Saturday, August 27, 2011

தமிழகத்து பிராமணரல்லாதோர் இயக்கமும் , கேரளத்து பிராமணர் மறுப்பு இயக்கமும்-2

2. சாதிய மறுப்பில் பெரியார்., காந்தி...


“தமிழ் மொழி பற்றி, அதன் கலாச்சாரம், வரலாறு பற்றி ஒரு பகுத்தறிவான, சமநிலையான அணுகுமுறையை நாங்கள் உருவாக்க வேண்டியது அவசியம். தமிழ் ஒரு தென்னாசிய மொழி. தமிழ் இலக்கியமும் சமஸ்கிருத இலக்கியமும் சேர்ந்துதான் ஒரு தென்னாசியக் கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கின்றன. தமிழின் தொன்மை குறித்து வெறித்தனமாக பாராட்டுவதோ அல்லது சமஸ்கிருதத்தின் மரபு பற்றி எதிராக எண்ணுவதோ தவறு. உலகத்து மொழிகள் அனைத்தையும் போல, கலாச்சாரங்கள் போலத் தமிழும் ஆதியிலிருந்து வேற்று சக்திகளால் மாற்றமடைந்து வந்திருக்கிறது. தமிழ் தன் தனித்தன்மையையும் பண்பையும் வீரியத்தையும் 2000 வருடங்களாகக் காப்பாற்றியிருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் அது பலவித கலாச்சாரங்களுடன், மரபுகளுடன், சமயங்களுடன் கொடுத்தும், வாங்கியுமிருக்கிறது. இதுதான் அதன் பலம். இதை மனதில் கொண்டு தமிழ்க் கல்விமான்கள் சமஸ்கிருதத்தின் மேன்மையையும் மதிப்பையும் உணர வேண்டுவது முக்கியம். சமஸ்கிருதம் பல்லாயிரம் வருடங்களாகப் புலவர்களின் மொழியாகத் தென்னாசியாவில் இருந்ததோடு இந்து, புத்த, ஜைன மதங்களின் மொழியாகவும் இருந்திருக்கிறது.” (தமிழாசிரியர் ஜார்ஜ் எல்கார்ட், காலச்சுவடு அக்டோபர் 2005 பக்கம் - 52)

தந்தைப் பெரியார், சூத்திரர் - தலித் ஒற்றுமைக்கு முயற்சித்தார். ஆனால் அது நடக்கவேயில்லை. உண்மையில் மண்டல் கமிஷன் அறிக்கையில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. தலித் பிரிவினருக்கும், இதர பிற்ப்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இடையிலான முரண்பாடு எழக்கூடிய கடைசி இடமாகத் தான் தமிழகம் இருக்குமென அவ்வறிக்கை கூறியது. (ஆதாரம் - சித்தாந்தமற்ற அரசியல் அதுவே தமிழகத்தின் துயரம் - ஈழப் பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி (மார்க்சிஸ்ட் ஜீன் 2003, பக்கம் - 43))

திராவிட இயக்கத்தின் பாதையை நாம் திரும்பிப் பார்த்தோமெனில் பிராமணரல்லாத பல சாதிகள் ஒருங்கு சேர்ந்த ஓர் புதிய “வர்க்கம்” அன்றைய சென்னை மகாணத்தில் உருவான மிக முக்கியமான முதன்மையான நிகழ்வினைக் காண இயலும். பிள்ளைமார்கள், நாயர்கள், கம்மா, காப்பு ரெட்டியார்கள் உள்ளிட்ட கூட்டணியாகும். (கார்த்திகேசு சிவதம்பி நேர்காணல் - மார்க்சிஸ்ட் ஜீன் 2003 பக்கம் 39)

சமஸ்கிருதம் ஆரிய மொழி என்ற வாதம் தமிழில் மனோன்மணீயம் நூலினை எழுதிய சுந்தரனார் தம்முடைய பாடலொன்றில் வடமொழியான சமஸ்கிருதத்தை பற்றிக் குறிப்பிடும் போது “ஆரியம்” என்று குறிப்பிடுவதைப் பிடித்து தொங்குகிறார்கள். திராவிட நாகரீகத்தை சேர, சோழ, பாண்டியரோடு முடித்து விடுகின்றனர். கரப்பா, மொகஞ்சதாரோ வடநாட்டில் உள்ளதைச் சுலபமாக மறைத்து விடுகின்றனர். ஆடு, மாடு மேய்ப்பவர்கள் சிறிய கலாச்சாரமானவர்கள் என்பது அவர்களின் தொழிலே சாட்சியாகும். (ஆதாரம் - காலச்சுவடு, அக்டோபர் 2005 - பக்கம் 52) (அழுத்தம் என்னுடையது)

