Thursday, September 1, 2011

தமிழகத்து பிராமணரல்லாதோர் இயக்கமும் , கேரளத்து பிராமணர் மறுப்பு இயக்கமும்-3

3. வள்ளலார் ஒழிப்பும், தமிழ்ச் சாதிய எழுச்சியும்


தமிழக வரலாற்றில் பிராமணரல்லாத தமிழ் சாதிகளுக்கு எதிராக கொடூரமான பண்பாட்டுத் தாக்குதலை பிராமண இயக்கம் துவக்கி இருந்தது. முதல் குறி வள்ளலார். அவர்கள் பிரதானமாக குறிவைத்தது, இந்து வர்ணாஸ்ரமத்துக்கு சவால் விடும் தமிழ் சாதிகளைத்தான் 1911-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த ஒரு கொடூர சட்டம் 1914-ல் மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. (இந்திய தண்டனைச் சட்டம் அமுலுக்கு வந்த பின்பு தடா, பொடாவைப் போன்ற சட்டமென்றால் அதன் உள் நோக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும்). தமிழகத்தில பார்ப்பனர்களுக்கு சவாலான கள்ளர், மறவர், ஒட்டர், வன்னியர், கவுண்டர், குறவர் இனங்களைக் குறி வைத்தது.

உசிலம்பட்டியை சுற்றியுள்ள பிரமலைக்கள்ளர்கள் தங்களுக்கென்று 8 கள்ள நாடுகளும் 24 உப கிராமங்களும் உள்ளடக்கிய இனக்குழு கலாச்சாரத்தை கொண்டிருந்தனர். வரலாற்றில் தொன்மையான கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உடையவர்கள் கள்ளர்கள். பிரமலைக் கள்ளர்களின் திருமண உறவு கோயில் வழிபாட்டுடன் தொடர்புடையது, ஒரே கோவிலைக் கும்பிடக்கூடிய மக்கள் பங்காளிகளாகவும், திருமண உறவுக்கென்று ஒரு குறிப்பிட்ட கோவிலை வழிபடுபவர்களை மாமன், மச்சினன் உறவு என்று தொன்மையான திருமண கலாச்சாரத்தை பாப்பாபட்டி, கருமாத்தூர், வாலாந்தூர், நாட்டார்மங்கலமென்று கோவில் வழிபாடு வளர்ந்து தும்மக்குண்டு வரைக்கும் நீள்கிறது. வரலாற்றில் தொன்மையான கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் உடையவர்கள் கள்ளர்கள். விவசாயம் வளராத காலத்தில் வேட்டையாடுதலை தங்களது குலத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதற்கு ஆதாரமாக ‘வளரிதடி’ என்னும் வேட்டைக்கருவி இன்றும் காந்தி மியூசியத்தில் (அருங்காட்சியகத்தில்) காட்சிப் பொருளாக உள்ளது. 1871-ம் ஆண்டு மக்கள் குடிக் கணக்குப்படி விவசாய தொழிலாளர்கள் சாதிகளாக, கள்ளர், மறவர், படையாச்சி, பள்ளி, பள்ளர், நந்தமர், மூப்பர், உடையார், வன்னியர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. கள்ளர்கள் சமூகம், வாழ்க்கையானது ஓர் ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதி (நாடு) கூற்றம் என்னும் பெரும் பிரிவையும் நாடு என்னும் சிறுபிரிவையும் உள்ளடக்கியதாகும். மதுரைக்குக் கிழக்கே நிர்வாகத் தலைமையின் அடிப்படையிலும் வழிபாட்டுரிமையின் அடிப்படையிலும் பிரிக்கப்பட்டுள்ளன கள்ளர்களின் வாழ்விடங்கள் ‘நாடுகள்’ என்றழைக்கப்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் சில ஊர்களே அடங்கியிருக்கும். தலைமைக் கிராமம் ஒன்றும் அதனைச் சார்ந்த் சில துணைக் கிராமங்களும் அடங்கியது ஒரு நாடாகும். நாடுகளின் தலைவர்களாகக் கள்ளர்கள் இருந்தனர். இந்த நாடுகளைச் சேர்ந்த கள்ளர்கள் நாட்டார்’ எனப்பட்டனர். சிவகங்கைக்குக் கிழக்கே 14 நாடுகள் இருந்தன. அவை குன்னங்கோட்டை நாடு, தென்னிலைநாடு, உஞ்சனை நாடு, இரவுசேரி நாடு, செம்பொன்மார் நாடு, கப்பலூர் நாடு, இரும்பா நாடு, சிலம்பா நாடு, வடம்போகி நாடு, தேர்போகிநாடு, கோபால நாடு, ஏழுகோட்டை நாடு, ஆற்றங்கரை நாடு, முத்து நாடு ஆகியவையாகும். இவற்றுள் தென்னிலை நாடு, இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மார் நாடு ஆகியவை தேவக்கோட்டைக்கு அருகில் உள்ளன. (இரா. தேவ.ஆசீர்வாதம். மூவேந்தர் யார்?)

