் புலயர் சமூகம் வீறு கொண்டு முன்னேறியது. ஆகவே ஸ்ரீ நாராயண குரு என்னும் புள்ளி காலத்துக்குத் தக்கவாறு முடிவுகளை உருவாக்கி பரந்த சிறகுகளால் கேரளத்து வானத்தை சுத்திகரித்தது. “ஈழுவர்கள் பலம் பெற்றால் கேரள சமூகம் பலம் பெறும்” என்று வெளிப்படையாக ஈழுவர்கள் எழுச்சியை அங்கீகரித்தார். ஏனென்றால் 700 ஆண்டுகளாக புறம் தள்ளப்பட்ட ஒரு சமூகத்தை 25 ஆண்டுகளில் தலை நிமிரச் செய்தாரென்றால் மனித மூளையின் பலம் எத்தனை வசீகரமானதென்றே வியப்படைய முடியும். இன்றைய கேரளத்தில் அனைத்து சாதிகளும் ஈழுவ சமூகத்தின் திருமண உறவையே சுவீகரித்துக்கொண்டனர். கேரள மண்ணில் வைதீகக் கலாச்சாரத்தால் நேரடியாகத் தாக்குண்டவர்கள் ஈழுவர்கள் - நிஷ்காமிய என்பது புரோகிதம் சத்ரியர்களுக்குத் தரும் பண்பாட்டுக் கடமை - யாகங்களை தொந்தரவு செய்யும் மக்களை அழித்தொழிப்பது - நிஷ்காமிய புரோகிதப்படி ஈழுவ சமூக குழந்தைகள் 15 பேரை மார்த்தாண்ட வர்மன் யாகம் என்ற பெயரில் தீயிலிட்டு பொசுக்கிக் கொன்றான். (குறிப்பு - ஸ்ரீ நாராயண குரு பிறந்த வருடத்தை ஒட்டி நிகழ்ந்த சம்பவம் இது. யூதன் ஒடுக்கப்படும்போது ஒரு மோசஸ் உதிப்பது போல ஈழுவ ஒடுக்குதலின் பிறப்பே ஸ்ரீ நாராயண குருவாகும்)

தமிழகத்தில் பிராமணரல்லாதோர் இயக்கம் பலமடைவதற்கு சமூக சூழல் காரணியாக இருந்த போதும் தமிழகத்து வானில் தோன்றிய மின்னல் கீற்று ஒன்று “அய்யா வைகுண்டராய்” அவதரித்த போது தமிழகத்து வானில் வளர்பிறை ஒன்று மலர்ந்திருந்தது.

யூத அறிவே உலகின் சிறந்த அறிவு என்று வாதிடுபவர்கள் இந்தக் காவி உடை தரித்த நாடார் குல யூதரை மறந்துவிட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு 1888 ஆகும். நாடார் குலத்தில் அய்யா வைகுண்டர் பிறந்து வாழ்ந்தது (1809 - 1851) ஆகும். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பிரகடனப்படுத்தியதற்கு 30 வருடங்களுக்கு முன்பாக ‘தொல்புவியினிலடங்கா’ என்று சர்வதேச கீதம் பாடிய யூதனுக்கு நிகரான குலம் நாடார் குலம் என்பதன் அடையாளமே அய்யா வைகுண்டரின் வருகை ஆகும். ‘அன்புக்கொடி’ என்று தெரசா அன்னைக்கு முன்பு மனிதர்களை நேசித்த மகான். முறையினிலடங்கா - என்றார். இறைவனை ஒரு குறிப்பிட்ட வேத நூல்களில் மட்டும் தேடாதே என்றார். இறையினிலடங்கா என்றார். இறைவனைக் கூண்டுக்குள் அடைக்காதே உருவத்துக்குள் மறைக்காதே என்றார். மொழியினிலுமடங்கா- இறைவனுக்கு ஒரு தனி மொழி கிடையாது என்று மறுத்தார். யுகத்தினிலுமடங்கா என்றார். வேதகாலம், கலியுகம், மேலுலகம் என்றும் சொர்க்கம், நரகம் என்ற பிதற்றல்களை தூர எறிந்தார்.