கேரளச் சூழல், தமிழகச் சூழலிலிருந்து மிகுந்த வித்தியாசம் கொண்டது. ஏனெனில் தமிழகத்தின் சமூக விடுதலை இயக்கம் பலம் வாய்ந்த தமிழக சூத்திரர்களான சைவ வெள்ளாளார், செட்டியார் உள்ளிட்ட சாதிகளால் துவங்கி வைக்கப்பட்ட பின் தந்தை பெரியாரின் எழுச்சியே அதனை முன்னெடுத்துச் சென்றது. சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும், தமிழகத்தின் முந்தைய சூழ்நிலையிலிருந்து (ஆத்திக (சைவ + வைணவ) புதியதொரு (நாத்திக) சூழலுக்கு நகர்த்திச் சென்றது. கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு பேரிகையாக எதிரொலித்தது. தந்தை பெரியார் தன்னை சாதி நீக்கம் செய்துகொண்டவர். ராமசாமி நாயக்கர் என்று அழைத்த போது நீதிமன்றத்தின் வாசலில் நின்றிருந்தவர் நீதி மன்றத்துக்குள் செல்லவில்லை. தனது பெயரை ராமசாமி என்றே அழைக்க வேண்டுமென்று அழைத்தவர்களைத் திருத்தினார்.

கேரளச் சூழல் தமிழகத்துக்கு முற்றிலும் வேறானது. கேரளத்தில் அவர்ணர்களில் முதலானவர் ஈழுவர் என்ற போதும் தமிழகத்து அவர்ணர்களின் முதலாமானவரான சைவ வெள்ளாளரைப் போன்று பொருளாதார பலம், கல்வி அறிவு பெற்றவர்கள் கிடையாது. பந்தளம் பணிக்கர் மூர்கோத்து ஆசான் மற்றும் ஆயுர்வேதம் பயின்ற ஈழுவர்கள், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் படைவீரர்களாகப் பணி செய்த ஈழுவர்களே கல்வியறிவு பெற்றிருந்தனர். (ஸ்ரீ நாராயண குரு - மா. சுப்பிரமணியம்) தமிகத்தில் பரவலான கல்வி சாலைகளில் பிராமணர்கள் கல்வி கற்ற போதும், பிராமணரல்லாதோர் சிறிதேனும் கல்வி கற்க வாய்ப்பிருந்தது. கேரளத்துச் சூழல் வேத சாலைகளும் கிறிஸ்துவ மிஷினரிகளுமே ஆதிக்கம் பெற்றிருந்த காலம். கேரளத்து மக்களில் பெரும்பான்மையினர் கல்வி கற்க கடுமையான தடை இருந்தது. நாயர்கள் ஈழுவர்களை ஒடுக்க, ஈழுவர்கள் புலயர்களை ஒடுக்க, புலயர்களுக்கு கீழாக நூற்றுக்கணக்கான உழைக்கும் மக்கள் சாதியினர் இருந்தனர். அடர்த்தியான ஈழுவர் சமூகம் தீயர், சோவாஸ், பணிக்கர், முதலியார் என்று (திருவிதாங்கூர் , மலபார் , கொச்சி) பிரிந்து கிடந்ததோடு ஒருவருக்கொருவர் படி அடுக்குகளைத் தங்களுக்குள் கற்பித்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் படை வீரர்களான ஈழவர்களுக்கு ‘முதலியார்’ பட்டத்தைக் கேரளத்து சவர்ணம் வழங்கியது. முதலியார் பட்டம் பெற்ற ஈழுவன் திருவிதாங்கூர் அரசனிடம் மனு செய்தான். இதர ஈழுவர்கள் தங்களுக்கு கீழானவர்கள் என்று அறிவித்துப் பட்டயம் வழங்க கோரிக்கை வைத்தனர். (ஈழுவன்-சுப்பிரமணிய அய்யர் வருடம் 1906.) சுவாமி விவேகானந்தரின் சொல்படி “அன்றைய கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி” என்றே புரிந்து கொள்ளலாம்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தந்த வெற்றி பிராமணரல்லாதோர் எழுச்சியை உருவாக்கியது. பிராமண ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இராஜாஜி பதவி இழந்த போது ஆச்சாரியாருக்கு சல்யூட் அடித்த கை மாற்றானுக்கு சல்யூட் அடிக்காது என்று பார்ப்பன உயர் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தான். பிராமணர் ஆதிக்கம் பக்குவமாக திராவிட இயக்கங்களால் அப்புறப்படுத்தப்பட்டது. கேரள மறுமலர்ச்சி வரலாற்றில் 1888-ல் அருவிப்புரத்தில் ஸ்ரீ நாராயண குரு துவக்கிய ‘சிவலிங்க பிரதிஷ்டையே கேரள மறுமலர்ச்சி வரலாற்றில் பதியம் போட்ட முதல் பட்டியக் கல்லாகும். பார்ப்பனியத்தின் மீது விழுந்த பெருந்தாக்குதலென்றே வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகின்றனர். மற்றொரு மதிப்பீடு 3000 ஆண்டுகளாக பிழையாக வேதம் கற்பித்தவர்களுக்கு முறையாக வேதம் கற்றுத்தந்த நாளே அருவிப்புர பிரதிஷ்டை என்கிறது ரிக், யஜீர், சாமம், அதர்வனம் நாடோடிகளின் சடங்குப் பாடல்கள். (ஆதாரம் முத்து மோகனின் வேதாந்தத்தின் கலாச்சார அரசியல்).