2-4-1920 அன்று மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட கள்ளர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது, 17 கள்ளர்கள் மாண்டனர். கள்ளர்கள் மீது பட்ட குண்டினை இயக்கிய துப்பாக்கி வேண்டுமென்றால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சொந்தமாக இருக்கலாம். ஆனால் துப்பாக்கிக்குள் இருந்த கருமருந்து இந்து வர்ணாசிரமத்துக்கு சொந்தமானது. வரலாற்றில் சவாலாக விளங்கிய ஒரு தமிழ் சாதிக்கு எதிரான கொடூர தாக்குதல் தான் “பெருங்காமநல்லூர் பயங்கரமென்றே உணர வேண்டும்.

மதுரையின் புகழ் பெற்ற வழக்கறிஞரான வெங்கட்ராம ஐயர் வன்முறையின் மூலம் கோவில் நுழைவில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நிறுத்தும்படி தன் கட்சிக்காரரும் நெருங்கிய நண்பருமான முத்துராமலிங்கத் தேவரை அணுகினார். ஆனால் தேவர் அவருக்கு உதவவில்லை. ( தொ.பரமசிவம் - தெய்வங்களும், சமூக மரபுகளும் ப - 97)

அதன் காரணமாகவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்திய தேசிய காங்கிரஸ் பார்ப்பன் ராஜாஜி காங்கிரஸ் என்று ஒதுக்கி தனது பார்வையை வங்க பூமியை நோக்கித் திருப்பினார்.

பிராமணர்களுக்கும், வங்காளிகளுக்கும் இடையே உள்ள வரலாற்று பகையினை அன்றைய சுதேசமித்திரன் பத்திரிக்கைச் செய்தியை பார்த்தாலே உணர்ந்து கொள்ள இயலும்.

“பிரிட்டிஷ் ராஜ்ஜியம்” ஓய்ந்து போனால் பெங்காளிகளா, மகராஷ்டிரர்களா, சீக்கியர்களா யார் ராஜ்ஜியத்தை ஏற்று நிர்வாகம் செய்வார்கள்?.

வங்க மண் இந்து வர்ணாஸ்ரத்தோடு நேரடி மோதலில் ஈடுபடவில்லை என்ற போதும் நீர்த்துப் போன சாதிய மேட்டிடைவாத பூமி என்றே உணரலாம்.