அய்யா வைகுண்டர் பிறந்த பொழுது நாடார் சமூகத்தின் கைகளில் வாளொன்று பிறந்தது. சமரசமற்ற போரில் தடைகளைக் குதிரைகளின் பலம் கொண்டு தகர்த்தெறிந்து வெற்றியை தமிழகத்து போர்க்கலத்தில் பதிவு செய்தது. அய்யா வைகுண்டர் துவக்கி வைத்த ஓட்டப் பந்தயத்தை வென்ற பின்னே நாடார் சமூகம் ஓய்வெடுத்தது. கொடி கண்ட முதல் தமிழன் அய்யா வைகுண்டரே. ..

Tuesday, August 23, 2011

தமிழகத்து பிராமணரல்லாதோர் இயக்கமும் , கேரளத்து பிராமணர் மறுப்பு இயக்கமும்-1


1. வரலாற்றுப் பின்னணி

இந்திய உபகண்டம் புராதான கலாச்சார பண்பாடுமிக்க சமூகமாய் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுந்து நின்ற போது, எமது இந்திய தேசத்தை காரிருள் ஒன்று சூழ்ந்தது. நட்சத்திரங்களும் வெண்ணிலவும், நால்புறத்து நீல நிற கடலும், முத்துவும், பவழமும், வைடுரியமும் நம் சந்தைகளில் கூறுவைத்து விற்றகாலத்தில் நமது முப்பாட்டனின் முன்னோர்கள் விவசாய நெல்மணிகளை பிரிக்க யானை கட்டி போரடித்த காலம். பிராமணன் என்ற வர்ணமும் பின் தாசன் என்ற வர்ணமும் தாசனிலிருந்து இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் 6,400 சாதிகளும் உருவாகாத காலம். காரிருள் சூழ்ந்ததும் வானில் மின்னிய நட்சத்திரங்கள் கரிய இருளுக்கு பலியாவதற்கு விருப்பமின்றி தற்கொலை செய்து பூமியில் விழுந்து மரித்தது. இயற்கை தந்த வரங்கள் கொள்ளைக்கார படைகளாலும், பஞ்சம் பிழைக்க வந்த நாடோடிகளாலும் சீரழிக்கப்பட்டது. பண்பாடு, கலாச்சாரம் கொண்டு கரம் கேரளத்து நாடாண்ட மக்கள் கூறுகட்டி பிரிக்கப்பட்டனர். இந்திய தேசத்தை சூழ்ந்திருந்த காரிருள் பிரம்மன் என்ற ஒரு கொடிய பாம்பாக வாயை பிழந்து விழுங்கியது.

இருள் சூழ்ந்த நம் தேசத்தில் கொளுந்து விட்ட ஜிவாலைகள் வானில் தோன்றிய போதெல்லாம் அந்த கொடூர பாம்பு விழுங்கி உண்டது. மெளரிய, குப்த பேரரசுகள் இந்தியாவை ஆண்ட போது அந்தக் கொடூர பாம்பு கொழுத்துக் கிடந்தது.

கி.பி. 18ம் நூற்றாண்டில் இந்திய சமூகம் பிரம்ம விஷ ஜந்துவான பாம்பு தனது அந்திமக் காலத்தை எதிர் கொள்ளத் துவங்கியது. இந்திய தேசமெங்கும் வியாபித்த தீ ஜிவாலைகள் எழுச்சியுடன் கொளுந்து விட்டு எரியத் துவங்கியது. அன்றைய கேரளத்திலும், தமிழகத்திலும் பலமான மின்னல்கள், இடியோடு எழத் துவங்கியது. இடி முழக்கமும், மின்னல்களின் சக்தியும், வீரியமும் விஷ ஜந்துவான பிரம்ம நாகத்தைத் துடிதுடிக்க வைத்தது.

தமிழக, கேரள சூழல்கள் என்பது அன்றைய இந்திய சூழலுக்கு உட்பட்டது என்பதால், அன்றைய இந்திய சூழலை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக கேரள சூழல் என்பது திராவிட சமூக இரு பிரிவுகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். முந்தைய தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலப்பகுதிகளும் சாதிகளற்ற திராவிட சமூகத்தின் ஐந்து கூறுகள் ஆகும். மலை சார்ந்த பகுதி மக்களும். காடு சார்ந்த பகுதி மக்களும், வயல் சார்ந்த வாழ்வு வாழ்ந்த மக்களும், கடல் சார்ந்த மக்களின் வாழ்வுடன், பாலை நில மண் மக்களும் கலந்ததே பாரதத் திராவிட சமூகமாய் அடையாளப்படுத்தப்படுகிறது. நம் தேசத்தை ஆண்ட பரதன், மீனவ குலத்தில் பிறந்ததோடல்லாமல், இன்றைய இந்திய தேசத்தின் கடலினை போக்குவரத்தாக பயன்படுத்தி இந்திய தேசத்தை ஆண்டதால் நம் தேசம் பரத தேசம் என்றாகி பின்னர் பாரத தேசமாய் அறியப்பட்டது.