கேரள பூமியில் ஸ்ரீ நாராயண குரு எடுத்த நிலைப்பாடு அனைத்து கருத்துக்களையும் உள்வாங்குவது, எதிர் நிலை எடுக்காது அனைவரையும் நேசிப்பது... குறிப்பாக உயர் சாதியினர் என்று அறியக்கூடிய மேட்டுக்குடி பண்பாட்டினையும், கலாச்சாரத்தையும் ஒடுக்கப்பட்ட மக்கள் சுவீகரிப்பது. மோதல் போக்கினை தவிர்த்து ஆக்கப்பூர்வமாய்ச் சிதைந்து போன பாதைகளை செப்பனிடுவது என்றே பயணித்தார். கேரளத்து ஈழுவருக்கும் சவணர்களுக்குமிடையே மோதல் போக்கு கலவரமாக நிகழவில்லை. அனைத்து விசயங்களையும் உள்வாங்கிக் கொண்டு தன்னைத்தானே பலப்படுத்திக்கொள்ளும் கொள்கை.

வேதங்கள், உபநிடதங்கள், பிரம்மசூத்திரங்கள், சமஸ்கிருதம் உள்ளிட்ட பிராமணர்களின் அனைத்து அறிவினையும் அபகரித்ததோடு, பின்தங்கிய மக்களின் பிந்தைய கலாச்சாரங்களை விட்டொழித்து ஒவ்வொருவரும் உயர்ந்த கலாச்சாரம் கொண்டவராக உருமாற அறை கூவினார். கள் இறக்கும் தொழிலைக் கைவிட்டு கைத்தொழிலைக் கற்றுக் கொள்ள அறைகூவினார். உடல் தூய்மையினையும், கல்வியுமே பிரதானம் என்று வாழ்விழந்த மக்களை அறை கூவி அழைத்தார். குரு, கள் இறக்கும் தொழிலைக் கைவிட ஈழுவர்களுக்குக் கற்றுத் தந்த கைராட்டை மகாத்மா கண்களில் பட்டபின் மகாத்மாவின் சிந்தனையில் ‘ராட்டை’ ஏகாதிபத்திய எதிர்ப்புக் கருவியானது.