ஆகவே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் எடுத்த நிலைப்பாடு ஒரு புறம் வர்ண எழுச்சி மற்றொரு புறம் இந்திய சுதந்திர போர் ‘எட்கர் தர்ஸ்டன்’ எழுதிய Caste and Tribes of Southern India, ஆய்வின் வெளிப்பாடு கள்ளர், மறவர், அகமுடையார், வெள்ளாளர் என்ற வரலாற்று வடிவ மாற்றம் இந்திய சமூக வரலாற்றில் துல்லியமான ஆய்வாகும். ஏனெனில் வரலாற்றில் தெலுங்கு மன்னர்களால் கள்ளர்கள் குறிவைக்கப்பட்ட போது, கள்ளரிலிருந்து மறவராக உருமாறுவது இயல்பானது. ஏனென்றால் மன்னர்களாலும், அரசினாலும் குறி வைக்கப்படும் மக்கள், ஒன்று அரசினை வீழ்த்திக் கைப்பற்ற வேண்டும் - இல்லையேல் அரசின் கொடிய அரக்க கரங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள உருமாறி ஆக வேண்டும். கள்ளர்கள் மறவர்களாக- உருமாறிய துல்லிய பதிவுகள் கிடைக்காத போதும் - எட்கர் தர்ஸ்டனின் ஆய்வு கள்ளர் என்னும் புள்ளி மறவராக வெளிப்பட்டது என்பதை மறுக்க இயலாது. வரலாற்றில் கள்ளர் என்னும் புள்ளி மறவராக மாறிய பின்னும் கள்ளர், மறவர் கலாசாரத்திற்கு நேர் எதிரான கலாச்சார மக்கள் ஒரு புள்ளியாக எதிர் வருகின்ற போது கள்ளர், மறவர் என்னும் புள்ளியை இதர பகுதி மக்களுடன் தொடர்புப்படுத்த புதியதோர் சேர்க்கைப் புள்ளியாக பரிணமிப்பது ஒரு வகையான அறிவியல் பார்வையாகும். அந்தப் புள்ளியை அகமுடையாராக அறிய முடிகிறது. தமிழகத்தில் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்ற கள்ளர் மறவர், அகமுடையார் என பரவலான அங்கீகாரத்தை மூன்று தரப்பு மக்களிடம் பெற்றுள்ள போது, எட்வர்ட் தர்ஸ்டனின் நான்காவது புள்ளியான வெள்ளாளர், கள்ளர், மறவர், அகமுடையார் என்னும் புள்ளியை நோக்கிய நகராமை எட்கர் தர்ஸ்டனின் ஆய்வில் சிறியதோர் விடுபடுதலையும் - முக்குலத்து மக்கள் அல்லாத தமிழ் சாதிகள் நூற்றுக்கணக்காண புள்ளிகளாக பிரிந்து சென்றதற்கான ஆதாரங்களைப் பண்பாட்டுத் தளத்தில் துல்லிய ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும்.

பசும்பொன் தேவரைப் போன்ற நிலைப்பாட்டினை எடுத்தவர் நெல்லை சீமையில் உதித்த நல் முத்தான வ.உ.சி அவர்கள்.

வ.உ.சி. பற்றிய ஈழ எழுத்தாளர் அ. கெளரி காந்தன் புகழாரமே வ.உ.சி யைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

“சனாதன இந்து” இந்திய தேசியத்துடனும், சைவத் தமிழ் வைதீகத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத, முற்போக்கு ஜனநாயக பகுத்தறிவுடனும் சீர்திருத்த மற்றும் தலமாற்றச் செல் நெறிகளுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட தமிழ்த் தேசியத்தைப் புறந்தள்ளி வைக்காத உறுதி மிக்க இந்திய தேசியவாதியாக தன்னை உருவகப்படுத்திக் கொண்ட வ.உ.சி பற்றிய கெளரி காந்தனின் நிலைப்பாடு வ.உ.சி யின் நேர்மைக்குப் போதுமானது. வ.உ.சியைப் பொறுத்த வரையில் “எந்த ஒரு நூலாக இருந்தாலும் குற்றம் குறை இருக்குமென்றால் புறந்தள்ளத் தயங்கக் கூடாது. கடவுள் எழுதினார் என்ற நூலிலும், பிழை இருக்குமெனில் புறந்தள்ள தயங்கக் கூடாது. சைவத்திலும் அப்படியே, வைணவத்திலும் அப்படியே” என்றார். இன்று தமிழகத்தில் முளைத்திருக்கும் சிலர் வள்ளலாரை உயர் சாதி இடுக்கினிற்கான அவதாரப் புருசராய் நிறுவ இயலாது. வள்ளலாரின் ‘ஒரு சாதி’ கோசம் வேப்பங்காயாய்க் கசக்க சனாதன எதிர்ப்புப் போராளி வ.உ.சியை முன்னிறுத்தி தோல்வியடைந்து வருகின்றனர்.