சதுர்வண, நால்வர்ண முறைக்கு இந்திய சமூகம் இறையாகிய பின்பு - பிராமண வா;க்கம் - இரண்டு பிரிவுகளாக பிரிந்து மோதத் துவங்கினர். பிராமண வர்க்கம் இரண்டாக பிளவுபட்டது. கல்வித்துறையில் மேலாண்மை பெற்ற வர்க்கம் அரசுத்துறையில் நாட்டம் கொள்ள தொடங்கினர். பிராமணர்களின் இந்த பிளவு இந்திய இரு பெரும் இதிகாசங்களான ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் எதிரொலித்தது. கல்வியே நமது குலப்பணி என்ற பிராமணர்கள் - வசிஷ்டரை குருவாகவும், அரசாள்வதே எங்களது பணியென்ற சத்திரியப் பிராமணர்கள் - விசுவாமித்திரரை தனது குருவாகக் கொண்டனர். சுதந்திரப் போராட்ட காலணிக் காலத்தில், திலகரும், அரவிந்தரும் சத்திரியராக வெளிப்பட, கோகலேயும், பானர்ஜியும் பிராமணராக மிதவாதியாக வெளிப்பட்டனர். வைசியர் என்னும் வர்ணம் வசிஷ்ட வம்சம் என்கிற குல புரோகிதர்களின் பரம்பரையாக இருந்தது. இந்திய சுதந்திரப் போரில் இந்த வசிஷ்ட வம்சம் தேசிய, தரகு முதலாளியாக பரிணமித்து, இந்திய சுதந்திர போரினை, பிராமண சத்திரிய பிராமணர்களை ஒன்றிணைத்து முன்னெடுத்துச் சென்றது. இன்றைய சேட் பிராமணர்கள் வைசிய பிராமணர்களின் கடைசி பிரிவு என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, பிராமணன், சத்திரிய பிராமணன், வைசிய பிராமணன் என்று ஆரியர்கள் சதுர்வணத்தில் பலமான மூன்று அடுக்குகளை கைப்பற்றிய பின்பு நான்காவது அடுக்கு சூத்திரன் ஆகும். பிராமணர் அல்லாத அனைத்து இந்தியர்களும் சூத்திரர் என்று புரிந்து கொள்ள வேண்டும். (மார்க்சிஸ்ட் - அக்டோபர் 93-(ப 32))

பின்னால் சூத்திரர்களாக அடையாளப்படுத்தியவர்கள் நிலமற்ற உழைக்கும் மக்களை ‘ஆதிசூத்திரன்’ என்று ஐந்தாவது வடிவம் இந்திய சமூகத்தில் பிறப்பெடுத்த விபரங்களை ஆராய்ந்த முதல் அறிஞர் டாக்டர் அம்பேத்கர் என்னும் இந்திய மின்னலே. திப்புசுல்தான் மற்றும் இஸ்லாமிய மன்னர்கள், தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளுக்கு பின்பு பாளையத்துக்காரர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் அரசாண்ட போதும் அவர்களைச் சத்திரியர்களாக இந்திய சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் இந்திய சமூகம் என்று சொன்னால் வேத பொருளில் அது இந்து சமூகம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கில் இந்திய தேசமெங்கும் பிராமணன் - பிராமணரல்லாதோர் என்ற முரண்பாடு கூராக எழுந்தது. அதன் மற்றொரு வெளிப்பாடானது கிறிஸ்தவ மத செல்வாக்கும், இஸ்லாம் மதத்தின் செல்வாக்கும் என்றே புரிய வேண்டும். இந்து மதம் மிகுந்த செல்வாக்கான மதம் என்பது அதன் வர்ண பேதம் இஸ்லாம், கிறிஸ்துவத்தில் எதிரொலித்தது என்று புரிந்து கொள்ள வேண்டும். சூத்திரன் என்று புறந்தள்ளப்பட்டவர்கள் மிகச் சுலபமாக மதம் மாறுவதிலிருந்து எளிதில் தப்பித்து விடலாம் என்ற வாதம் தவறானதென்று இந்திய சமூகம் நிரூபித்தது. அதன் காரணமாக பிராமணரல்லாதோர் இயக்கம் இந்திய தேசத்தில் சூல் பிடித்த போது அதன் தாக்கம் தமிழக, கேரள சமூகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் பண்பாட்டுத் தளத்தில் பரந்து, விரிந்த பாதையினை உருவாக்கிப் பின் வென்றது.