ஸ்ரீ நாராயணகுருவின் அருவிப்புர பிரதிஷ்டை சாதாரண நிகழ்ச்சியன்று. தமிழகத்தின் வள்ளலாருக்கு நேர்ந்தது போன்ற படு பாதக கொலை ஸ்ரீ நாராயணகுருவுக்கு ஏற்படவில்லை. தமிழகத்து பிராமணர்களை விட கேரளத்து பிராமணர்கள் நேர்மையாக நடந்து கொண்டனர். தமிழகத்து பிராமணர்களின் வலுவினைப் போன்று கேரளத்து நம்பூதிரிகள் விளங்கவில்லை. கேரளத்து நமபூதிரிகளின் பலம் கேரளத்து சூத்திரர்களான நாயர்களுடன் கைகோர்த்ததனால் ஏற்பட்ட பலமே. ஸ்ரீ நாராயண குருவின் சிவப்பிரதிஷ்டை பிராமணர்களின் வேதாகம விதிப்படி நடந்தது. சவர்ணரான தங்களைக் கருவறை நுழைய விடாது தடுத்த நம்பூதிரிகளுக்கு அவர்ணர்களான ஈழுவரால் பதிலடி கிடைத்தது சரியென்றே அவர்கள் கருதினர். தங்களால் செய்ய இயலாததை ஈழுவர் செய்ததால் அருவிப்புர சிவபிரதிஷ்டை மீது நாயர்கள் தாக்குதல் தொடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நம்பூதிரிகள் வாங்கித் தந்த கள்ளினை உண்ட சில ஈழுவர்களே அன்று எதிர்ப்பு தெரிவித்தனர் என்ற போதும் ஸ்ரீ நாராயணகுருவின் பின்னால் திரண்டிருந்த சீடர்களும், பொதுமக்கள் ‘சிவபிரதிஷ்டையினை’ பாதுகாத்தனர் (குறிப்பு:-ஸ்ரீ நாராயணகுரு சிவபிரதிஷ்டையினை மன்னன் கேள்விப்பட்டு குருவை அரண்மனைக்கு அழைத்து பிரம்பால் அடித்த போது பிரம்பு அந்தரத்தில் நின்றதாக கூறுவது ஒரு கட்டுக் கதையாகும். குருவைப்பற்றி நூற்றக்கணக்காண கட்டுக்கதைகள் அன்றே பரப்பப்பட்டு இன்று வரை வாழ்ந்து வருகிறது. நான் கடவுளல்ல என்று குரு திரும்ப திரும்ப உரக்கக் கூறினார்)

கேரள பூமியில் ஸ்ரீ நாராயணகுருவைப் பொறுத்த மட்டில் சாதி நிராகரிப்புப் பாதையே குருவின் பாதையாகும். அருவிப்புர சிவப்பிரதிஷ்டைக்குக் கிடைத்த வரவேற்பும், ஒட்டு மொத்த கேரளமெங்கும் உழைக்கும் மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பும் கேரளமெங்கும் புதிய கோவில்களை நிர்மாணிக்கக் குருவினைத் தூண்டியது. அருவிப்புர கோவிலோடு குரு நிர்மாணித்த சபை கேரள பூமியெங்கும் தீவிரமாகச் செயல்பட்டது. திருவிதாங்கூர், கொச்சி, மலபார் என பலவாக, அரசியலாகப் பிளவுபட்டிருந்த கேரள மக்களின் கலை, இலக்கியம், பண்பாடு போன்றவை ஒன்று சேர்ந்தது.

குருவுக்கு பக்க பலமாக கேரளத்து பாரதியார் குமாரன் ஆசானும், நடராஜ குருவின் தகப்பனார் பல்ப்புவும் ஆலமரமாக குருவைப் பாதுகாக்க, கேரளத்து வீதிகளைச் சுலபமாக குரு செப்பனிட்டு சென்றார். கேரள சூழல் தமிழகச் சூழலைப் போன்று ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள் சில மோதல்கள் எழுந்தது. குரு நிர்மாணித்த தலைச்சேரியில் ஈழுவர்களுக்குக் கீழாக வாழ்ந்த அப்பாவி மக்களை ஈழுவர்கள் கோவிலில் நுழைய அனுமதிக்கவில்லை. ஈழுவர்களில் பெரும்பகுதி மக்கள் சனாதன ஈழுவர்களுடன் தொடர்ந்து மோதி வந்தனர். ஸ்ரீ நாராயண குரு சூழ்நிலைகளைக் கவனித்து வந்தார். திரைப்பட நட்சத்திரங்களின் ஆக்ரோஷ செயல்பாடு போன்ற செயல்பாடல்ல குருவின் செயல்பாடு. உணர்ச்சிகளுக்கு இரையாகாது அறிவுக்கே வேலை தந்தார். கோவில்களுக்குப் பதில் கல்விச்சாலைகள் மனிதர்களின் மனதினைப் பக்குவப்படுத்தும் என்ற சிந்தனைக்கு வந்து இருந்தார்.