கேரள பூமியில் தோன்றிய மின்னல்களைப் போல தமிழ்ச் சூழலுக்குத் தகுந்தவாறு இடியுடன் கூடிய மின்னல்கள் தமிழக வானில் மின்னத் தொடங்கியது. இத்தகைய சமூகப் பின்னனியுடன் தமிழகத்தில் திராவிட இயக்கம் எழுச்சி பெற்றது போல கேரள பூமியில் கேரள மக்களின் கல்வி, பண்பாடு, அரசியல் என்ற ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம் (SNDP) தனது பணியினைத் துவக்கியது. “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” அமைப்பின் சமரசமற்ற களப்போராளியான சகோதரன் ஐயப்பன் பின்னால் இந்திய சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புன்னப்புரா வயலார் எழுச்சி - கேரள மண்ணில் தன்னை இந்திய சுதந்திரப்போரில் ஆழமானப் பதிவினைப் பதிவு செய்தது.

தமிழகத்தின் வர்ண விடுதலை சுதந்திரத்திற்கு முன்பே துவக்கப்பட்டும் இன்றுவரை தீர்ந்தபாடில்லை.

கேரளத்தில் சாதி, மத ஒடுக்குதல் அல்லாத சமூகம் உருவானதற்கு பிரதானமான 1924-ல் நடந்தேறிய வைக்கம் போராட்டமே அனைத்து கேரளத்து ஜாதிகளையும் ஒரு குடையின் கீழ் திரட்டியது. வைக்கம் போரினைப் போன்று தமிழகத்தில் தமிழ் சாதிகள் ஒன்றிணைத்த போராட்டம் நிகழவில்லை எனலாம். தமிழ் சாதிகள் ஒவ்வொன்றும் தனித்தனியே போராடி வெற்றியைப் பதிவு செய்தது. இன்றைக்கு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளாக அடையாளப்படுத்தப்படும் ஜாதிகள் பலமான ஜாதிகளாக உருமாறியுள்ளது ஆனால் இன்றைய பலமான.. பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்த போதும் அவைகள் ஒடுக்குதலுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த போது இன்றைய தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக அடையாளப்படுத்தப்படும் சாதிகள் வேடிக்கையாளராக அமர்ந்திருந்தனர். அன்றைய காலமே இன்றைய தலித் சாதியினர் எழுச்சி பெற்றிருக்க முடியும்.

பேரிகை ஜாதியினரான இன்றைய விடுதலை சிறுத்தைகள் போன்ற தலித் போராளிகளுக்கு உந்து சக்தியாக உள்ள இரட்டை மலை சீனிவாசனும், அயோத்தி தாச பண்டிதரும் (1845 -1914) கருத்தியல் மட்டத்திலும் கள மட்டத்திலும் வர்ண விடுதலைக்கான முழக்கத்தை தமிழகத்தில் முதலில் எழுப்பியவர்கள். இரட்டை மலை சீனிவாசன் தனது இதழில் 22-9-1894 பதிப்பில் ஐ.சி.எஸ். தேர்வுகளை இந்தியாவிலும், இங்கிலாந்திலும் ஒரே நேரத்தில் நடத்தும் யோசனையை எதிர்த்து 3412 பேரிகை சாதியினர் கையெழுத்திட்ட மனு ஒன்று தளபதி செகனி வழியாக நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்டது. இந்து அரசர்கள் ஆண்ட பொழுது அவர்கள் அரசியல் பிராமணர்கள் உயர்ந்த பதவிகளைப் பிடித்துக் கொண்டனர். ஆங்கிலேய ஆட்சியிலும் இந்த உயர்ந்த நிலையைக் காப்பாற்ற பிராமணர்கள் இத்தகைய தந்திரங்களைக் கையாண்டு வந்தனர்.

பிராமணரல்லாதோர் உயர் பதவிகளைப் பெறுவதற்கான தகுதிகளை அடைவதற்கு முன்னதாக ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அந்த உயர்ந்த பதவிகளையெல்லாம் தங்கள் ஏகபோகமாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் ஐ.சி.எஸ். தேர்வுகளை ஒரே நேரத்தில் இரு நாடுகளிலும் நடத்த வேண்டுமென பிராமணர்கள் கிளர்ச்சி நடத்தி வருகிறார்கள்.

இரட்டைமலை சீனிவாசனுக்கு நிகரான அயோத்திதாச பண்டிதரின் சுதந்திரப் போராட்ட விமர்சனம்.