18-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிராமணர், சத்திரிய பிராமணர், வைசிய பிராமணர் என்று பலமான பிராமண சமூகம் சூல் பிடித்திருந்தது. 1854-ம் ஆண்டு மெக்காலே பரிந்துரைப்படி இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கென்று ஆங்கிலம், சமஸ்கிருதம், அரபி இருந்தது.

ஆங்கிலம், சமஸ்கிருதம் இரண்டிலும் தேர்ச்சி பெற்ற வர்ணமான பிராமணர்களே ஆங்கிலேய ஆட்சியின் போதும் உயர்ந்த பதவிகளில் பணியாற்றினர். பிராமணர்களின் செல்வாக்கு தமிழக்தில் முந்தைய அரசர்கள் காலத்திலிருந்தே சூல் கொண்டிருந்தது. முதலாம் இராசராசன் கல்வெட்டு ஒன்று பிராமணர்களின் ஊர்களில் பிராமணர் அல்லாதோர் தனது காணிகளை விற்க வேண்டுமென்று கல்வெட்டு கூறுகிறது. (ஆதார நூல் 562 - 1893 ARE/915 1143:s11V238))

கேரளச் சூழலில் கேரளத்து பிராமணர்களான நம்பூதிரிகள் - கேரளப் பிராமணர்களாகவும் சத்திரியர்களாகவும் பரிணமித்த போதும் - வைசிய பிராமணன் என்னும் வர்க்கம் கேரளத்தில் வளரவில்லை. ஏனெனில் அன்றைய கேரளத்தில் சந்தைகள் கிடையாது. (ஆதாரம் அரவிந்த மகரிசி சத்திரிய தேடல் பக்கம் 67)

கேரளத்து மக்கள் சாதி, பேதமின்றி பொதுவிடத்தில் கூடக்கூடாது - நம்பூதிரிகள் குடும்பத்து மூத்த மகன் மட்டுமே நம்பூதிரிப் பெண்களைதிருமணம் முடிக்க முடியும். சொத்துரிமையில் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இரண்டாம், மூன்றாம் நம்பூதிரி மகன்கள், நம்பூதிரி அல்லாத ஜாதிப் பெண்களையே திருமணம் முடிக்க வேண்டும். நம்பூதிரி குடும்பத்துக்குள் ஏகபோக வாரிசுப் போட்டி வராதபடி கடுமையான சட்டங்கள் அமுலில் இருந்தது. நம்பூதிரிப் பெண்கள் ஒரு விலங்கினை போலவே கல்வி, சமத்துவ உரிமைகளிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர்.

வைசியன் கேரளத்தில் இல்லாத போது கேரளத்து சூத்திரரான நாயர்களே நம்பூதிரிகளின் தோழனாகச் செயல்பட்டனர். 11-ம் நூற்றாண்டில் கேரள பூமியில் நாயர்கள் நில பிரபுக்களாக பதவி உயர்வு பெற்றனர். கேரளப் பிராமணர்களான நம்பூதிரிகள் கேரள சூத்திரரான நாயர்கள் மீது சிறிதளவே தீண்டாமை கொடுமையை பிரயோகித்தனர்.

தமிழகத்தில் பலமான சூத்திரரான சைவ வெள்ளாளரை அவர்ணர்களாக தமிழக பிராமணர்கள் ஒதுக்கி வைத்த போது கேரளத்து சூத்திரர்களான நாயர்களை சவர்ணராக உயர்த்தினர். கேரளத்து நாயர்களுக்கு கருவறைக்கு செல்ல மட்டும் உரிமையில்லை என்ற போதும் தமிழகத்து சூத்திரர்களுக்கு ஏற்பட்ட பேராபத்து நாயர்களுக்கு ஏற்படவில்லை. கருவறை மட்டுமே நாயர்களை அவர்ணர்களாக்கியது. கேரள சமூகத்தில் நாயர்கள் சவர்ணர்களாக பதவி உயர்வு பெற்றது நில உடைமையின் எதிரொலிப்பாகும்.