புரட்சியாளர் ஐயப்பன், என்ற சகோதரன் ஐயப்பன் கேரளத்து ஈழுவர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கினார். சனாதன ஈழுவர்கள் அவரை புலையன் ஐயப்பன் என்று வசைமொழி பாடினர். அவரால் ஈழுவ சாதிக்குத் தீட்டு என்று ‘சாதி தீட்டு’ செய்தனர். ஈழுவ மக்களுக்கு சனாதான ஈழுவர்கள் அறைகூவினர். “சகோதரன் ஐயப்பனுக்கு பெண் தரும் ஈழுவர்கள் சாதி தீட்டுக்கு உள்ளாவார்கள் என்ற மிரட்டல் செய்தியை அனுப்பினர். சனாதான ஈழுவர்களின் மிரட்டல் புரட்சியாளர் ஐயப்பனின் பாதையினை தடுக்க இயலாது போனது. சகோதரன் ஐயப்பன் பின்னால் முற்போக்கு புரட்சிகர சிந்தனை கொண்ட ஈழுவர்கள் அணிவகுத்தனர். ஒருபுறம் குருவின் கேரள அமைதி யாத்திரையும் மற்றொரு புறம் புதியதாய் உருவான ஈழுவ அறிவு ஜீவிகளின் கருத்தியல் பிரச்சாரமும் சகோதரன் ஐயப்பனின் புரட்சிகரப் பயணமும் சனாதன ஈழுவர்களை கேரள வீதிகளிலிருந்து அப்புறப்படுத்தியது. (இடது சாரிகளே கேரளத்தை செப்பனிட்டார்கள் என்று வாதிடுபவர்கள் ஒரு விசயத்தை மறந்து விடுகின்றனர். இடது சாரி சிந்தனையை கேரள வீதியில உலவ விட்டவன் புரட்சியாளர் சகோதரன் ஐயப்பன் என்பதை சுலபமாக மறந்து விடுகின்றனர்” தோழர் பிரகாஷ் காரத்” உள்பட.) கேரள மறுமலர்ச்சி வரலாற்றில் ஆண்ட சாதிகளான நம்பூதிரிகள், நாயர்களை விட மிகுந்த நெருக்குதலை தந்தவர்கள் ஈழுவர்களே.