“இது வரையில் மதத் துறையில் ஆதிக்கம் வகித்தவர்கள் இனி மேல் அரசியல் துறையில் முந்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.”

இது தியோபிசிக்கல் சபை மண்டபத்தில் காங்கிரஸ் அமைப்பு சம்பந்தமாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண்டிதரும் கலந்து கொண்டார். அக்கூட்டம் முடிந்த பின் அவர் ஆற்றிய உரையினை சுதந்திர இயக்கத்தில் பிராமணர்கள் தலைமையேற்றதின் நோக்கம் பற்றிய பதிவாகும்.

தமிழக வர்ண விடுதலைப்போரில் பேரிகை ஜாதியினர்கள் பிராமண எதிர்ப்பில் நேர்மையாக நடந்து கொண்டனர்.

ஆனால் பிற்படுத்தப்பட்ட சாதிகள் தலித் சாதிகளிடம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. பிராமண ஆதிக்கம் வீழ்ந்த பின்பு தமிழ் மண்ணில் பிற்படுத்தப்பட்டவன் பிராமணனாக தன்னைக் கருதத் தொடங்கினான். பிராமண எதிர்ப்பில் நேர்மையாக நடந்து கொண்ட தலித் மக்களைப் புறந்தள்ளினர்.

கருத்தியல் மட்டத்தில் பேரிகை சாதியினர் (விடுதலை சிறுத்தைகள்) எழுச்சி பெற்ற போது, தேவேந்திர குல மக்கள் கிறிஸ்துவத்தின் உதவி கொண்ட பலமான கல்வி பெற்ற சமூகமாய் எழுந்தனர்.

ராமநாதபுர மண்ணில் உதித்த இம்மானுவேல் தேவேந்திரன், தேவேந்திர மக்களை எழுச்சி பெறச் செய்ய தனது உயிரைத் தியாகம் செய்தார். 33வயதில் தனது உயிரைத் தனது சமூக மக்கள் எழுச்சிக்காக அர்ப்பணித்த இம்மானுவேல் தேவேந்திரன் தமிழகத்து வானில் உதித்த துருவ நட்சத்திரம் என்பதை நேர்மையானவர்கள் ஏற்கனவே செய்வர்.

கேரள மண்ணில் சமூக இயக்கம் சீராக நடக்க வைக்கம் போராட்டம் கேரள மண்ணைத் தயார் செய்தது.

கேரள மண்ணில் பலமான அடர்த்தியான சமூகமாய் ஈழுவ சமூகம் கேரள வரலாற்றில் பட்டியக்கல்லாய் பங்களிப்பு செய்தனர். கேரளம் என்னும் பூமி கடலுக்கடியிலிருந்து சதகமலையாய் வெளியே வந்த போது ஈழ நாட்டினிலிருந்து தென்னைக் குருத்தோடு சதகமலையில் குடியேறியவர்களை ஈழ நாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற புரிதலுடன் ஈழுவன் என்று அழைக்கப்பட்டனர். தென்னைக்கு மலையாளத்தில் கேரம் என்னும் பெயர் உண்டு.

பந்தளம் நாட்டில் பந்தளம் பணிக்கர் வகையறா என்று அழைப்பவர்கள் நிலக்கிழார்களாக வாழ்ந்தனர் என்பதற்கு அடையாளமாக “பாலி” மொழியில் பல செப்பேடுகள் ஆதாரமாய் கிடைத்தது. “குரு நித்ய சைதன்யயதி” போன்றவர்கள் பலமான ஈழுவ நிலப்பிரபு வகையாறாவை சேர்ந்தவர். மூக்கோத்து ஆசான் போன்ற ஈழுவ நிலப் பிரபுக்கள் பௌத்தம் அரசாண்டு வீழ்ந்த பின்பும் இந்து மத மேல் ஆதிக்கத்தின் பின்பும் பலமான நிலப்பிரபுக்களாய் வாழ்ந்தனர் என்பதற்கான அடையாளங்களே.