கேரளத்தில் அவர்ணர்களின் முதலானவர் ஈழுவர் என்றால், தமிழகத்தில் அவர்ணர்களில் முதலானவர் சைவ வெள்ளாளர் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.(நூல் - அரவிந்த மகரிசி சத்திரிய தேடல் - பக்கம் 67)

கேரளத்து நாயர் அறிவு ஜீவிகள் நம்பூதிரிப் பிராமணர்கள் மீது தீராத பகை கொண்டிருந்த போதும் பெரும்பான்மை நாயர்கள் நம்பூதிரிகள் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தனா;.

தமிழகத்தில் பிராமணர், எதிர் பிராமணர் அல்லாதோர் என்ற நிலை வருவதற்கான காரணம் சைவ வெள்ளாளர் என்ற ஆத்ம நேயர் வள்ளலார் அவர்களின் கோரப் படுகொலை பிராமண அல்லாதோர் மனங்களில் தீராத வடுவாக எதிரொலித்தது.

கேரளத்து அவர்ணர்களின் முதலாமானவர்களான ஈழுவர்களுக்கு எதிராகக் கொடூரமான தாக்குதல்கள் நடந்த காலங்களில், தமிழகத்தில் சைவ வெள்ளாளர்களுக்கெதிராக எவ்விதக் கொடுமையையும், தமிழகப் பிராமணர்கள் செய்யவில்லை. வள்ளலாரின் ஒரு சாது, ஒரு மதம், ஒரு கடவுள் என்ற சமரச சன்மார்க்க நெறி பிராமணர்களின் சதுர்வர்ணத்துக்குச் சவாலானது என்பதால் ஜீவ ஜோதியில் கலப்பது என்ற வள்ளலாரின் சன்மார்க்க நெறியை திரித்துத் தீயிலிட்டு தீட்டு நீக்கியது. தமிழகத்து சவர்ணம் - (அரவிந்த மகரிசி சத்திரிய தேடல் பாகம் 1 P 47)

வள்ளலாரின் உயிர் தியாகம் தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் சூல் பிடிக்கக் கருமருந்தானது - சைவ வெள்ளாளர்களும் பொருளாதார பலம் வாய்ந்த தமிழகத்து சூத்திரர்களும் இணைந்து பி.டி. தியாகராயர் T.M. நாயர் மற்றும் பனகல் அரசர் தலைமையில் 1916-ல் தென்னிந்திய நல உரிமை சங்கம் உருவாக்கினர். பிராமணரல்லாதோர் மாணவர் அமைப்பு ஒன்று சென்னையில் 1906-ல் தென்னிந்திய பிற்பட்ட வகுப்பு சங்கம் துவங்கப்பட்டது. வித்தர் ராம் ஷண்டே என்னும் பிரம்ம சமாஜியே இதை உருவாக்கினார். பாம்பே மாநிலத்தைச் சேர்ந்த இவர் அனைத்திந்திய தீண்டாமை எதிர்ப்பு மாநாட்டையும் கூட்டினார். (பெ.சு.மணி - பிரம்ம சமாஜம்) பின் தென்னிந்திய நல உரிமைச் சங்கமே தமிழக பூமியில் பிராமணரல்லாதோர் அதிர்வலைகளை முழங்கியது.

கேரள சூழலில் பிராமணரல்லாதோர் இயக்கத்திற்கு தூபமிட்டவர் நாயர் சமூகத்தைச் சேர்ந்த சட்டம்பி சாமிகளாவார். கேரளத்து நம்பூதிரிகள் நாயர்களுக்கு கருவறை நுழைய அனுமதிக்காத போது, கேரளத்து சூத்திரர்களான ஈழவர் உள்ளிட்ட சாதிகளுக்கு நேர்ந்த கொடுமை கண்டு நாயர்கள் நம்பூதிரிகளிடம் உறவினை விட்டொழித்து ஈழவர் உள்ளிட்ட கேரளத்து சூத்திர மற்றும் பஞசமர்களிடம் உறவு வைக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார் (அதே நூல் பக்கம் 28) ஆனால் காலங்காலமாக ஏகபோக வாழ்வு வாழ்ந்த நாயர்கள் நம்பூதிரிகளுடனான உறவினை விட்டொழிக்க முன்வராததால் சட்டம்பி சுவாமிகள் துவக்கி வைத்த பிராமணர் எதிர் பிராமணரல்லாதோர் இயக்கம் கேரளத்தில் தோல்வியடைந்தது.