ஸ்ரீ நாராயண குரு ஈழுவ சமூகத்தினர் ஒற்றுமை பற்றி கேட்ட போது அவர்கள் கடல்புரத்து மண் என்றே கடுமையாக சாடினார். ஏனெனில் கடல்புரத்து மண் ஒன்றொடொன்று இணையாது உபயோகமில்லாதது என்றே பொருள். ஈழவர்களுக்கு எதிராக ஸ்ரீ நாராயண குரு கடுமையான வார்த்தைகளை பல முறை உபயோகித்த வார்த்தைகள் பதிவுகள் வாயிலாக தெரிவது “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகத்துக்கு முந்தைய ஈழுவன் சமூகம், “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகத்துக்கு பிந்தைய ஈழுவன் சமூகம் என்றே பகுத்துப் பார்க்க வேண்டும். “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகம் துவங்குவதற்கு முன் கேரளம் முழுக்க பட்டம் பெற்ற ஈழுவர்களை கணக்கெடுத்தால் விரல்விட்டு எண்ணி விட இயலும். ஆனால் இன்றைய கேரளத்தில் பட்டம் படிக்காத ஈழுவ குடும்பங்கள் அநேகமாக எங்கோ ஒன்று அரிதாகக் கிடைக்கும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஸ்ரீ நாராயண குருவை வெளிப்படையாக புரிந்து கொள்ள நினைப்பவர்கள் அவர் வாழ்ந்த சூழ்நிலையில் கேரள சமூகத்தின் கட்டமைப்பை புரிந்து கொண்டாலே ஸ்ரீ நாராயணகுருவை புரிந்துகொள்ள இயலும். ஏனென்றால் கேரள பூமியில் இன்று ஈழுவனை விட பொருளாதார மற்றும் பண்பாட்டு தளத்தில் சற்று பின்தங்கிய சாதிகளெல்லாம் கேரள பூமியில் ஒடுக்கப்படவில்லை என்றே புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பேரிகை சாதியினர் (தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகளாக அறியப்படுபவர்கள்) கேரள பூமியில் ஒடுக்கப்படாத சாதியென்றே புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலாக கேரளத்தில் ஒடுக்கப்பட்ட தலித் ஜாதியினர் புலயன் என்றே அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் புலயர் சமூகத்தில் பிறந்த அய்யங்காளி (1863-1948) அவர்களே புலயர் சமூகத்தை தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேற அறைகூவல் விடுத்த போராளி ஆவார். எழுதப் படிக்க தெரியாத புரட்சியாளர் அய்யங்காளி அவர்கள் ஒரு பெரும் பட்டாளத்தையே எழுதப் படிக்க தூண்டியுள்ளார். சமரசமற்ற இந்தப் போராளியின் பிறப்பினாலே புலயர் சமூகம் இன்றைய கேரளத்தில் பலமான வர்ணமாக, வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டுமென்றால் தற்போதைய கேரளத்தில் புலயர்களின் பலம் முன்னேறிய சாதிகளின் பலத்தினை போன்றதென்றே புரிந்துகொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்டோர் கல்வி, வேலைவாய்ப்புகளில் புலையர்களின் ஆதிக்கமே கேரளத்தில் அதிகம் ஆகும். புலயர் சமூகத்தின் எழுச்சிக்கு அய்யங்காளி ஒரு புறம் என்றாலும் மற்றொரு புறம் ஸ்ரீ நாராயண குரு என்றே கூறவேண்டும். கேரளத்தில் சவர்ணர்கள் (எதிர்) அவர்ணர்கள் போராட்டம் தீவிரமடைந்த போது ஸ்ரீ நாராயணகுருவைச் சந்தித்த ஈழுவ சமூக இளைஞர்கள் ஈழுவர்களை ஒடுக்குகின்ற நம்பூதிரிகள், நாயர்களை பலி வாங்க வேண்டுமென்றனர். அப்போது ஸ்ரீ நாராயண குரு அந்த இளைஞர்களிடம் கூறியது “முதலில் நீங்கள் புலயர்களை ஒடுக்காமல் இருங்கள்” என்றே கூறினார்.

கேரள பூமியில் ஈழுவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட சமூகமாய் அடையாளப்படுத்தப்பட்ட போதும், கடுமையான தாக்குதலை சந்தித்த சமூகம். “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொச்சியில் நடந்த போது சனாதன நாயர்களின் கடுமையான தாக்குதல் ஈழுவர்கள் மீது நிகழ்ந்தது. “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோக எழுச்சிக்கு பின் ஈழுவர்கள் பலம் பெற்றதை நாயர்கள் உணர மறுத்தனர். அதன் காரணமாக கொச்சி வீதிகளில் சனாதன நாயர்கள் ஈழுவ இளைஞர்களால் கடுமையான தாக்குதலுக்குள்ளானார்கள். ஈழுவர்கள் பலம் பெற்றதை உணர்ந்த நாயர்கள் ஈழுவர்களை சனாதனமாக்கினர். நெய்யாற்றின் கரை ஊருட்டம்பலத்தில் நாயர்கள் ஈழுவர்களின் உதவியுடன் புலயர்களைத் தாக்கினர். அய்யங்காளி அவர்கள் குருவிடம் முறையிட்டார். குரு நேரடியாக உருட்டம்பலம் வந்தார். ஈழுவர்களைக் கண்டித்தார். சாதிய ஒடுக்குதல்களின் போது ஈழுவர்கள் பாத்திரம் பாதிக்கப்பட்ட மக்களின் தோள்தானென்று அறிவுறுத்தினார். நாயர்களிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த நாயர்கள் இறங்கி குருவின் சொல்லுக்கு அடிபணிந்தனர்.