பௌத்த மதம் வீழ்ந்த போது பௌத்த கோவில்கள் இந்து கோவிலாக மாற்றப்பட்டு கோவிலுக்கான நிலங்களை ஆரியர்கள் - அரசர்கள் உதவியுடன் கைப்பற்றினர். சபரிமலை ஐயப்பனுக்கு சாஸ்தா என்று பெயருள்ளது. சாஸ்தா என்பது புத்தனின் பெயர் அதன் பின்பே பூர்வகுடிகள் கையிலிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டதால் அவர்கள் பின்தங்கினார்கள் என்று உணர முடியும்.

கேரள மண்ணில் ஈழுவர்கள் கையிலிருந்த நிலங்கள் முழுமையாக பறிக்கப்படாமல் சிறிய நில உடைமை சமூகத்தினராய் வாழ்ந்தனர். ஸ்ரீ நாராயண குரு விவசாய குலத்தில் பிறந்தார். கால்நடைகள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. குமாரன் ஆசான் போன்றவர்களிடம் நிலங்கள் இருந்தன.

ஸ்ரீ நாராயண குரு எழுச்சிக்குப் பின்பு சிறிய தொழில்களான கயிறு, ஓடு துவக்கப்பபட்டு 40% ஈழுவ மக்களின் குலத்தொழிலான கள் இறக்குவது நிறுத்தப்பட்டது. “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகம் தந்த கல்வி இயல்பாக ஈழுவர்களை பலம் கொண்டவர்களாக உருவாக்கிய போது கூடவே ஈழுவரல்லாத அனைத்து சாதியினர் கல்வி கற்றனர். தற்போது கேரளாவில் அனைத்து மக்களும் கல்வி கற்றுள்ளனர்.

பொருளாதார பலம் பெற்ற ஈழுவ சமூகம் முந்தைய சமூக ஒடுக்குதலை மறந்து உயர்சாதி பூனூல் அணியத் துவங்கினர். வைசியர் இல்லாத கேரளத்தில் ஓடு, கயிறு தொழில்களைக் கைப்பற்றிய ஈழுவர்கள் தங்களை உயர் ஜாதி எனக் கருதத் தொடங்கினர். வைக்கம் போராட்டம் ஈழுவர்களின் பூனூலை அறுத்தெறிந்தது. தமிழகத்துப் பிற்படுத்தப்பட்ட சாதிகள் சாதிய மேட்டிமை வாதத்தை திராவிட இயக்கங்களும், தேசிய இயக்கங்களும் எதிர்த்த போதும் அவைகளைத் தடுக்கும் ஆற்றலை இழந்து விட்டது. காரணம் பிற்படுத்தப்பட்ட தமிழ் சாதிகளின் பலம் மிருக பலமாகிவிட்டது.

தந்தை பெரியார் சாதியைத் துறந்தவர் என்பதும் திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கமும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு நேர்மையாக நடந்து கொண்டனர் என்பதன் பதிலே 69% பிற்படுத்தப்பட்டவர் இட ஒதுக்கீடு மற்றும் வெண்மணி சம்பவங்கள் போன்றவை.

வைக்கம் போராட்டம் என்பது கேரளத்தில் ஒரு புதிய சூழலை உருவாக்கியது. பொருளாதார பலம் பெற்ற ஈழுவன் இனி எவராலும் ஒடுக்க இயலாது என்ற கனவு நொறுங்கிப்போனது.

மாதவன் வழக்கறிஞர் தடுத்து நிறுத்தப்பட்ட போது தங்களைப் பணிக்கர் என்று இறுமாப்படைந்தவர்கள் இதயத்தில் ஓட்டை விழுந்தது.

கோவிலைச் சுற்றியுள்ள சாலைகளில் ஈழுவர், நெசவாளர்கள், ஆசாரி, வன்னியர், பஞசமர்கள் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானது. (Selected essays - P 9 Mahendra P.Bhatia)

4 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அரிய தகவல்கள் பலவற்றை அறிந்துகொண்டேன் .

நிவாஸ் said...

மிக நல்ல தகவல்கள்

rajendran said...

நல்ல தகவல்கள் நாடறியவேண்டிய தகவல்கள்.

rajendran said...

நல்ல தகவல்கள் நாடறியவேண்டிய தகவல்கள்.

Post a Comment