தமிழகத்தில் பிராமணரல்லாதோர் இயக்கம் வேர் கொண்டு, நீதிக்கட்சியாய் பரிணமித்தது. சைவ வெள்ளாளர்களும் அன்றைய மரபு வழி பணக்காரர்களும் தொழில்துறை முதலாளியுமான வெள்ளுடை வேந்தர் தியாகராயர் என அழைக்கப்பட்ட பி.டி. தியாகராயர் தேவாங்கர்கள் என்னும் குலத்தைச் சேர்ந்தவர் - நெசவுத் தொழிலை தம் வாழ்க்கைத் தொழிலாக கொண்ட குலம் சென்னை மாநகராட்சி, மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பல பொது நிறுவனங்களில் பங்கேற்றவர். மயிலாப்பூர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு இவர் ரூ.10,000 நன்கொடை கொடுத்திருந்தும் கூட, இந்து வைதீகராக இருந்த தியாகராஜ செட்டியாரை மேடைக்குக் கீழே உட்கார வைத்தனர். (அர்த்தியால் பென்ஸ் “வீரத்தியாகிகள் முழக்கம்” மூல நூல்(ஆதார நூல் - தீண்டப்படாதவர்களால் தீண்டப்படாத புதிய கட்சி பக்கம் 69) பொருளாதார பலம் பொருந்திய சைவ வெள்ளாளரையும், அன்றைய சென்னை மாகாணத்தில் பலமான செட்டியார் இனத்தைக் கூட சூத்திரராக அவமானப்படுத்திய பின் நீதிக்கட்சியின் வேகம் தமிழகத்தில் சூடுபிடித்தது.

பிராமணர்களுக்கும் சைவ வெள்ளாளர்களுக்குமிடையே (சூத்திர பணக்கார இதர ஜாதிகளும்) இருந்த முரண்பாடானது உயர் சாதி இடுக்கினில் தங்களுக்கும் ஒரு இடம் வேண்டுமென்ற யாசக முரண்பாடுதான் என்றும் அது சாதிய மறுப்பு என்ற தீவிர முரண்பாட்டினை நோக்கி இட்டு செல்லவில்லை என்பதால் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் பேராதரவினை இழந்தது.

அதன் காரணமாகவே 1921-ல் நீதிக்கட்சி தலைவர்கள் மதுரை மீனாட்சி கோவிலில் அதன் தலைவர்கள் டி.வி.சுப்பிரமணியன், ஜோசப், கண்ணப்பன் தலைமையில் கோவில் நுழைவு போராட்டம் நடத்தி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் செல்வாக்கினை உருவாக்கத் தொடங்கினர். அதனாலே கடுமையான கல்லடி தாக்குதலுடன் 300 வழக்குகள் நீதிகட்சியினர் மீது பதிவு செய்யப்பட்டது..(G - O - 1227, Pub(Gen - A) Dept - date - 24-4-1958)

பிராமணரல்லாதோர் இயக்கம் நீதிக்கட்சியாய் பரிணமித்த போதும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவின்றி அது குறுகிய காலத்தில் தனது அந்திமத்தை எதிர் கொண்ட போது பலமான சூறைக்காற்றொன்று ஈரோட்டு திசையிலிருந்து தமிழகம் முழுக்க சுழன்று வீசத் தொடங்கியது. தேச விடுதலை நம் மக்கள் விடுதலை என்று சுதந்திர போராட்டத்தை நேர்மையுடன் எதிர் கொண்ட ஒரு தன்னலமற்ற விடுதலை வீரனின் நேர் கொண்ட பார்வையை திருப்பி விட்டது. வ.வே.சு.ஐயர் என்னும் நேர்மையற்ற சனாதன சுதந்திர போராட்ட வாதி என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