கேரள வீதிகளில் ஸ்ரீ நாராயண குரு கட்டமைத்த பாதைகளில் புலயர் சமூகம் வீறு கொண்டு முன்னேறியது. ஆகவே ஸ்ரீ நாராயண குரு என்னும் புள்ளி காலத்துக்குத் தக்கவாறு முடிவுகளை உருவாக்கி பரந்த சிறகுகளால் கேரளத்து வானத்தை சுத்திகரித்தது. “ஈழுவர்கள் பலம் பெற்றால் கேரள சமூகம் பலம் பெறும்” என்று வெளிப்படையாக ஈழுவர்கள் எழுச்சியை அங்கீகரித்தார். ஏனென்றால் 700 ஆண்டுகளாக புறம் தள்ளப்பட்ட ஒரு சமூகத்தை 25 ஆண்டுகளில் தலை நிமிரச் செய்தாரென்றால் மனித மூளையின் பலம் எத்தனை வசீகரமானதென்றே வியப்படைய முடியும். இன்றைய கேரளத்தில் அனைத்து சாதிகளும் ஈழுவ சமூகத்தின் திருமண உறவையே சுவீகரித்துக்கொண்டனர். கேரள மண்ணில் வைதீகக் கலாச்சாரத்தால் நேரடியாகத் தாக்குண்டவர்கள் ஈழுவர்கள் - நிஷ்காமிய என்பது புரோகிதம் சத்ரியர்களுக்குத் தரும் பண்பாட்டுக் கடமை - யாகங்களை தொந்தரவு செய்யும் மக்களை அழித்தொழிப்பது - நிஷ்காமிய புரோகிதப்படி ஈழுவ சமூக குழந்தைகள் 15 பேரை மார்த்தாண்ட வர்மன் யாகம் என்ற பெயரில் தீயிலிட்டு பொசுக்கிக் கொன்றான். (குறிப்பு - ஸ்ரீ நாராயண குரு பிறந்த வருடத்தை ஒட்டி நிகழ்ந்த சம்பவம் இது. யூதன் ஒடுக்கப்படும்போது ஒரு மோசஸ் உதிப்பது போல ஈழுவ ஒடுக்குதலின் பிறப்பே ஸ்ரீ நாராயண குருவாகும்)

தமிழகத்தில் பிராமணரல்லாதோர் இயக்கம் பலமடைவதற்கு சமூக சூழல் காரணியாக இருந்த போதும் தமிழகத்து வானில் தோன்றிய மின்னல் கீற்று ஒன்று “அய்யா வைகுண்டராய்” அவதரித்த போது தமிழகத்து வானில் வளர்பிறை ஒன்று மலர்ந்திருந்தது.

யூத அறிவே உலகின் சிறந்த அறிவு என்று வாதிடுபவர்கள் இந்தக் காவி உடை தரித்த நாடார் குல யூதரை மறந்துவிட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு 1888 ஆகும். நாடார் குலத்தில் அய்யா வைகுண்டர் பிறந்து வாழ்ந்தது (1809 - 1851) ஆகும். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பிரகடனப்படுத்தியதற்கு 30 வருடங்களுக்கு முன்பாக ‘தொல்புவியினிலடங்கா’ என்று சர்வதேச கீதம் பாடிய யூதனுக்கு நிகரான குலம் நாடார் குலம் என்பதன் அடையாளமே அய்யா வைகுண்டரின் வருகை ஆகும். ‘அன்புக்கொடி’ என்று தெரசா அன்னைக்கு முன்பு மனிதர்களை நேசித்த மகான். முறையினிலடங்கா - என்றார். இறைவனை ஒரு குறிப்பிட்ட வேத நூல்களில் மட்டும் தேடாதே என்றார். இறையினிலடங்கா என்றார். இறைவனைக் கூண்டுக்குள் அடைக்காதே உருவத்துக்குள் மறைக்காதே என்றார். மொழியினிலுமடங்கா- இறைவனுக்கு ஒரு தனி மொழி கிடையாது என்று மறுத்தார். யுகத்தினிலுமடங்கா என்றார். வேதகாலம், கலியுகம், மேலுலகம் என்றும் சொர்க்கம், நரகம் என்ற பிதற்றல்களை தூர எறிந்தார்.

அய்யா வைகுண்டர் பிறந்த பொழுது நாடார் சமூகத்தின் கைகளில் வாளொன்று பிறந்தது. சமரசமற்ற போரில் தடைகளைக் குதிரைகளின் பலம் கொண்டு தகர்த்தெறிந்து வெற்றியை தமிழகத்து போர்க்கலத்தில் பதிவு செய்தது. அய்யா வைகுண்டர் துவக்கி வைத்த ஓட்டப் பந்தயத்தை வென்ற பின்னே நாடார் சமூகம் ஓய்வெடுத்தது. கொடி கண்ட முதல் தமிழன் அய்யா வைகுண்டரே. ..

No comments:

Post a Comment