3000 ஆண்டுகளுக்கு முன் அகதியாக வந்த பார்ப்பன குழந்தைகளும், சார்வாகமும், சமணமும், பௌத்தமும், சாங்கீயமும் தழைத்தோங்கிய போது அரசாண்ட குலமான பிராமணரல்லாதோர் குல மாணவர்களும் இணைந்து உணவருந்தினால் நாடோடிக் குலத்துக்கு இழுக்காகி விடும் என்ற போது ஈரோட்டு சூறாவளியின் கண்ணுக்குள் செஞ்சூரியனொன்று கொழுந்து விட்டு எரிந்தது. நாடாண்ட குலங்களை நாடோடி குலம் வேட்டையாடுவதா! இங்கே நடந்து வரும் போர் இந்திய சுதந்திர போரா அல்லது வெள்ளையர்களை வெளியேற்றி விட்டு வெள்ளையரின் இருப்பிடத்தில் பார்ப்பண சவர்ணர்களை அமர வைப்பதா என்ற கேள்வியின் பதில் வர்ண போராட்டமே தேவையென்று உணர்ந்தார். ஏனென்றால் அன்றைய சுதந்திர போராட்டத்தின் தலைமை பார்ப்பனர் வசமே இருந்தது. மகாத்மா காந்தியடிகள் என்னும் மகான் பிராமணரல்லாதோர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிராமணர்களின் மூன்றடுக்கு போக எஞ்சியுள்ள அடுக்கு மகாத்மாவுக்கு என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. மகாத்மாவை அவர்கள் வைசிய குலத்தை சேர்ந்தவரென்று பிரகடனப்படுத்தினர். ஏனெனில் சூத்திரர் ஒருவரின் பின்னால் பிராமணர்கள் அணிவகுப்பதை விரும்பாததால் மிக சுலபமாக சமரசம் செய்தனர். ஏனெனில் மகாத்மா இல்லையென்றால் சுதந்திர போர் பின்னோக்கி நகர்ந்து விடுமென்று அவர்கள் உணர்ந்தனர். கேரள பூமியில் மகாத்மா காந்தியடிகள் ஸ்ரீ நாராயண குருவை சந்தித்த பின் “என் மனதில் நீங்காத பல புதிர்கள் நாராயண குரு சுவாமிகளை சந்தித்த பின்னே ஐயங்கள் விலகியது” என்று கேரள சிவகிரி குறிப்பில் காந்தியடிகள் கைப்பட எழுதியுள்ள விபரங்கள் ஆய்வுக்குரியதாகும்.

யங் இந்தியா இதழில் அக்டோபர் 12, 1921 - அன்று மகாத்மா காந்தியடிகள் கருத்துப்படி “நான் என்னை சனாதன இந்து என சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில் வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும் இந்து சாத்திரங்கள் எனப்படுகின்ற அனைத்தையும், அவதாரங்களையும், மறுபிறப்புகளையும் நான் நம்புகிறேன். என் கருத்துப்படி வேத பொருளில் தற்போது பொதுவான பக்குவமற்ற பொருளில் அல்லாமல் நான் வர்ணாசிரம தர்மத்தை நம்புகிறேன். மகாத்மா காந்தி அவர்களின் மேலே கண்ட புரிதல் அம்பேத்கரின் புனே ஒப்பந்த நிலைப்பாட்டிற்கு மிகுந்த சிரமத்தை தந்தது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

மகாத்மா அவர்கள் சுதந்திரப் போரே பிரதானமானதாக முன்வைத்தார். பாரதியாரின் ஆரிய சமாஜ் கருத்துப்படி சாதி, மதம், ஒரு சில்லரை விசயமாக பார்த்தார் என்றே பரிசீலிக்க வேண்டும். பிராமணரல்லாத மகாத்மா சதுர்வர்ணத்தில் தனது அடுக்கு எதுவென்று உணர்ந்த போதும் சுதந்திர தேசமே தனது உயிர் மூச்சாகக் கொண்டவர் என்ற பரிசீலனையே நேர்மையான பரிசீலனையாகும். ஏனெனில் இந்திய சமூக புரட்சியாளர்கள் ஒவ்வொருவரும் ஒடுக்குதலிலிருந்தே எழுவார்கள். அபூர்வமாய் ஒரு வள்ளலார் உருவாக இயலும். அவர்கள் விதி விலக்குகள் என்றே உணரவேண்டும். சனாதன தர்மம் தவறென்று வாதிடுபவர்களை சமூகப் புரட்சியாளர்கள் என்றழைப்பது தவறல்ல என்ற போதும், இன்றைய தமிழ்நாட்டு சூழலில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள்ளே படியடுக்குகள் உள்ளது என்பதை விஞ்ஞானப்பூர்வ பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தமிழகத்தில் எழுந்த விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் எழுச்சியே தேவேந்திர மற்றும் பேரிகை ஜாதியினரிடையே ஒரு சமத்துவ எழுச்சியை உருவாக்கியுள்ளது என்று புரிந்து கொள்ளலாம். விடுதலை சிறுத்தைகள் (பேரிகை சாதியினர்) எழுச்சியானது ‘நிறப்பிரிகை’ இதழ் தந்த பண்பாட்டு தள ஆய்வின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியேயாகும்.

தந்தை பெரியாரின் இயக்கம் ஆரியர் மேலாண்மையினை அப்புறப்படுத்தியதுடன், சைவ, வைணவ தாக்குதலுக்குண்டான தமிழ் சமூகத்தை புதியதொரு பாதையினை தேர்ந்தெடுக்கத் தூண்டியது. தந்தை பெரியாரின் விமர்சனங்கள் கூர்மையான உள்ளர்த்தங்களைத் தாங்கி நின்றது. தமிழ் சாதிகள் மோதுகின்ற காலகட்டத்தில் அச்சமின்றி கருத்து தெரிவித்த அபூர்வ சிந்தனையாளர்... பச்சைத் தமிழன் காமராசு என்ற பெரியாரின் விமர்சனம் பச்சைத் தமிழரால் தலைநகர் அரசியலில் தமிழகம் சார்பான தாக்கத்தை உருவாக்க முடிந்தது. கல்வி கற்காத முதல்வர் காமராஜராலே தமிழகம் கல்வி கற்றது. தந்தை பெரியாரின் கையிலிருந்த பிராமணரல்லாதோர் இயக்கம் விலகி சென்றதனாலே பெரியார் சிந்தனை வேகம் குறை துவங்கியது. கடவுள் மறுப்பாளர், நாத்தீகப் போராளி தமிழ் - மொழி பாதுகாவலர், பெண் விடுதலையாளர் என்று தந்தை பெரியார் தமிழகத்தின் விடிவெள்ளியாக பிரகாசித்துக் கொண்டிருந்த காலத்தில், பிராமணரல்லாதோர் இயக்கத்துக்கு சோதனையாக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் முரண்பாடு பெரியார் இயக்கத்துக்கு மிகுந்த தலைவலியாக இருந்து வருகிறது. திராவிட இயக்கங்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களை சரிசமமாக அங்கீகரித்த போதும், தமிழ் சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற சாதிகளுக்கிடையேயான புரிதலின்மை தமிழ் சமூகத்தின் பின்னடைவுக்கு இட்டுச் செல்கிறது. முதலில் மொழி பற்றிய புரிதலை உணர்ந்து கொள்ள வேண்டும்.

Monday, August 22, 2011

அதிமுக அரசுக்கு எவ்வளவு மார்க்?


கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சமச்சீர்க் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தாமலிருக்க அதிமுக அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்திற்கும் நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கி அதிமுக அரசுக்குப் பாடம் கற்பித்தது.

இப்படி பாடங்களைக் கற்றுக் கொண்ட அதிமுக அரசுக்கு ஆகஸ்ட் 25 ஆம் நாள் 100 வது நாள். இந்த 100 நாள் ஆட்சியில் அதிமுக அரசின் சமச்சீர்க்கல்வி குறித்த செயல்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல் நடைபெறும் காலாண்டுத் தேர்வு சற்று தள்ளிப் போயிருக்கிறது... இதனால் பள்ளி மாணவர்களின் தேர்வுக்குப் பதில் நாம் அதிமுக அரசின் 100 நாள் ஆட்சிக்கு ஒரு தேர்வை வைத்தால் அதிமுக ஆட்சிக்கு எவ்வளவு மார்க் கிடைக்கும்? என்று சிலரிடம் கேட்ட கணிப்பின் அடிப்படையில் கிடைத்த மார்க்குகள் பட்டியல் இது.

சமச்சீர்க் கல்வியைக் காலதாமதப் படுத்தியதால் இந்த ஆட்சிக்கு மொத்தத்தில் 50 சதவிகித மார்க் தடாலடியாகக் குறைந்து போயிருந்தாலும் அதிமுக ஆட்சியின் கீழ்காணும் செயல்பாட்டால்

1. சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள்: 91/100

2. சட்டமன்றத் தீர்மானங்கள் & செயல்பாடுகள்: 44/100

3. அரசு நலத்திட்டங்கள் & செயல்பாடுகள்: 45/100

4. அரசுத் துறைகளை செயல்பட வைத்த ஆற்றல்: 60/100

5. அரசு நிதிநிலை அறிக்கை: 60/100

மொத்தம்: 300/500 = 60%

ஆக அதிமுக அரசு 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பிற்கு முன்னேறியிருக்கிறது. அடுத்து வரும் தேர்வுகளில் அதிமுக ஆட்சி நூற்றுக்கு நூறு மார்க்குகள் எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.